ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெரு மளவில் பயனடைந்து வரு கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா வின் வழிகாட்டுதலின் படி,  2016- 2017ஆம் கல்வி யாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 மாணாக்கர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்திய நாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர்  சந்திரசேகரன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நீட்’ தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.

மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. 
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர,நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதிகிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சென்டம்’ எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில், பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இந்த தேர்வில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, பலகுறுக்கு வழிகளை கடைபிடிப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.பல பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், மதிப்பெண் பட்டியலை பார்த்து, மிகவும் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சியை எட்ட முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கட்டாய சான்றிதழ் கொடுத்து, அவர்களை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில், தேர்ச்சி குறைய வாய்ப்புள்ள, மாணவர்களின் பெயரை, தனியார் கல்வி மையத்தின், தனித்தேர்வர்கள் பட்டியலில் சேர்த்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனால், பல மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத முடியாமலும், பள்ளிக் கல்வியை முடிக்காமலும், இடையில் படிப்பை கைவிடும் அபாயம் உள்ளது.

இது போன்று செயல்படும் பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்ட மேல்நிலை பள்ளி களுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். பத்து மாத வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் விபரங்களை, தற்போது பொதுத்தேர்வுக்கான விபரங்களுடன் சரிபார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.