சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத 10க்கும் மேற்பட்ட 
மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் தினத்தில் சென்னை டவுட்டன் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சில மாணவிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பள்ளிக்கு வராத 10 மாணவிகளுக்கு ரூ.2500 அபராதம் விதித்ததோடு, அவர்களை மூன்று நாட்கள் வீதியில் நிற்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆனால், பெற்றோருக்கு உரிய பதில் அளிக்கப் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவிகளிடம் அபராதமாக வசூலிக்கப்படும் ரூ.2500 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று கூறியதால் பெற்றோர் அபராதம் செலுத்த மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத காரணத்தால் அவர்களை வீதியில் நிற்க வைப்பது, பெரிய தொகையை அபராதம் விதிப்பது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.