சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது?

நீட் தேர்வும் அதைத் தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணமும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
பெரும்பாலோனோர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது போலவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரம் மிகவும் உயர்வானது போலவும் கருத்தை திணித்து வருகிறார்கள்.
கணிதம், அறிவியல், புவியியல் பாடத்திட்டங்கள் அனைத்து கல்வி முறையிலும் ஒன்றுதான், சமூக அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள்தான் வேறுபடுகின்றன. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று சொல்பவர்கள், முதலில் அது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் கல்விப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு உறுதுணையாகவும் தக்க ஆலோசனை வழங்கவும் மத்திய அரசால் 1961ம் ஆண்டு NCERT (The National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை National Curriculum Framework (NCM) வெளியிடப்படும். அதாவது தேசிய பாடத்திட்ட வரைமுறை என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில மத்திய அரசின் பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே அமலுக்கு வரும். கடைசியாக 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைமுறை (NCM) வெளியானது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு , NCERT ஒப்புதலுடனே அமல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி 11வது 12வது வகுப்புக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் NCERT க்கு தமிழக அரசு அனுப்பியது. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய துறை சார்ந்த வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, NCERT ன் ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பட்டது. NCERT ன் இந்த ஆய்வறிக்கை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் NCM 2005 வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

அதன் பிறகே தமிழக அரசு நான்கு பாடத்திட்டத்திற்கும் பொதுவான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான NCERT ன், தற்போது நடைமுறையில் இருக்கும் 2005ம் ஆண்டு வரையறைக்கு உட்பட்டு, NCERT ஒப்புதல் அளித்துள்ள பாடத்திட்டத்தை, தரம் குறைந்தது என்று எப்படி கூறலாம். மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லையே. ஒருவேளை தரம் குறைவு என்றால் அது மத்திய அரசின் NCERT தரத்தைத் தானே குறிப்பிடும்.
முத்துக்குமரன் குழு, தமிழ் நாடு பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட சிறந்தது என்று சான்று அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பாடத்திட்டமும் மாற்றத்திற்குரியதே. ஆகையால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு தமிழக அரசு குழுக்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாற்றமும் NCERT ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழக அரசின் பாடத்திட்டம் 2010ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த பாடத்திட்ட மாற்றம், பாடத்திட்டக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆக, தமிழக அரசு NCERT தேசிய ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய மாற்றங்களும் செய்து கொண்டு தான் வருகிறது. தமிழக அரசின் பாடத்திட்ட தரம் சரியில்லை என்பவர்கள் முதலில் மத்திய அரசின் NCERT யிடம் தான் முறையிட வேண்டும்.

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும்அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

விதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்காலகோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்டஅரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

பிளஸ் 2வில் 600 ‘மார்க்’ கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள். – தினமலர்.

 

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், ‘டிப்ளமா’ ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், ‘டிப்ளமா’ கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், ‘பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது’ என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

எட்டாம் வகுப்பு வரை விளையாட்டு வகுப்பே இல்லை… இப்போது யோகா வகுப்பா? – ஓர் அலசல்!

‘மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், உடல் மற்றும் மனம் வலிமை ஏற்படுவதற்கும் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவை வழங்கும் விழாவில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார் முதல்வர். ‘இது இந்துத்துவத்தை பரப்பும் முயற்சி. மோடியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆட்சி நடைபெறுவதற்கான மற்றொரு சாட்சி’ என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர், யோகா கலை பயிற்றுநர், மருத்துவர் ஆகிய துறைகளின் நிபுணர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதிலிருந்து…

“யோகாவில் பல வகைகள் உண்டு. இவர்கள் அதில் எந்த வகையைச் சொல்லித்தரப்போகிறார்கள்? அதோடு இணைந்து மந்திரம் போன்ற விஷயத்தைப் புகுத்தி மதச் சாயம் பூசப்போகிறார்களா? அரசாங்கம் கொடுத்திருக்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான அட்டவணையில், விளையாட்டு வகுப்புகளே இல்லை. உணவு உண்ணும்போதும் சொல்லித்தர வேண்டிய பாடங்கள் குறித்த வழிமுறைகளே ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் விளையாட்டு வகுப்புகளே இருக்கின்றன. அந்த வகுப்புகளும் விளையாட்டுக்கா அல்லது அப்போதும் பாடங்கள் நடத்தலாமா என்பதை ஆசிரியர்களே தீர்மானிக்கிறார்கள். இந்த நிலையில், எந்த நேரத்தில் யோகாவைச் சொல்லித் தரப்போகிறார்கள், இதற்கான பாடத்திட்டம் என்னவாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள், குழப்பங்கள், நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன” என்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியை சுடரொளி.

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அரவிந்தன் சிவகுமார், “இங்கே மொத்த கல்வி அமைப்புமே தவறாக இருக்கிறது. மனப்பாடம் செய்யும் கல்வி முறை, நீட் போன்ற போட்டித் தேர்வுகளால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதை மறைக்கவும், ஏதோ சில தனிப்பட்ட மாணவர்களிடம் இருக்கும் கோளாறு என்பதுபோல, யோகா மூலம் சரிசெய்ய நினைக்கிறார்கள். இந்தக் கல்வி அமைப்பை மாற்றாமல், இதுபோன்ற நடவடிக்கைகள் பயன் தரப்போவதில்லை” என்கிறார்.

”சிறுவயதில்தான் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுடைய வளைந்துகொடுக்கும் தன்மைக்கு ஏற்றார்போல யோகா பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அதற்கென தனியாகப் பாடத்திட்டம் தேவை. அது இன்னும் வரையறுக்கப்படவில்லை. யோகா படித்த பட்டதாரிகளே நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு அவர்களைப் பயன்படுத்தாமல், புதிதாக யாரையாவது தயார்படுத்தினால் யாருக்கும் பயனில்லாமல் போகும். உதாரணமாக, ராம்தேவ் போன்ற சாமியார்களிடம் கொடுக்கப்பட்டால், இதற்கு மதச்சாயம் பூசப்படும்” என்று கவலை தெரிவிக்கிறார், 50 வருடங்களுக்கு மேலாக யோகா பயிற்றுநராக இருக்கும் ஆசன ஆண்டியப்பன்.

2015-ம் ஆண்டு, யோகா தினத்துக்காக, மத்திய அரசின் குறுகிய கால ஒப்பந்த வேலைக்கு விண்ணப்பித்த 771 இஸ்லாமிய யோகா ஆசிரியர்களில் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களே இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து நடக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. மாற்றுக் கருத்துகளை அரசு கவனத்தில் கொள்ளும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

 

அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர்
பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், துவக்க நிலை அங்கீகாரம் பெறுவதோடு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தொடர் அங்கீகாரமும் பெற வேண்டும்.
நிறுத்தி வைப்புபோதிய உள்கட்டமைப்பு வசதியில்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி, கடந்த, 2015ல், மழலையர் பள்ளிகளும்
அங்கீகாரம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், மழலையர் பள்ளி துவக்கப்படுவது, சமீப காலமாக அதிகரித்து உள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வண்ண படங்கள் வரைந்து, ‘ப்ளே ஸ்கூல்’ பள்ளியாக மாற்றி விடுகின்றனர்.இப்பள்ளிகள் நடத்தப்படுவது குறித்து, தொடக்கக்கல்வித்துறைக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை.
யு.கே.ஜி., வரையிலான வகுப்புகள் மட்டுமே இப்பள்ளிகளில் நடத்தப்படுவதால், பெற்றோரும் அங்கீகாரம் குறித்து கேள்வி கேட்பதில்லை.
அலட்சியம்இது குறித்து, தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில், அங்கீகாரம் பெறாதவற்றை மூடுவதற்கே, பல்வேறு தடைகள் வருகின்றன.

நீதிமன்ற ஆணை, அரசியல் தலையீடு உள்ளிட்டவற்றை துணையாக கொண்டு, ஏராளமான எண்ணிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால், அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கவோ, அவற்றை பெறவோ பள்ளிகளும்
அக்கறை காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

‘EMIS’ இணையதளம் முடங்கியது – பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், ‘எமிஸ்’ இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, ‘எமிஸ்’ எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.

 

புதிய முகவரி

 

சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையே, ‘எமிஸ்’ இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு, தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய இணையதள முகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.

 

ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:’எமிஸ்’ திட்டத்தில், மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்க வேண்டும். ஏற்கனவே, ௨௦௧௧ – ௨௦௧௬ வரை, இந்த தகவல்களை இணையதளத்தில் இணைத்துள்ளோம்.

அழுத்தம்

 

தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.

 

அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து, தகவல்களை பதிவேற்றம் செய்ய, அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு, இன்னும் சரி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்

நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி அறிவுரை

நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

கால தாமதம் செய்ததால் ஒரு உயிரை இழந்திருக்கிறோம் என்றும் கூறினார். நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்று திரும்பத் திரும்ப சொன்னதில் ஏமாற்றமே மிஞ்சியது என தெரிவித்த நீதிபதி, நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடர்பாக அக்.6க்குள் விளக்கம் அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.

 

சிபிஎஸ்இ பாடத்தில் 1ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு இந்த அளவுக்கு பாடச் சுமையை கொடுப்பது சரியல்ல என்றும், பாடச் சுமையைக் குறைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விளையாட வேண்டிய வயதில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு குழந்தை பருவத்தை வீணடிக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோன்ற பல காரணங்களுக்காக குழந்தைகள் விளையாடும் நேரத்தை வீணடிக்கிறோம். ஆடிப்பாட வேண்டிய வயதில் குழந்தைகளை மௌனியாக வைத்திருக்கிறோம் என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.

மேலும், புருஷோத்தமனின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி கிருபாகரன், 4 வாரத்தில் இது குறித்து முடிவு செய்யுமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:-

 

எந்தத் துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேலும் உயர்த்திடும் வகையில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறமையோடு சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அதே துறைகளில் மிகுந்த முன்னேற்றம் அடைந்து விளங்கும் வெளிநாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்காக, ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

கலைத் திருவிழா: மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை வெளிக் கொண்டு வரவும், தனித்திறன்களை வளர்க்கவும் 150 வகைப் பிரிவுகளில் மாபெரும் மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து புதுமைப் பள்ளி விருது அளிக்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு 4 பள்ளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். கணினியைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது அளிக்கப்படும். மாவட்டத்துக்கு தலா 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும்.

யோகா வகுப்புகள்: அனைத்துப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், மன அமைதி பெறுவதற்கும், உடல் வலிமை ஏற்படுவதற்கும் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்.

பள்ளி கல்வித் துறையின் திட்டங்கள் அனைத்தும் தொய்வும் இன்றி சிறப்பாகச் செயல்பட பள்ளிகளில் போதுமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல. உலகத்தின் உன்னதமான அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஆவர். ஒழுக்கம், நன்னடத்தை, காலம் தவறாமை போன்ற நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து அவர்களின் முழுமையான வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோரே ஆசிரியர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பாடம் கற்பிப்பது எப்படி?: பள்ளிக்குச் சென்று கற்பிக்கும் போது ஒவ்வொரு பாடப் பகுதியையும் எவ்வாறு கற்றுக் கொடுத்தால் எளிதாக இருக்கும், அதற்காக எத்தகைய உபகரணங்களை உபயோகித்தால் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கக் கூடியதாக இருக்கும் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் யோசிக்க வேண்டும். அவ்வாறு யோசித்து திட்டமிட்டு, வகுப்பறைக்குள் நுழைந்தால் மாணவர்களுக்குக் கற்றல் சுமையாக இல்லாமல், சுவையாக இருக்கும்.

எந்தவொரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ்பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியர்கள் பார்த்து மகிழ்வார்கள்.

பொறுப்புள்ள ஆசிரியர் பணியை அனைவரும் மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்றுப் பேசினார்.

பணி நியமன உத்தரவுகள்: 2,315 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணி நியமன உத்தரவுகள் விழாவில் வழங்கப்பட்டன. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் அளித்தனர்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 – 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

 

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 – 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.