தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.

தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா
ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அப்போது,  தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோ நடைபெறும் பாடத்தினைவகுப்பறையில் விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.

இந்த வகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறை அமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார்.

மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்த ‘மாஸ் காப்பியிங்’ முறைகேடு !

நூறு சதவீத தேர்வு, 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், மாநில அளவில் முன்னிலை, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் முன்னிலை என சில தனியார் பள்ளிகளே தொடர்ச்சியாக சாதனை படைக்க சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது. அடுத்து ‘மாஸ் காப்பியிங்’.

தனியார் பள்ளிகளில் ‘மாஸ் காப்பியிங்’ அடிப்பதன் மூலம் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது. ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது, காப்பி அடிப்பது ஆகிய காரணங்களால் தான் சில மாணவர்கள் மட்டும் 200/200 என மார்க் பெற்று மருத்துவம், பொறியியல் படிக்கின்றனர் என சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாஸ் காப்பியிங் முறை நடக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படாமலே இருந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஐடியல் மற்றும் ஆதர்ஷ் தனியார் மெட்ரிக் பள்ளியில் மாஸ் காப்பியிங் நடப்பதாக புகார் கிளம்பி, அது உறுதிப்படுத்தப்பட்டு இப்போது பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இயங்கி வரும் இந்த ஐடியல் மற்றும் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பது வழக்கம். தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளில் இந்த பள்ளிகளுக்கு முக்கிய இடம் உண்டு.

இந்த பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வில் ‘மாஸ் காப்பிங்’ எனப்படும் பிட் அடிக்கும் முறைக்கேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் கிளம்பியது. இதையடுத்து கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின் போது தற்போதைய மெட்டிக்குலேசன் இயக்குநர் கருப்பசாமி இந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆதர்ஷ் என்ற மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிட் அடிப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இதே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் பெற்றிருப்பதும், அந்த விடைத்தாள்களில் கையெழுத்துகள் ஒரே மாதிரி இருப்பதை அரசுத்தேர்வுத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அதாவது 5 மாணவர்களின் தேர்வையும் ஒரே மாணவர் எழுதி இருந்தது உறுதியானது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அந்த பள்ளியில் பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பில் ஈடுப்பட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர் நசீர் உள்பட 4 அரசு ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையத்திற்கான அங்கிகாரத்தை ரத்து செய்ய தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ராதேவி முடிவு செய்து அதற்கான உத்தரவை கடந்த வாரம் அந்த பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

சம்மந்தப்பட்ட ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அருகிலுள்ள வேறு பள்ளியில் வைத்து எழுத வைக்க அரசுத்தேர்வுத்துறை ஏற்பாடுகள் செய்து வருகிறது.

ஈரோடு ஆதர்ஷ் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தரமான கல்வி வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தங்களது பிள்ளைகளை இங்கே சேர்க்கின்றனர். ஆனால் அதிக பணம் கொடுத்து இங்கே படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை இந்த பள்ளியில் எழுத முடியாது. ஏதாவது வேறு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு போய் எழுத வேண்டிய அவலம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம் தரப்பில் விசாரித்தோம். “எங்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கடந்த 7 ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பள்ளியிலேயே பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளை இதுவரை எழுதினர்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பது போன்ற முறைகேட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மை இல்லை. முறைகேடு தொடர்பாக அரசு தேர்வுத்துறை விளக்கம் கேட்டது. எங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு எடுத்து சொன்னோம். ஆனால் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் அதை காதில் வாங்கவில்லை.  பள்ளிக்கல்வித்துறையில் உயர் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதலில் எங்கள் பள்ளியை பலிகடாவாக்கி விட்டனர். 35 ஆண்டுகால கல்விப்பணியில் சிறந்து விளங்கிய எங்கள் பள்ளி மீது கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டனர். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கான தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக ஈரோடு, பவானி போன்ற இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் எங்கள் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்பதாக தேர்வுத்துறையினர் கூறியுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பஸ் மற்றும் வேன்களில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத வைப்போம்,” என்றனர்.

ஆள் மாறாட்டம்,  மாஸ் காப்பியிங் நடப்பதை எல்லாம் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த பள்ளி. இது போன்ற ஊழலையும், முறைகேடுகளையும் முழுமையாய் ஒழிக்க வேண்டும். அதற்கு, கழிவறை வசதியில்லை, குடி தண்ணீர் வசதியில்லை, சுற்றுச்சுவர் வசதி இல்லை, பரிசோதனைக்கூடம் கூட இல்லை என பல ‘இல்லை’களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மேம்படுத்தி தரமான கல்வியை தர வேண்டியது அவசியம்

பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.