பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ‘சென்டம்’ மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு

அரசு பொதுத்தேர்வில், ‘சென்டம்’ வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில், தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும் முறையில், பல மாற்றங்கள் வர உள்ளன.

 

கடந்த ஆண்டில், சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த ஆண்டு, இன்னும் கூடுதல் நிபந்தனைகளை கொண்டு வர, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. மதிப்பீட்டு முறையில், ஆசிரியர்கள் கவனமின்றி செயல்படுவதால், அதிக அளவில், ‘சென்டம்’ வழங்கப்படுகிறது.

 

கல்லுாரிகளில் இவர்கள், பிளஸ் 2 மதிப்பெண்களை விட, குறைந்த அளவே கல்வித் திறன் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதனால், மதிப்பீட்டு முறையில் மிக கவனமாக இருந்தால் மட்டுமே, தகுதியான மாணவர்களுக்கு, ‘சென்டம்’ கிடைக்கும்.

 

எனவே, மொழித்தாள்கள் மற்றும் முக்கிய பாடத்தாள்களில், ‘சென்டம்’ வழங்குவதாக இருந்தால், அவர்களின் விடைத்தாளை, பல கட்ட ஆய்வு செய்த பின், மதிப்பெண்ணை இறுதி செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

 

இதற்கான வழிமுறைகள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டத்திலும், கையேட்டிலும் வழங்கப்பட உள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

மாணவர்கள் இடைநிற்றல் : கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது

.

 

தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும்.

 

அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.

 

இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

 

* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.

 

* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.

மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது

தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 

தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், ‘மீசில்ஸ் ரூபெல்லா’ தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், ‘வாட்ஸ் ஆப்’ மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

 

 

 

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், ‘மீசில்ஸ் ரூபெல்லா’ தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

ஒன்பது மாதம் முதல், 15 வயது குழந்தைகள் வரை, அனைவருக்கும், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டம், பிப்., முதல் வாரம் துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது. வழக்கமாக, 10 முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, முதல் தவணையும், 16 முதல், 24 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இத்திட்டத்தில் தடுப்பூசி போடப்படும். எந்த குழந்தையும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் வராமல் தடுக்கும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ”மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது குழந்தை களுக்கு கொடிய நோய்களை வராமல் தடுக்கும்,” என்றார்.

 

 

 

உயிருக்கே ஆபத்தாகும் :

 

l மீசில்ஸ் என்பது தட்டம்மை நோய். இது காய்ச்சல், உடல் வலியை ஏற்படுத்தி, உடல் முழுவதும் தடிமனை உருவாக்கும். நோய் வீரியமானால், நிமோனியா ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்

 

l ரூபெல்லா என்பது கர்ப்பிணிகளை தாக்கினால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்பில் ஊனம் ஏற்படும்; கருக்கலைப்புக்கு காரணமாகும். உலக சுகாதார நிறுவன ஆய்வுப்படி, உலகில் ஆண்டு தோறும், ஒரு லட்சம் குழந்தைகள், ரூபெல்லா பாதிப்புடன் பிறக்கின்றன. இதைத் தடுக்க, தடுப்பூசியே ஒரே வழி.

தலைவர் இல்லாத கல்வி கட்டண கமிட்டி மாணவர் சேர்க்கையில் பள்ளிகளுக்கு சிக்கல் !!

தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், கல்வி கட்டண கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


 தமிழகம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகள், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, தமிழக அரசும், நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகள் 
விதித்துள்ளன.எந்த பள்ளியும், கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், கல்வி கட்டணத்தில் பல அம்சங்களை சேர்த்து, பள்ளிகள் தரப்பில் மறைமுக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை தடுக்க, நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வி கட்டண கமிட்டியை, அரசு அமைத்தது.

இந்த கமிட்டி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் செயல்பட்டு வந்தது. இறுதியில், கமிட்டியின் தலைவராக இருந்த, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம், 2015 டிச., 31ல் முடிந்தது. அதன்பின், புதிய தலைவரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘கல்வி கட்டண கமிட்டிக்கு, ஆறு வாரங்களில், தலைவரை நியமிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும், இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டுக்காக, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. ஆனால், கல்வி கட்டண கமிட்டி சார்பில், 2017 – 18ல், புதிய கல்வி ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், மாணவர்களிடம் பள்ளிகளால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே, விரைவில் தலைவரை நியமித்து, குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகிகளும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத்துவம்

‘இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., – ஐ.ஐ.ஐ.டி., உட்பட, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஐ.ஐ.டி.,க்கு மட்டும், இரண்டு கட்ட நுழைவு தேர்விலும், மற்ற நிறுவனங்களுக்கு, முதற்கட்ட நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வு, ஏப்ரலில் நடக்கிறது. இதில், தேர்ச்சி பெறுவோர், சென்னை, ஐ.ஐ.டி.,யால் நடத்தப்படும், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு எழுத தகுதி பெறுவர். அதிலும், தேர்ச்சி பெறுவோர், தரவரிசை பட்டியல்படி, ஆன்லைன் கவுன்சிலிங் மூலம், ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜினியரிங் சேரலாம்.
இதுவரை, ஜே.இ.இ., தேர்வு எழுதும், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, ஜே.இ.இ., மதிப்பெண், 60 சதவீதமும், பிளஸ் 2 மதிப்பெண்ணில்,
40 சதவீதமும் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும்.இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த மாணவர்கள், தங்களது பிளஸ் 2 அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில், அனைத்து மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறுவது அவசியமாகி உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்

NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.

 

 

டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.

 

பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

அனைத்து 1-12 வகுப்பு மாணவர்களையும் EMIS ல் உள்ளீடு செய்யலாம் !!!

தொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

 *EMIS தளம் open ஆகியுள்ளது .
6 முதல் 12 வரை EMIS புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.1-5 வகுப்புகளுக்கு update செய்யலாம்.ஆதார் எண் இணைக்கலாம்

‘ஏரோநாட்டிக்ஸ்’ பாட திட்டம் வெளியீடு

அறிவியல் கல்லுாரிகளில், முதன்முறையாக, ‘ஏரோநாட்டிக்ஸ்’ படிப்பு துவங்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

ஏரோநாட்டிக்ஸ் என்ற, விமான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு, இதுவரை, இன்ஜி., கல்லுாரிகளிலும், பல்கலைகளிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதிலும், குறைந்த இடங்களும், அதிக கட்டணமும் உள்ளதால், பல மாணவர்களால் சேர முடியவில்லை.

ஏரோநாட்டிக்ஸ் துறையில், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பி.எஸ்சி., ஏரோநாட்டிக்ஸ் பட்டப்படிப்பை துவங்க, யு.ஜி.சி., உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்த படிப்புக்கான புதிய பாடத்திட்டம், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பாடத்துக்கு, தரம் வழங்கும், கிரெடிட் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும், கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள் : பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு

மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது.

அதனால் தான், இந்த இரு தேர்வுகளுக்கும், கல்வித் துறை மற்றும் பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில ரேங்க் பெறும் பல மாணவர்கள், மருத்துவம் அல்லது இன்ஜினியரிங்கில் சேர்ந்தாலும், முதல் செமஸ்டரிலேயே, மிக குறைந்த மதிப்பெண் பெறும் நிலை உள்ளது. அவர்களுக்கு, ‘ஓரியன்டேஷன்’ என்ற முன் தயாரிப்பு பயிற்சி வழங்க வேண்டியுள்ளது.இது குறித்து, அண்ணா பல்கலை மற்றும் தனியார் கல்லுாரி ஆசிரியர்கள், தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.இதன்படி, இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் என்றில்லாமல், சிந்தித்து பதில் எழுதும் வகையில், பல கேள்விகள் இடம் பெறும் என, கூறப்படுகிறது.கடந்த ஆண்டு பொதுத்தேர்விலும், இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் முடிந்த அரையாண்டு தேர்வு வினாத்தாளும், இந்த வகையில் தான் அமைக்கப்பட்டிருந்தது. அதே போல், பொதுத்தேர்வு வினாத்தாளும் அமையும் என, கூறப்படுகிறது.

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு !!

கழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு.
பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

 இதையொட்டி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில், கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என, ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுக்கிறது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், மாணவ, மாணவியரிடம் பேசி, கழிப்பறைகள் இல்லாத வீடுகளின் பட்டியலை, ஜன., 18க்குள், ஒப்படைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.