வகுப்பறைகளில், பள்ளி வளாகங்களில் அதிகரித்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சிதருகின்றன. ஆசியரை மாணவர் தாக்குகிறார்; மாணவரை ஆசிரியர் தாக்குகிறார். பள்ளி – புத்தகப் பையில் கத்தி எடுத்துவந்து மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியரைத் தாக்கிய சம்பவம்தான் திருப்பத்தூரில் அரங்கேறி இருக்கிறது. காஞ்சிபுரம் ஆசிரியை உமாமகேஸ்வரி வகுப்பறையில் கொல்லப்பட்ட சம்பவமும் சரி, திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் பாபுவுக்கு நிகழ்ந்துள்ள சம்பவமும் சரி, ஆசிரியர்களிடையே ஏற்படுத்தும் உணர்வு ஒன்றே ஒன்றுதான்.. ‘மாணவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ கூடாது என்றால், இப்படித்தானே நடக்கும்’ என்பதே அவர்களது வாதம்.

 

ஆசிரியையின் சுடுசொற்களால் கிணற்றில் விழுந்து மாணவியர் உயிரை மாய்த்துக்கொண்டது முதல், பள்ளிக் குத் தாமதமாக வந்ததற்கான தண்டனையால் (வாத்து போல நடப்பது) மனமுடைந்து உயிரைவிட்ட மாணவப் பிஞ்சு வரை மிகுந்த வருத்தம் தரும் சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம். இவற்றையெல்லாம் எப்படிப் பார்ப்பது?

உண்மையான காரணம் என்ன?

அறிவுச்சுடர் பிரகாசிக்க வேண்டிய வகுப்பறைகள் ரத்தம் கொட்டும் கொட்டடிகளாக மாறியது ஏன்? ஒருபுறம் மாணவர்களின் மன அழுத்தமாக மாறும் இன்றைய பெற்றோரின் அபரிமிதமான எதிர்பார்ப்புகள். மறுபுறம் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கும் வேலைப் பளு. 200 வேலை நாட்களில் முடிக்க வேண்டிய பாடங்களை 120 வேலை நாட்களில் முடித்துவிட வேண்டிய நிர்ப்பந்தம். இது மதிப்பெண்ணுக்கான யுத்தம். பிரதமரே மாணவர்களை ‘தேர்வு யுத்த வீரர்கள்’ (Exam – Warriors ) என்றழைக்கும் அளவுக்கு வகுப் பறையைப் போர்க்களமாக மாற்றிவிட்டோம். நீட் தேர்வு, 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என புதிதுபுதிதாய் முளைக்கும் தேர்வுகள்; இவை தொடர்பான பரபரப்பான விவாதங்கள் என்று கல்விச் சூழல் பெரும் மாற்றங்களைச் சந்தித்துவருகிறது.

ஆசிரியரைக் கத்தியால் குத்துவது, தன்னையே பிளேடால் கிழித்துக்கொள்வது, தற்கொலை, சக மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் சம்பவங்கள் ஒருபுறம் என்றால், பள்ளிக்கூடத்தில் மின்விளக்குகள், சுவிட்சுகளைச் சேதப்படுத்துவது, தண்ணீர்க் குழாய்களை நொறுக்குவது, கண்ணாடி சன்னல்களின் மேல் கல் எறிவது, ஆசிரியர்களின் வாகனங்களைச் சேதப்படுத்துவது எனப் பல்வேறு சம்பவங்களில் சில மாணவர்கள் ஈடுபடு வது உண்டு. விசாரித்தால், ‘ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்று சொல்வார்கள். உண்மையில், பல்வேறு அடுக்குகள் கொண்ட பிரச்சினை இது.

மாறிவரும் அணுகுமுறைகள்

வகுப்பறைப் பிரச்சினைகளின் ஆணிவேரைத் தேடிப்போகும்போது, உடற்கூறியல் முன்வைக்கும் மூன்று அடிப்படைகளைப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்று மரபியல், உடல்கூறியல், நரம்பியல் துறைகளில் நடந்துள்ள ஆழமான சோதனைகளின் முடிவுகள், குழந்தை வளர்ப்பு, கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகள் பற்றிய நமது பழைய அணுகுமுறைகளைத் தகர்த்தெறிபவையாக உள்ளன. உலக அளவில் நரம்பியல் நோபல் அறிஞர் ரோஜர்ஸ்பெரி, கல்வியாளர் இயான் கில்பர்ட் போன்றவர்கள் இதுபோன்ற ஆய்வு முடிவுகளை முன்வைத்திருக்கிறார்கள்.

கட்டி முடிக்கப்படாத அதாவது, முழுமை பெறாத கட்டிடங்களாக மாணவர்களைக் கருதலாம். கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தோடு நாம் அவர்களை ஒப்பிட வேண்டும் என்கிறது நரம்பியல். அதன் வடிவமைப்பு நிபுணர்கள் ஆசிரியர்கள்தான் என்றும், மாணவர்களின் துர்நடத்தைகளுக்குப் பள்ளிச் சூழலே காரணம் என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மை யான காரணம், வளர்ச்சி முழுமை பெறாத முன்மூளைப் புறணி (Prefrontal Cortax) தான் என்கிறது நரம்பியல். பி.எஃப்.சி. என்று அவர்கள் அழைக்கும் இந்தப் பகுதி முழுமையாக வளர்ச்சி காண, 19 வயது வரை ஆகும். முன்மூளைப் புறணிதான் ஒருவர் பெரியவரா சிறார் பருவத்தில் இருப்பவரா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய பாகம். 18 வயது வரை ஒருவர் சிறார்தான் என்று யுனெஸ்கோ கூறுவது இதை அடிப்படையாக வைத்துதான். சரியான குறிக்கோள் நோக்கிய செயலாக்கம், சட்டம், தர்மநியாயங்கள் அறிதல், வேலை நினைவாற்றலைத் தக்கவைத்தல், சமூகக் குழு அங்கீகாரம் இவை அனைத்தையும் தீர்மானிப்பது முன்மூளைப் புறணிதான். அதன் அரைகுறை வளர்ச்சிதான் நடத்தைச் சிக்கல்களைச் சிறார்களுக்கு ஏற்படுத்துகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

மூளையின் இருபுறமும் இருக்கும் உறுப்பு அமைக்டாலா (அமைக்டாலா என்றால் கிரேக்க மொழியில் பாதாம்பருப்பு என்று பொருள். இந்த உறுப்பு, அளவிலும் வடிவிலும் பாதாம்பருப்பைப் போலவே இருக்கும்). இது 20 வயது வரை முழுமை பெறுவது கிடையாது. இந்த மூளைப் பகுதிதான் உங்கள் அன்றாட வாழ்வைக் கால நேரப்படி ஒழுங்குசெய்கிறது. குழந்தையின் முழுமை பெறாத அமைக்டாலாவின் தூண்டல்கள் பலவிதங்களில் வெளிப் படுகின்றன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்க்க மறுக்கப்பட்டால் ஆத்திரப்படுவது, விருப்பமில்லாத உணவுகளைத் தூக்கி வீசுவது, காரணமற்ற அழுகை, ஒவ்வாமை, அச்ச உணர்வு, கவனச்சிதைவு போன்றவற்றுக்கு இந்த அமைக்டாலாதான் முக்கியக் காரணம். சின்ன வெற்றிகளுக்கும் மனம் நிறைந்து பாராட்டுவதே அமைக்டாலா தூண்டுதலைக் கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என்கிறார்கள் நிபுணர்கள்.

ஹார்மோன் பிரச்சினைகள்

தொடர்ந்து வசைகளுக்கும் புறக்கணிப்புக்கும் அவமானங்களுக்கும் ஆளாகிற மாணவர்கள், அடைவதற்குக் கடினமான இலக்குகள் தங்கள் மீது திணிக்கப்படுவதாகக் கருதும் மாணவர்கள் மனஅழுத்த நிலையை எதிர்கொள்ள நேர்கிறது. மரபணுக்கள் இயல்பூக்கம் பெற்று வாசோப்ரெசின் (vasopressin) எனும் ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதே மாணவர் மன அழுத்த நிலை என்று சொல்கிறார்கள். இது கற்றலுக்கு எதிரான ஹார்மோன். இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட சிறார்கள், எதிர்த்துச் செயல்படுதல் அல்லது சூழலில் இருந்து தப்பிக்க முயற்சிசெய்தல் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் fight or flight என்கிறார்கள். எதிர்த்துச் செயல்படுதலைத் தேர்வுசெய்யும் மாணவர் பள்ளிக்குக் கத்தியுடன் வருகிறார். தப்பிவிடுதலே தன் வழி என்று கருதும் மாணவர் தற்கொலை செய்துகொள்வது அல்லது ஊரை விட்டே ஓடுவது என்ற முடிவுக்குவருகிறார். முடிவு எடுப்பதை தள்ளிப்போடும்போதோ அல்லது மனம்விட்டுப் பேச அனுமதிக்கப்படும்போதோ இறுக்கம் விடுபட்டு, இந்த ஹார்மோன் கரைந்துவிடுகிறது. இந்த நிலையில் இருக்கும் மாணவர்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று இரு தரப்பினரும் கவனம் செலுத்துவது அவசியம்.

ஆசிரியர்களுக்கு அணுகுமுறைப் பயிற்சி

குழந்தைகளின் உளவியல் குறித்த அணுகுமுறைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு முறையாகத் தரப்பட வேண்டும். பாடத்தை விடவும் அது அவசியம். உலக அளவில் பள்ளிகளில் நடக்கும் வன்முறைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள், பதின் பருவ மூளை – உளவியல் குறித்த நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு, இங்கு பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு இல்லை. இது வருத்தத்துக்குரிய விஷயம்.

முன்கூட்டியே பாடங்களை முடிப்பது, தேர்வில் வெற்றி விகிதத்தை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட கடுமையான இலக்குகளின் அழுத்தத்தை இன்றைக்கு ஆசிரியர்கள் சந்திக்கிறார்கள். இந்தச் சூழல் ஆசிரியரை அதிகார மையமாக மாற்றிவைத்துள்ளது. ‘பாடத்தைக் கவனி.. பேசாதே’ என்று மாணவர்களிடம் கடுமை காட்டும் சூழலே இருக்கிறது. மாணவர்களை வெறுமனே பார்வையாளர்களாக மட்டுமே கருதும் நிலை அது. மாறாக, ‘பேசு.. நீ என்ன நினைக்கிறாய் என்பதை என்னிடம் சொல்’ என்று மாணவர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றும் அணுகுமுறைதான் மிகமிக அவசியம். பள்ளிச் சூழலில் இன்றைக்கு நிலவும் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு அதுதான்.

வீட்டிலும், சமூகத்திலும் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்று ஆசிரியர் மீது மாணவருக்கு நம்பிக்கை ஏற்படும் சூழல் உருவாக வேண்டும். மாணவர் நாடும் நல ஆலோசகராக இருப்பவரே இன்றைய சரியான ஆசிரியர். ஆனால், நமது கல்விமுறையில் மாணவர்கள் கலந்துரையாடவோ பேசவோ இடமில்லை. ‘மனப்பாடம் செய். எழுதிப்பார். மதிப்பெண் பெறு’ என்று பேசும் நிலையில்தான் ஆசிரியர் – மாணவர் உறவு இருக்கிறது. இதில் மிகப் பெரிய அளவில் மாற்றம் தேவை. இதற்கு நம் கல்வித் துறை தயாரா?

-ஆயிஷா. இரா.நடராசன்,