நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90ஆயிரம் காலியிடங்கள்

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம்நடத்தியது. 
 கலந்தாய்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது.முதலில் பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 1,481 பேர் சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 162 பேர் சேர்ந்தனர். பின்னர், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நடைபெற்ற சேர்க்கையில் 371 பேர் சேர்ந்தனர். 86,355 மாணவர்கள் சேர்ந்தனர்: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 86,355 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.

பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடத்தப்பட்டது.இதில் 3,708 பேர் சேர்ந்தனர். இறுதியாக, நிரம்பாத அருந்ததியினர் (எஸ்சிஏ) இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 106 பேர் சேர்ந்தனர். கலந்தாய்வில் இடம்பெற்றிருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. இதில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின்89 ஆயிரம் இடங்களும் அடங்கும்.

அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது !!

அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

*பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது – தமிழக அரசு.

*பயோ மெட்ரிக் முறை பெரம்பலூர் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது – தமிழக அரசு.

பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு
மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். 
அனைத்து பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  மேலும், சிறந்த கல்வியாளராக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பிளஸ் 2 வில் சேர்ந்த பின்னர் தேர்வெழுத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்வித்துறைக்காக பல்வேறு மாற்றங்களை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்டமைப்பு, கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொது தேர்வை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், பிளஸ் 1 காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால் மாதிரி வினாத்தாள் வௌியிடப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ- – மாணவியருக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 84 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். சில ஆண்டுகளாக, இந்த விடுதிகளில், 40 சதவீதம் வரை காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், ஒரு காப்பாளர், மூன்று விடுதிகள் வரை கவனித்து வருகிறார். விடுதியை சரியாக நிர்வகிக்க முடியாததால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2014ல், காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதாக அரசு அறிவித்தது; அது, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. இதேபோல, சமையலர், இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, சத்தான உணவும் கிடைப்பதில்லை.

இரவு நேரத்தில் உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவமனை செல்வதற்கும் வழியில்லை. 

எனவே, காலியாக உள்ள விடுதி காப்பாளர்கள், இரவு காவலர், சமையலர் பணி இடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், 41 அரசு கல்லுாரிகள் உட்பட, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் மாணவர்கள், டிப்ளமா இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், சில பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்துள்ளன.இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தின்படி, பழைய பாடத்திட்டத்துக்கு மாற்றான பாடங்களை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான விபரங்களை, www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு

ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் – நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது

அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளைசமர்ப்பிக்கலாம்’ என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது.இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த

நாளான, அக்., 15, குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கானநாளாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. இந்த துறையின் கீழ் செயல்படும்,தேசிய புதிய கண்டுபிடிப்புக்கான அறக்கட்டளை, அப்துல் கலாம் பெயரில்,அறிவியல் விருது வழங்குகிறது.

இந்தஆண்டுக்கான விருதுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தினசரிவாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான கண்டுபிடிப்புகள்; கலாசாரரீதியாக, முன்னோரிடம் புதுமையானவற்றை கற்று, அவற்றை பின்பற்றும் முறை;தங்களுக்கு தெரிந்த, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோர் பற்றிய குறிப்புகள்போன்றவற்றை அனுப்பலாம்.இந்த விருதுக்கு, ignite@nifindia.org என்ற,இ – மெயில் முகவரிக்கு, வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு, ஜனாதிபதி விருது வழங்குவார். இதன்விபரங்களை, nif.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 
பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு ‘ஆன்லைன்’ மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.
”இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”, என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

நாகரிக உடை அணிந்து வர பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுரை*

மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், 
ஆபாச உடைகளை தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.

இவற்றில், அரசு தொடக்க பள்ளிகள், கிராமப்புறங்களில் பள்ளிகள் போன்றவற்றில், பெரும்பாலும் மாணவர்களே பள்ளிக்கு சென்று, வீடு திரும்புவர். நகர்ப்புறம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவியரை அழைத்து வர, பெரும் பாலும், பெற்றோரில் ஒருவரோ அல்லது உறவினரோ பள்ளி செல்வது வழக்கம்.

இப்படி, பள்ளிக்கு செல்லும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவினர்களில் பலர், சரியான உடைகளை அணிந்து செல்வதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.
ஆண்கள், லுங்கியை, கால் முட்டிக்கு மேல் கட்டி செல்வது; அரைக்காலுக்கு மேல் டிரவுசர்கள் அணிந்து செல்வது, அழுக்கான உடைகளை அணிந்து ஒழுக்கமின்றி பள்ளிக்குள் நுழைவதாக புகார்கள் உள்ளன.

 பெண்களில் சிலர் அலங்கோலமாக, மாணவ மாணவியரின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும், உடை அணிந்து செல்வதாகவும் பள்ளிகள் குற்றம் சாட்டி உள்ளன.இதையொட்டி, சில அரசு மகளிர் பள்ளிகளிலும், தனியார் பள்ளி
களிலும், பெற்றோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.’நாகரிகமான உடை அணிந்து வர வேண்டும்.

மாணவ மாணவியருக்கு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில், அழுக்கான, ஆபாசமான உடைகளை அணிந்து வரக்கூடாது.’லுங்கிகளை மடித்து கட்டியும், சிறிய
அரைக்கால் டிரவுசர் அணிந்தும், பள்ளிக்குள் நுழையக்கூடாது’ என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு

திருநெல்வேலி: பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்தாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னரே தேர்வு தொடங்கும் தேதி, முடியும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றைப் பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரத்யேக படிவம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரப்பி பள்ளிகளில் வழங்க மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தில் ஆதார் எண், தந்தையின் செல்போன் நம்பர், மாற்றுத் திறனாளிகள் மாணவர் பற்றிய கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அவை கம்யூட்டரில் ஏற்றப்பட உள்ளன. இதனால் நடைமுறை சிக்கல் வெகுமாக குறைவதாகத் தேர்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.