சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் புதன்கிழமை நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இதனால், வெளியூர் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகள் எங்கே செல்வது என திக்குமுக்காடிப் போயினர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வாரத்தில 3 நாட்கள் அரை நாள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களைபணிநிரந்தரம் செய்ய முடியாது என தமிழக அரசுஅறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா, மாநிலச் செயலாளர் ராஜா தேவகாந்த் ஆகியோர் தலைமையில் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாரிடம் வேண்டுகோள்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தற்காலிகமாக கல்வி ஆண்டின் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர பணி வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அனைவரும் கோஷமிட்டனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அனுமதி அளிக்கப்பட்ட மாலை 6 மணி தாண்டியும்அவர்களின் போராட்டம் நீடித்ததால் அனைவரும் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம், சிந்தாதிரிபேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆசிரியைகள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதுவெளியூர் ஆசிரியர்கள் தாங்கள் காலை வரை தங்கிக்கொள்கிறோம் என்று போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், போலீஸார் அதைஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வெளியூர் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகள் நள்ளிரவு செய்வதறியாமல் திகைத்தனர். நள்ளிரவு நேரத்தில் எங்கே செல்வது என அவர்கள் திக்குமுக்காடிப் போயினர்.

உதவி செய்தோம்

இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னரும் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை இரவு 7.30 மணிக்கு பின்னர்தான் கைது செய்ய தொடங்கினோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒவ்வொரு இடத்துக்கும் கொண்டு சென்று அடைத்து வைப்பதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரையும் விடுவித்து விடுமாறு அதிகாரிகள் கூறியதால்,11 மணியளவில் அனைவரையும் விடுவித்தோம். கைது செய்யப்பட்ட ஆசிரியைகளை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைத்திருந்தோம்.காலை வரை அவர்கள் அங்கேயே தங்கிக்கொண்டு காலையில் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால் உடனே அங்கிருந்துசெல்ல கூறினோம். மேலும், அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், 2 போலீஸ் வாகனங்களில் ஏற்றி, ஊருக்கு செல்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இறக்கி விட்டோம்” என்றார்