பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நாளை நடக்கிறது.

தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், ௨௦௦௪ல் தயாரிக்கப்பட்டு, 2006 முதல் அமலில் உள்ளது. 13 ஆண்டுகளை தாண்டிய இந்த பாடத்திட்டத்தால், தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு, தேசிய தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை.எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச அளவில், மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியாகின. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், அவரிடம் பாடத்திட்டத்தை மாற்றும்படி, ஆசிரியர் சங்கத்தினரும்,கல்வியாளர்களும் மனு அளித்தனர். எனவே, பாடத்திட்டத்தைமாற்ற, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் முன்னாள் இயக்குனர், ஜி.பாலசுப்ரமணியன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும்கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 பாடத்திட்டத்தை மாற்ற நியமிக்கப்பட்டுள்ள, இந்த குழுவின் முதல் கூட்டம், நாளை, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. இதில்,அமைச்சர், செயலர் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பாடத்திட்டத்தை எப்படி மாற்றுவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது, புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க, ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சிகள் தேவை என்பதுகுறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.

B.E., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு :

Posted: 09 May 2017 08:15 PM PDT

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தோர்,இரண்டாம் ஆண்டு, இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜி., கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது.
வரும் கல்வி ஆண்டில், பி.இ., – பி.டெக்., படிப்புகளில், இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே, 17 முதல், ஜூன், 14 வரை, http://www.accet.co.in/,http://www.accet.edu.in/ ஆகிய இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, ஜூன், 14, மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி சேர்க்கைக்கு இதுவரை 20 ஆயிரம் பேர் மனு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளி சேர்க்கைக்காக இதுவரை 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிகழ் கல்வியாண்டில் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை (மே 9) வரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இணைய வழியில் விண்ணப்பங்கள் வரும் 18-ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும்.

விண்ணப்பிப்பதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலர்-மாவட்டக் கல்வி அலுவலர்-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்-உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்-வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு இணைய சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தை போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
இந்த வசதி வரும் 18-ஆம் தேதி வரை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்க சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஏராளமான அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக் கல்வி இல்லை எனக் கூறி, சில ஆசிரியர் சங்கங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக தகவல் பரவியது. இதனால் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் இருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் வழக்கம்போல் தொடரும். பெற்றோர்கள் விரும்பும் பயிற்று மொழியில் மாணவர்களைச் சேர்க்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம்” என்று தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் பணி துவக்கம்.

தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.
தமிழகத்தில், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டது. 
இதன் தலைவராக இருந்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிந்தது. அவர், 2016 – 17ம் கல்வி ஆண்டு வரை, 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்திருந்தார்.இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டியின் புதிய தலைவராக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், புதிய கல்வி ஆண்டுக்கான, கட்டண நிர்ணய பணிகளை துவக்கி உள்ளார். இரு வாரங்களுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகார கடிதம், அடிப்படை கட்டமைப்பு, வரவு – செலவு கணக்குகளை தாக்கல் செய்ய, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. அதன்படி, மே, ௮ முதல், பள்ளிகள் தரப்பில், விபரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,இனி தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம்,புதிய விதிகள் உருவாக்கம்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகிறது. 
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம், மைதானத்தில் நடத்தப்படும். பல ஆண்டுகளாக, பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கம், ஐந்து ஆண்டுகளாக, நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கூட்டு பிரார்த்தனையுடன், அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு மே 30க்குள் அறிக்கை

‘பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, வரும், 30க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை,

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்த பின்னே, அந்த வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆண்டு பொதுத் தேர்வுகள் முடிந்ததை அடுத்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்தவுடன், வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கு முன்னதாக, பள்ளி வாகனங்களை தணிக்கை செய்து, வரும், 30க்குள் அறிக்கை அளிக்குமாறு, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு, பள்ளி வாகனத்தின் பதிவுச் சான்று, ஓட்டுனர் உரிமம், அவரது அனுபவம், காப்புச் சான்று, புகை சான்று, அனுமதிச் சான்று உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகிறது. இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

செய்யப்படும். அதன் அறிக்கையை, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.