* கல்வியாளர்கள் அதிர்ச்சி

* நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆயத்தம்

சேலம்: பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வரும் புதிய ஆணையத்தால் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி சீரழியும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி), இந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டம் தயாரித்தல், நிதி ஆதாரம் வழங்குதல் போன்ற முக்கிய பணியினை மேற்கொண்டு வருகிறது.

தேசிய அளவில் ஒரே அமைப்பாக இருந்தாலும், அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்ப சில மாறுதல்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனிடையே பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக, புதிய உயர்கல்வி ஆணையம் ஒன்றை தொடங்க, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் அம்சங்களுக்கு நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஆணையம் அமைக்கப்பட்டால், நாட்டின் உயர்கல்வித்துறை சீரழிந்து விடும் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில துணை தலைவர் பசுபதி கூறியதாவது: அனைத்து அதிகாரங்களும் பெதற்போது, உயர்கல்வியில் புரட்சி என்ற பெயரில், புதிய ஆணையம் அமைக்க முடிவு செய்திருப்பது தேவையற்றது. ஒரு அமைப்பில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமே தவிர, அவற்றை புதிதாக கட்டமைப்பது பாதகமானது. இந்த ஆணையத்தின் 12 பேர் ெகாண்ட குழுவினர் தான், தேசிய அளவில் உயர்கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பர்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் தொடங்கி, ஒரு நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வது வரை அனைத்தும் அவர்களது விருப்பம் போலத்தான் நடக்கும். முக்கியமாக, பாடத்திட்டம் என்பது தேசிய அளவில் ஒரே மாதிரியாக இருக்கும். இதில், அந்தந்த மாநிலம் மற்றும் வட்டாரத்தின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்து மாற்றங்கள் செய்ய முடியாது. இவற்றிலிருந்து பெறப்படும் நிதி, கடன் வாங்குவதை போல தான் இருக்கும். ஆணையத்திற்கு வேண்டியர்களுக்கும் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

அதே சமயம், மாணவர்கள் நலன் சார்ந்த எந்தவொரு திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தாலும், ஆணையத்தை எதிர்பார்த்தே காத்திருக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கட்டணமில்லா கல்வி, ஏழை மாணவர்களுக்கான சலுகைகள், இடஒதுக்கீடு போன்றவை தொடர்பாக, புதிய ஆணைய மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கல்வி புரட்சி என்ற பெயரில், இந்த விவகாரத்தை மேலோட்டமாக பார்க்க கூடாது.

முழுவதுமாக ஆராய்ந்து பார்க்கும் போது, புதிய உயர்கல்வி ஆணையம் சீரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே தான், இதனை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்த ‘ஐபெக்டோ’ சார்பில், டெல்லி உள்பட பல இடங்களில் ஊர்வலம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதனையும் கடந்து புதிய ஆணையம் அமைந்தால், நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு பசுபதி தெரிவித்தார்