கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தை, அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா என்பதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில், நெற்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, கிரீன் பீல்டு கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கான அனைத்து செலவுகளையும், கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், கல்விக் கட்டண நிர்ணயக் குழு தற்போது தங்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது.

தனியார் பள்ளிகளின் சார்பில் வழக்குரைஞர்கள் தங்கசிவன், அருள்மேரி மற்றும் மூத்த வழக்குரைஞர் சேவியர் அருள்ராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு வலியுறுத்துகிறது.

அதனடிப்படையில், ஆசிரியர்களின் நியமனத்தைக் கணக்கிட்டு அக்குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதலான ஆசிரியர்களை நியமிக்கின்றன. இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதைக் கட்டண நிர்ணயக் குழு கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்துள்ள உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இப் பள்ளிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க, கல்விக் கட்டண குழுவுக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தில் குறைந்தபட்ச ஆசிரியர் நியமனம் பற்றிய விவரம் உள்ளது. ஆனால் அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற தனியார் பள்ளிகளில் உள்ள கூடுதல் ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கட்டண நிர்ணயக்குழு பரிசீலிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மாணவர்களின் நலன் கருதி, தனிப்பட்ட மாணவர்களிடம் கவனம் செலுத்தும் வகையில், அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்கள், சிறப்பான ஆசிரியர், மாணவர் விகிதாசாரத்தை அளிக்க விரும்பினால், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

எனவே அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தைப் பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிப்பது உகந்ததாக இருக்கும். எனவே இதை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.