சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த, சிறப்பு பயிற்சி இன்று துவங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 முடித்ததும், மருத்துவ கல்வியில் சேரும் வகையில், அவர்களுக்கு, தமிழக அரசு, இலவச, ‘நீட்’ தேர்வு பயிற்சியை வழங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில், காலாண்டு தேர்வுக்கு முன், நீட் பயிற்சியை துவக்க, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு, திறன் மேம்பாடு மற்றும் கற்பித்தல் பயிற்சி தரப்பட உள்ளது. இந்த பயிற்சி, சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள, சத்யபாமா பல்கலை வளாகத்தில், இன்று துவங்குகிறது. பயிற்சியை, அமைச்சர் செங்கோட்டையன் துவங்கி வைக்கிறார்.அதேபோல, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 12 வகை தொழிற்கல்வி பாடங்களுக்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. முதல் கட்டமாக, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆசிரியர்களுக்கு, இன்றும், நாளையும் சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளிக்கிறது.

இதுகுறித்து, தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர், ஜனார்த்தனன் கூறியதாவது:தற்போதைய நிலையில், மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு குறித்த தொழிற்கல்வி அவசியம். எனவே, அனைத்து மாணவர்களுக்கும், தொழிற்கல்வியையும் கட்டாய பாடமாக மாற்றலாம்.அரசு புதிதாக அறிவித்துள்ள, தொழிற்கல்வி பாடங்கள் அனைத்துக்கும், ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்