நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், செய்தித்தாளில் வைத்து உணவு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; அவ்வாறு உணவு பண்டங்கள் வைத்து தருவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
செய்தித்தாள் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில், உணவு பண்டங்களை கட்டுதல், மடித்தல் மற்றும் காகிதத்தின் மீது வைத்து கொடுப்பது, உணவின் பாதுகாப்பு தன்மைக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவை தயார் செய்திருந்தாலும், உணவு பண்டத்தை அச்சு காகிதத்தில் மடித்து கொடுப்பதால், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள், எண்ணெய் பலகார கடைகளில், பெரும்பாலும் இத்தகைய காகிதங்களிலேயே, உணவு பண்டங்களை மடித்து கொடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக உடலில் நச்சுத்தன்மை கலந்து விடுகிறது.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிக்கை:
செய்தித்தாள் உட்பட, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உள்ள, “இங்க்’ பல வேதி பொருட்களால் ஆனது என்பதால், அதை உபயோகிக்கும் உணவு பண்டத்தால், உடல் நலத்துக்கு மறைமுகமாக கேடு ஏற்படுகிறது. காகிதங்களில், எழுத்து அச்சில் உபயோகிக்கும் “இங்க்’, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் கலர் மற்றும் ரசாயன பொருட்களின் கலவை என்பதால், உடல் நலம் பாதிக்கப்படும்.
அச்சு காகிதங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் போன்றவை, மறுசுழற்சி முறையில் மீண்டும் பேப்பராக தயாரித்து வரும் போது, ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள், மினரல் ஆயில் போன்றவை உள்ளடங்கி இருக்கும் என்பதால், அஜீரண கோளாறும், கடும் உடல் உபாதைகளும் ஏற்படும். சிறியவர் முதல், பெரியவர்கள் வரை, காகிதங்களில் வைத்த உணவு பண்டங்களை சாப்பிடும் போது, எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, பக்கோடா, பஜ்ஜி, போண்டா, வடை போன்ற எண்ணெய் பலகாரங்களை, செய்தித்தாளில் சுற்றி கொடுக்கும் போது, எண்ணெய் உறிஞ்சுகிறது. இதனால், அச்சு காகிதத்தில் உள்ள “இங்க்’ , எளிதாக உணவு பொருட்களில் ஒட்டிக் கொள்கிறது. சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், எண்ணெய் பலகார கடைகள், கேண்டீன்களில், அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உணவு பண்டங்களை வழங்கக்கூடாது.
செய்தித்தாள் உள்பட, காகிதங்களின் மூலம் உணவு பண்டங்களை “பேக்’ செய்து கொடுப்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளின் படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் இருப்பின், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.