பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்வி கூடங்களில் கணினி மயாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள்ளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பள்ளிகளில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி காலையும், மாலையும் கூட சிறப்பு வகுப்புக்கள் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். அத்துடன் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது ’’ என அவர் தெரிவித்தார்.