வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.

வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டில் வெளியிடப்படும்

. இனி வரும் காலங்களில் விளையாட்டில்
எடுக்கப்படும் மதிப்பெண்களும் தேர்வின் போது கணக்கில் எடுக்கப்படும்.

 இதுகுறித்து விளையாட்டுத் துறை செயலர் இன்ஜெட்டி சினிவாஸ் கூறுகையில் “இந்தத் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். இது நம் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை கண்டிப்பாக கொண்டுவரும்“ என்றார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் ‘ஹால் டிக்கெட்’

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட்வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. 

 

இதனால் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தலுக்கு, அவர்கள் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டு, சமீப காலமாக வலுத்துள்ளது.  

 

  ஒரு சில மையங்களுக்கு, ஒரே ஆசிரியர்கள் திரும்பத்திரும்ப செல்கின்றனர். எனவே, பொதுத்தேர்வு ஆசிரியர் நியமன முறையை, மாற்ற வேண்டும் என்று, ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் நடப்பாண்டில், பொதுத்தேர்வு மையத்துக்கான, ஆசிரியர் நியமனத்தில், குலுக்கல் முறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள, தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அது ஏற்கப்பட்ட பின், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்படும். அதன்பின் கலெக்டர், கல்வித்துறை இணை இயக்குனர், ஆசிரியர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், தேர்வு மைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இதற்கான குலுக்கல் நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும், குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பே, தேர்வு மையம் குறித்து தகவல்தெரிவிக்கப்படும். முறைகேடு புகாருக்கு ஆளான தேர்வு மையங்களில், முழுமையாக வீடியோ செய்யப்படும்.

‘டாக்சிகாலஜி’

 

தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் அவை உயிரினங்களின் உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை கற்பிக்கும் படிப்பு, ‘டாக்சிகாலஜி’!

 

நச்சு பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் மற்றும் நச்சுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ‘டாக்சிகாலஜி’ கொண்டுள்ளது. இவைமட்டுமின்றி, வேதியியல், உயிரியல் மற்றும் மருந்தியல் ஆகிய பாடங்களுடன் இணை பிரிவாகவும் இது உள்ளது.

 

 

இத்துறையில், அக்குவாட்டிக் டாக்சிகாலஜி, கெமிக்கல் டாக்சிகாலஜி, மெடிக்கல் டாக்சிகாலஜி, என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி, கிளினிக்கல் டாக்சிகாலஜி, இகோ – டாக்சிகாலஜி, பாரன்சிக் டாக்சிகாலஜி, ஆக்குபேஷன் டாக்சிகாலஜி மற்றும் டாக்சிக்யோமிக்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளடங்கும். பல உட்பிரிவுகளை கொண்டுள்ள மகத்தான துறையாக, ‘டாக்சிகாலஜி’ இருப்பதால் மாணவர்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பாடப்பிரிவை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்வு செய்து படிக்கலாம்.

 

முக்கிய படிப்புகள்

பி.எஸ்சி., டாக்சிகாலஜி அல்லது பயலோஜிகல் சயின்ஸ்

எம்.எஸ்சி., டாக்சிகாலஜி அல்லது என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி

போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ இன் இகோ டாக்சிகாலஜி

பி.எச்டி., டாக்சிகாலஜி அல்லது என்விரான்மெண்ட் டாக்சிகாலஜி

 

குறுகிய கால படிப்பு: டிப்ளமோ இன் அக்குவாட்டிக் இகோலஜி, எக்ஸ்னோபயோடிக்ஸ்

 

தகுதிகள்: இளநிலை படிப்பிற்கு, பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு, தாவரவியல், வேதியியல், விலங்கியல், உயிர் வேதியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், மருந்தகம், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் உயிரியல் போன்ற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், நோயியல், உடலியல், நோய் எதிர்ப்பியல், மற்றும் மரபியல் உள்ளிட்ட துறைகளில் பயின்றவர்களும் ‘டாக்சிகாலஜிஸ்ட்’ ஆக முடியும்.

 

முக்கிய நுழைவுத்தேர்வுகள்: அகில இந்திய முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்-பி.ஜி.,/ ஏ.ஐ.பி.எம்.டி.,), ஒருங்கிணைந்த பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு, டெல்லி பல்கலைக்கழக மருத்துவ நுழைவுத்தேர்வு (டி.யு.எம்.இ.டி.,), தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்வி நிறுவன நுழைவுத் தேர்வு, மருந்தக தேசிய கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நுழைவுத் தேர்வு, பஞ்சாப் மருத்துவ நுழைவுத்தேர்வு, ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் – முதுநிலை நுழைவுத்தேர்வு.

 

முக்கிய கல்வி நிறுவனங்கள்

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி அண்ட் டாக்சிகாலஜி, காஞ்சிபுரம்

சென்டரல் டிரக் ரீசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோ

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டாக்சிகாலஜி ரீசர்ச், லக்னோ

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாகியூடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச், பஞ்சாப்

ஸ்கூல் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஐஐடி., காராக்பூர்

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு

எஸ்.சி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் பயோசயின்ஸ் அண்ட் பயோடெக்னாலஜி ரீசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட், கேளரா

எஸ்.சி.எம்.எஸ்.,டெக்னாலஜி அண்ட் மேனஜ்மென்ட், கொச்சி

பவான்ஸ் நியூ சயின்ஸ் கல்லூரி, ஹைதராபாத்

இன்ஸ்டிடியூட் ஆப் ரீபுரோடக்டீவ் மெடிசன், கொல்கத்தா

கஸ்துரிபா மெடிக்கல் கல்லூரி, மணிப்பால்

 

மரபுவழிக் கல்வி ஏன் மாறாமல் தொடர்ந்து செயல்படுகிறது? சிறப்புக் கட்டுரை

கல்வி : போதாமைகளும் தீர்வும்

மரபுவழிக் கல்வியில் பாடம் கற்பிக்கும் முறைகள் நெடுநாட்களாகவே மாறாமலிருக்கின்றன. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வந்தபோது பட்டறைகளில் தொழிலாளர்கள் குவிக்கப்பட்டனர். அப்போது அறிமுகமாகிய புதிய தொழில் நுட்பங்களைக் கையாளும் அளவுக்கு தொழிலாளர்களை கல்வியறிவு பெற்றவர்களாகத் தயாரிக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கிய பள்ளிகள் அப்போது தொடங்கப்பட்டன. சங்கு ஊதினால் பட்டறைக்கு தொழிலாளர்கள் சென்றதுபோல், மணியடித்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்றனர். ஆங்கிலம், வரலாறு, கணிதம் என்று ஏதோ ஒரு பாடப்பொருள்பற்றி ஒருமணி நேரம் அல்லது ஒரு ‘பீரியட்’ வகுப்பெடுக்கும் ஆசிரியர், அதில் பெரும்பகுதியை நேருக்கு நேராக மாணவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு விளக்கவுரை நல்கியும், மீத நேரத்தில் கரும்பலகையில் எழுதிக் காண்பித்தும்தான் கற்பித்தார். இன்றுவரை அதே முறை தொடர்கிறது. அந்த ஆரம்ப நாட்களோடு ஒப்பிடும்போது, தற்போதைய அன்றாட வாழ்க்கைமுறையில் பிரமாண்டமான மாற்றங்கள் வந்திருக்கின்றன. அப்போது நடந்தும், மாட்டு, குதிரை வண்டிகளில் பயணித்தவர்கள் இப்போது, பேருந்திலும் மோட்டர் சைக்கிள்களிலும் செல்கிறோம். அப்போது விறகு அடுப்பை பயன்படுத்தியவர்கள், இப்போது ‘கேஸ்’ (வாயு) அடுப்பை பயன்படுத்துகிறோம். அப்போது கிணற்றில் தண்ணீர் சேந்திப் பயன்படுத்தியவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே குழாய்மூலம் தண்ணீர் பெறுகிறோம். அப்போது பொழுதுபோக்குக்காக வெளியூர்களில் நடந்த தெருக்கூத்துக்குச் சென்று இரவு முழுதும் விழித்திருந்து பார்த்தவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சி பார்க்கிறோம். அப்போது தூரத்தில் இருப்பவர்களோடு பேச அலைபேசிகள் இல்லை. மின்சார விளக்குகள், குளிர்பதன அறைகள், விமானப் பயணம், இணையம் என்று எவ்வளவோ வியக்கவைக்கும் மாறுதல்கள் தற்காலத்தில் வந்திருக்கின்றன.

 

ஆனால் பள்ளி, கல்லூரிகளில் பாடம் கற்றுக் கொடுக்கும் முறை மாத்திரம் மாறாமலிருக்கிறது. ஆனால் பாடப் பகுதிகள் காலத்துக்கு காலம் மாறியிருக்கின்றன. புதிய தேவைகளுக்கேற்ற வகையில் பாடத் தலைப்புகளும் பாடத் திட்டங்களும் மாறியிருக்கின்றன. செய்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற நவீனத் துறைகளும் பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கற்றுக்கொடுக்கும் முறைகளில்கூட அவ்வப்போது சில மாற்றங்களை முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவற்றால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை. எடுத்துக்காட்டுகளாக ரேடியோவழிக் கல்வி, ஓவர்ஹெட் புரொஜக்டர்கள், பவர்பாயிண்ட் ஸ்லைடுகள், டேப்ரிக்கார்டர்களைப் பயன்படுத்துதல், தொலைதூரக் கல்விமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் நேருக்கே நேர் வழங்கப்படும் மரபுவழிக் கல்வியை பதிலீடு செய்ய இயலவில்லை. எனவே, மரபுவழிக் கல்வி இன்னும் பழைய வழிகளிலேயே தொடர்கிறது.

 

 

 

மரபுவழிக் கல்வி முறை மாறாமலிருப்பதற்கு முக்கியக் காரணம்:

 

மரபுவழிக் கல்வி முறை மாறாமலிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமிருக்கிறது. கல்வி வழங்குவது என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மாத்திரமல்ல. ஆசிரியரும் மாணவரும் முகத்துக்கு முகம் பார்த்துப் பரிமாறிக்கொள்ளும் பல பரிமாணங்களை அது உள்ளடக்கியிருக்கிறது. அனைத்துக் குழந்தைகளுக்குமே அன்னைதான் முதல் ஆசிரியை. குழந்தையை தவழவைக்க, நடக்கவைக்க, பேசவைக்க, விளையாடவைக்க – அனைத்துச் செயல்களையும் கற்றுக்கொள்ள குழந்தை அம்மாவைத்தான் சார்ந்திருக்கிறது. இல்லத்தைத் தாண்டி வெளியுலகத்தில் ஆரம்ப நிலை ஆசிரியரிடம்தான் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. ‘நீ வாடீ’ என்று அழைக்கும் அக்காவிடம் ‘நீ போடீ’ என்று பதில் சொல்லும் குழந்தையின் மழலையை ரசிக்கும் பெற்றோரிடமே, அதே குழந்தை பள்ளியில் சேர்ந்து வீடு திரும்பியபிறகு ‘எங்க மிஸ் வாடீ, போடீ என்றெல்லாம் இனிமேல் பேசக்கூடாது’ என்று சொல்லிவிட்டார்கள் என்று விழிகள் விரியச் சொல்லும்போது, குழந்தையின்மீது ஆசிரியை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நன்கு உணர்கிறோம். ‘மிஸ்’ சொல்வது குழந்தைக்கு வேதவாக்குக்கு நிகரானதாகத் தோன்றுகிறது. நேருக்கு நேர் கல்விப் பரிமாற்றம்தான், கற்பித்தல் வழிகளிலேயே சிறந்த வழி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி, மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பதோடு மாத்திரம் நிறைவடைந்து விடுவதில்லை. அவர்கள்தான் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கிறார்கள். மாணவர்களை நாட்டின் நல்ல குடிமகன்களாக மாற்ற அவர்களால்தான் முடிகிறது. மாணவர்களின் கட்டுக்கடங்காத தன்மையை உணர்ந்து, அனுசரித்து, அவர்களின் சுதந்திரங்களின் வரம்புகளைப் புரியவைப்பவர்களும் ஆசிரியர்கள்தான். சமுதாயத்தில் கூட்டு வாழ்வு வாழ, மாணவர்களின் பள்ளி வாழ்க்கைதான் பரிசோதனைக்கூடமாக இருக்கிறது. கல்வியாளர் பெர்னார்ட் கான்ஃபூ – செய்திக்கும் (Information) அறிவுக்கும் (Knowledge) இருக்கும் வேறுபாட்டை விளக்கியிருக்கிறார். சொற்கள், ஒலி, ஒளி மூலம் அனுப்பும் தகவல்கள், தரவுகள், வடிவங்கள், படங்கள், குறிப்புகள், அபிப்பிராயங்கள், மதிப்பீடுகள் ஆகியவை செய்திகளாகின்றன. செய்திகளைச் சுழலவிடலாம். சேமிக்கலாம். ஒவ்வொரு நபரும் அந்தச் செய்திகளை தங்கள் வரலாறு, சூழ்நிலை, சந்தர்ப்பத்துக்கேற்ப மீட்டுருவாக்கி வெளிப்படுத்துவதுதான் அறிவு. செய்திகள் ஒரே அளவிருந்தாலும், அதிலிருந்து பெறப்படுகிற அறிவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. செய்தி பரிமாறப்படுவது. ஆனால் அறிவு ஈட்டப்படுவது; தேடிப் பெறுவது; பொருத்திக் கட்டமைக்கப்படுவது. நேருக்கு நேர் கற்பித்தல் முறையில் செய்திகளை, அறிவாக இயல்பு மாற்ற மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. செய்திகளை, அறிவாக இயல்பு மாற்றம் செய்யும் பயிற்சி பெற மாணவர்கள் அசையா உறுதியோடு உள்ளத் தூண்டுதல்களும் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் அந்தத் திறமையைப் பெற ஆசிரியர்கள் ஊக்கியாக (Catalyst), தூண்டுவிசையாகச் செயல்படுகிறார்கள். களிமண்ணாக இருந்த தன்னை சிற்பமாக வடிவமைத்த ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் மறப்பதில்லை. நேருக்கு நேர் கற்பித்தலில் இத்தகைய பெருநன்மைகள் இருப்பதால்தான், இத்துணை காலம் கற்பித்தல் முறைகளில் பெரிய மாற்றங்கள் புகுத்தப்படாமல் மரபுவழியே தொடர்கிறது என்று தோன்றுகிறது.

 

 

 

கற்பிக்கும் முறை மாற்றப்படாவிட்டாலும், கல்விப்புலம் பெற்றிருக்கும் மாறுதல்கள்:

 

சுதந்திரத்துக்குப் பின்பு நம் கல்விப்புலம் பெரும் மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. 1950இல் 36 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, 2015இல் 125 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது உலகிலேயே மிக அதிகமான படிப்பறிவில்லாதவர்களைக் (Illiterates) கொண்டிருக்கிற நாடு என்ற சிறுமையை நாம் தாங்கவேண்டியிருக்கிறது. சுதந்திரம் பெற்றபோது நம் நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் 12.2 விழுக்காடுதான். 2011 சென்சஸ் கணக்குப்படி, அது 74.4 விழுக்காடளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேசமயம், சீனாவில் அது 95.1 விழுக்காடளவுக்கு உயர்ந்திருக்கிறது. சுதந்திரத்தின்போது ஆரம்பநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 135000லிருந்து 2011iல் அது 780000ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் தொகை வளர்ந்திருக்கிற அளவுக்கேற்றவகையில் நம் அரசுகளால் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றத்தக்க ஆசிரியர்களைப் பயிற்றுவித்து உள்ளிடவும் இயலவில்லை. அதனால் தனியார்துறையின் உதவி தேவைப்பட்டு, அதுவும் பெறப்பட்டது. அப்படியும் சமுதாயத்தின் கல்விக்கான முழுத் தேவையளவுக்கு, அளிப்பைக் கூட்ட இயலவில்லை. இந்த மாறுதல்களோடு ஏராளமான ஊழல்களும் உள்நுழைந்துவிட்டன. கல்விப்புலத்தில் பால் சார்ந்தும், பொருளியல் சார்ந்தும், சாதிகள் சார்ந்தும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. அதனால் கல்விப் பங்கீடு நியாயமானதாக இல்லை. கல்வியின் தரம் தாழ்ந்துவிட்டது. சலிப்போடு பாடம் நடத்தும் ஆசிரியர்களும், அக்கறையில்லாமல் பாடம் கேட்கும் மாணவர்களும் சந்திக்கும் இடமாக பள்ளிகளும் கல்லூரிகளும் மாறி வருகின்றன. நேருக்கு நேர் கற்பித்தல் முறை மட்டும் தற்போதைய இந்தியாவின் கல்வித் தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை. ஆனால் அதற்கு மாற்றுவழிகளும் வரவில்லை. அதனால் இருக்கிற கல்விமுறையில் பலவிதமான தவறுகளும், ஒழுங்கீனங்களும் உள்நுழைந்துவிட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு இப்போது அரைகுறைக் கல்விதான் கிடைக்கிறது. அவர்களை சுயமாக சிந்திக்கத் தெரியாத, படிக்கத் தெரிந்த தற்குறிகளாக உலவவிட்டிருக்கிறோம். இப்போது நாடு எதிர்நோக்கும் மிகப்பெரிய சிக்கல் ஆண்டுக்கு ஆண்டு அரசுகளுக்கும், குடும்பங்களுக்கும் கல்விச் செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும்நிலையில், மேலும் மேலும் அதிகமான மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவேண்டியிருப்பதுதான்!