துணை வேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல், குளறுபடிகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிய துணைவேந்தர் பதவி பற்றி எல்லாம் தினமலர் நாளிதழில் நேற்று கட்டுரை வெளியானது. இதனை தொடர்ந்து மின்னஞ்சலில் வந்த கருத்துக்கள்…

 

பட்டங்கள் விற்கும் இடமாக பல்கலைகள்

இன்றைய சூழ்நிலையில் துணைவேந்தர், பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் போன்ற பணியிடங்கள் படித்த தகுதி, திறமை உள்ள சாதாரண குடும்பத்தினருக்கு எட்டாக்கனியாக போய்விட்டது. பணம் இருந்தால் தான் பதவிகள் கிடைக்கின்றன. ஊழல் துறையாக கல்வி மாறிவிட்டது. ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வு போல் உதவி பேராசிரியர் நியமனத்திலும் போட்டி தேர்வு முறை கொண்டு வரவேண்டும். அவர்கள் பி.எச்டி., நெட், ஸ்லெட் போன்ற கூடுதல் கல்வித் தகுதிக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றலாம்.ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களை துணைவேந்தர் அளவில் நிரப்பப்படுவதால் ஊழல், லஞ்சத்திற்கு வழி வகுக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பிஎச்.டி., ஆராய்ச்சி பட்டம், பணம் இருந்தால் தாராளமாக கிடைக்கும் வகையில் உள்ளது. யு.ஜி.சி., விதிப்படி வழிமுறைகளை கடினமாக்க வேண்டும். மதுரை காமராஜ் பல்கலையில் தற்போது பிஎச்.டி., சேர்க்கைக்கும் நுழைவு தேர்வு பின்பற்றப்படுகிறது. பிற பல்கலைகளும் இதை பின்பற்ற வேண்டும்.

— முனைவர் வெங்கடேசன், வழக்கறிஞர், மதுரை.

விண்ணப்பிப்பதற்கு கட்டுப்பாடு தேவை

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 100 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். துணைவேந்தர் தேர்வும் இழுபறியாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 10 பேருக்கு மேல் விண்ணப்பித்தாலே பெரிய விஷயம். ஆனால் இப்போது போட்டி அதிகமாகி விட்டது. இது ஆரோக்கியமானது தான் என்றாலும், து.வே., பதவிக்கு தகுதிகளை அதிகப்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகமாக்க வேண்டும். இதன்மூலம் தகுதியானவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்படும். மேலும் ஒரு துணைவேந்தர் பதவி காலியாகும் ஆறு மாதங்களுக்கு முன்பே, புதியவருக்கான நியமன நடைமுறைகளை துவங்க வேண்டும். இதன்மூலம் பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதை தவிர்க்க முடியும்.

-என். பழனிச்சாமி, ஓய்வு பெற்ற பேராசிரியர், திண்டுக்கல்.

நல்ல பல்கலை நல்ல சமூகம்

தேடல் குழு தேர்வு செய்யும் மூன்று பேருக்கு நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு துணைவேந்தர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இது போதாது. அவர்களுக்கு எழுத்து மற்றும் நிர்வாகம் அடிப்படையிலும் தேர்வு வைக்க வேண்டும்.கல்வி தகுதி, அனுபவம், நன்னடத்தை சார்ந்த தனி தேர்வும் வைத்து அதன் மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். இவர்களை நேர்மையான கல்வியாளர்கள் மூலம் தேர்வு செய்து, அதை சம்மந்தப்பட்ட பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் அறிந்து, அவர்களிடமும் கருத்துக்கேட்டு முடிவு எடுக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக அரசியல் தலையீடு, சிபாரிசு இருக்க கூடாது. அப்போது தான் சிறந்த பேராசிரியர்களும், மாணவர்களும், சிறந்த நாடும் வீடும் உருவாகும். நல்லதொரு பல்கலை நல்லதொரு சமூகத்தின் அடையாளம். இந்த கனவை நிறைவேற்றுவோம்.- ராஜ்குமார் விஜயா, சமூக ஆர்வலர், மதுரை.

கருத்து சொல்லுங்கள்! : தமிழக உயர்கல்வித்துறையில் ஊறிப்போயிருக்கும் ஊழலை ஒழிக்க என்ன வழி? முறைகேடுகளின் கூடாரங்களாக மாறிப்போன பல்கலைக்கழகங்களை, கல்விக்கோயில்களாக மாற்ற என்ன வழி? பல்கலை வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்வது எப்படி? வாசகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பட்டதாரிகள், மாணவர்கள் கருத்துக்களை ‘உயர் கல்விக்கு உயிர் கொடுப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை 625 016’ க்கு அனுப்பலாம்