TET – தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.

 அவகாசம் : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டப்படி, தனியார் பள்ளி ஆசிரியர் கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 2009ல், ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது; அது, 2014ல் முடிந்தது. பின் மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், 2019க்குள் தகுதித் தேர்வில் கட்டாயம்தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, 8ம் வகுப்பு வரையான, தனியார் பள்ளிகளில் பணிபுரியும், பட்டம் மற்றும் டிப்ளமா முடித்த ஆசிரியர்களுக்கு, சிறப்பு தொடக்க கல்வி டிப்ளமா படிப்பையும், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அனுபவம் : இந்த படிப்பை, என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தநிலை பள்ளி யில், தொலைநிலை கல்வி யாக, இரண்டு ஆண்டு படிக்கலாம். இதற்கான பதிவு, செப்., 15ல் முடிவதாகவும், அதற்குள் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாக சங்க தலைவர், ஜே.மார்ட்டின் கென்னடி கூறியதாவது: தனியார் பள்ளிகளில், பல ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை, வெறும் தகுதித் தேர்வுக்காக, பணியில் இருந்து அனுப்ப முடியாது. எனவே, அவர்கள் பணியில் தொடரும் வகை யில், மத்திய அரசு, இந்த படிப்பை அறிமுகம் செய்து உள்ளது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வரவேற்பும் எதிர்ப்பும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆதரவு

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகளோ, பயிற்சி வகுப்புகளோ இல்லாததால் நீட் தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் நவோதயா பள்ளிகளுக்கு தடையில்லா சான்றை 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது நவோதயா பள்ளிகள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. நவோதயா பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு அனுமதி வழங்காமல் மறுத்து வருகிறது. ஆனால் இந்தப் பள்ளிகளில் மும்மொழி கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 20 கோடி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நவோதயா பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்ப்பு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என அறிஞர் அண்ணா திட்டவட்டமாக கொள்கை முடிவாக அறிவித்தார். அக்கொள்கையைத்தான் திமுக, அதிமுக முதல்வர்கள் பின்பற்றி வந்தனர். எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதோடு, இது எங்கள் கொள்கை முடிவு என பிரதமருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. இது மாநில அரசின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தலையிடுகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பதில்லை என உறுதியாக இருந்தனர். இந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேருவதற்கே நீட் தேர்வைப் போன்று நுழைவுத் தேர்வு அவசியம். மேலும் இது நேரடியாக இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டை மறந்ததால் பரிதவிக்கும் மாணவர்கள்

மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாட்டை குறைக்க அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதில் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளதுடன், தற்போது ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். கோ கோ, கபடி, சிலம்பம், களரி, வாலிபால், புட்பால் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

இதன் விளைவாக அவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதோடு கல்வியில் சிறந்து விளங்குவதோடு எதிர்காலத்தில் நல்ல அறிவார்ந்த சமூகம் உருவாகும் நிலை ஏற்படும். இந்த பணியை பள்ளி பருவத்தில் ஊக்குவிக்கவில்லை என்றால் எந்த நிலையிலும் செய்ய முடியாது. இதனால் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் தற்போது மாணவர்கள் விளையாட தயாராக உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் ஊக்குவிப்பதில்லை. விளையாட்டு நேரங்களில் பாடம் நடத்துகின்றனர். மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் இருக்கும் ஒரு சில விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதை தவிர்த்து செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இதனால் அவர்கள் மனரீதியாக மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். அவர்கள் போதிய அளவு சலுகை கொடுக்காமல் மாலை நேரத்தில் விளையாட கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டிற்கு கண்டிப்பாக திரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முன்தினம் ஆம்பூரில் ப்ளூவேல் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவி கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியர்கள் கவுன்சில் வழங்கினர். இதேபோல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ப்ளூவேல் கேம் விளையாடி வருகிறார்களா என்று ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம்-மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

குமரி மகாசபா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக 8 வாரத்திற்குள் பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஹைகோர்ட் பெஞ்ச்

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திண்டுக்கல்: ‘மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்’ என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர்.

இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில் 

டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால் வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்’ (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது. இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில் சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா?

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இது சுமார் ஒரு சதவீதம். ஆனால், எண்ணிக்கையில் இவர்கள் சுமார் எட்டு லட்சம் பேர். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைகளில் வெவ்வேறு சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலையில் வாழும் இம்மக்களின் எழுத்தறிவு 54 சதவீதம் மட்டுமே. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 3 கி.மீ.க்குள் தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்றாலும் மலைப் பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பழங்குடி மக்களும் பிழைப்புத் தேடி அவ்வப்போது சமவெளிப் பகுதிகளில் கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டும் பணி, செங்கல் சூளை என பணிகளுக்குச் செல்கின்றனர்.

அப்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்வார்கள். சில சமயங்களில் அவர்களை வேலைக்கும் அனுப்புகின்றனர்.

 

பள்ளி இடைநிற்றலும் மலைப் பகுதிகளில் அதிகம். இதனால் குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமண முறை, கொத்தடிமை முறை, இடம்பெயர்வு போன்ற பிரச்னைகள் பெருகி வருகின்றன.

மலைப் பகுதிகளில் இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்க 17 மாவட்டங்களில் 314 அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமார் 30,000 பேர் பயில்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் இப்பள்ளிகளைக் கண்காணிப்பதில்லை.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட ஓராசிரியர்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர் மேல்நிலைப் பள்ளியில் மொழிப் பாடங்களுக்கு 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை.

1952-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளியாக இருந்து 1988-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, ஆங்கிலப் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. அடுத்து 1997-இல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்போது, தமிழ் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமலேயே ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுவரை பணியிடமே உருவாக்கப்படாமல் இந்நிலை நீடிக்கிறது. பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களே இப்பாடங்களையும் நடத்துகின்றனர். மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி 30 ஆண்டுகளாக இந்தப் பழங்குடி மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர்.

 

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் 2010-இல் கடும் கண்டனத்தை தெரிவித்தது.ஆனாலும், இன்னும் இந்த அவலம் நீடிக்கிறது. 255 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பர்கூரில் 1961-இல் தொடங்கப்பட்ட பள்ளி 1981-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2008-இல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்போது, சமூக அறிவியல் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாகி 2 ஆண்டுகளாகியும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. 125 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

 

மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் குறிதக்த நேரத்துக்குப் பள்ளிக்கு வருவதில்லை. காலை 11 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்பும் ஆசிரியர்களே அதிகம். விடுதி காப்பாளர்கள் விடுதிகளில் தங்குவதே இல்லை.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் கல்வி சேவை அளித்து வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:

உண்டு உறைவிடப் பள்ளிகள் என இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகள், உண்டு செல்லும் பள்ளிகளாகவே விளங்குகின்றன. விடுதி வசதியும், அதற்கான கட்டடங்களும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

 

எனவே, குழந்தைகள் உணவை உண்டுவிட்டு தங்களது வீட்டுக்கு சீக்கிரமே திரும்புகின்றனர். இப்பள்ளிகளில் நூலகங்களோ, செய்தித்தாள்களோ இல்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, குழந்தைகளின் பெற்றோர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை பள்ளி மேலாண்மைக் குழு எனும் பெயரில் அமைத்துள்ளது. இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஆனால், இதுவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

ஒரு பெண்ணைத் தலைவராக நியமித்து, கையொப்பம் மட்டும் பெற்று தங்களது வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப் பகுதியில் ஒசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 135 மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், ஒசூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 253 மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்களே உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு?.

 

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும் பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்வதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, இவர்களின் நலனில் அக்கறையுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்து அமர்த்துதலே முதன்மையான சீர்திருத்தமாகும். விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

 

இடைநிற்றலைத் தடுக்க தொடர்ந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையை கல்வி ஊக்கத் தொகையாக வழங்கலாம். விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பது என நிர்ணயம் செய்வதைத் தவிர்த்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.

பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூகப் பொருளாதார, கலாசார வாழ்நிலையில் இருந்து மதிப்பீடு செய்து கீழ்காணும் தீர்வை நோக்கிச் செல்ல வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.

பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு இலவச, சமமான, கட்டாய தரமான கல்வி உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். பழங்குடி பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் சமவெளிப் பகுதியில் உள்ளதுபோல் அல்லாமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

 

பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல், கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படவேண்டும். போதுமான கட்டடங்கள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக நூலக வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இயற்கையோடு இணைந்த நீண்ட நெடிய வாழ்வியல் வழிமுறையில் கண்டறியப்பட்ட குன்றா வளர்ச்சிக்கான அடிப்படையாக கூறுபாடுகளை எப்படி பிற பகுதி மக்கள் பின்பற்ற முடியும் என்பதற்கான ஆய்வுகள் வேண்டும்.

பழங்குடியினர் நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் அமைப்புகள் ஆகியோரைக் கொண்ட மாநில அளவிலான ஒரு பொது மேடையை பழங்குடியினர் கல்வி உரிமை கூட்டமைப்பு எனும் பெயரில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

103 மாணவர்கள் விடுப்பு : வெறிச்சோடிய அரசு பள்ளி

மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யாத நிலையில், மாணவர்கள், 103 பேரையும், பெற்றோர் அனுப்ப மறுத்து விட்டனர். இதனால், நேற்று கத்திரிப்பட்டி நடுநிலைப்பள்ளி வெறிச்சோடியது.

 

சேலம் மாவட்டம், காவேரிபுரம் ஊராட்சி, கத்திரிமலை அடிவாரமுள்ள, கத்திரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், மொத்தம், 103 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

 

இதில், ஒரு தலைமைஆசிரியர், நடுநிலைப்பள்ளிக்கு, இரு பட்டதாரி ஆசிரியர்கள், துவக்கப்பள்ளிக்கு, மூன்று இடைநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், ஏழு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

 

தற்போது, ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். துவக்கப் பள்ளிக்கான மூன்று இடைநிலை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளன.

 

அவ்வப்போது வேறு பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியரை, தற்காலிகமாக கத்திரிப்பட்டி பள்ளியில் நியமிப்பது வழக்கம். தற்காலிக ஆசிரியரும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை.

 

‘இடைநிலை ஆசிரியரை நியமிக்கும் வரை, மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை’ என, அப்பகுதி பெற்றோர் முடிவு செய்தனர். 

 

நேற்று, 103 மாவர்களையும் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.தலைமை ஆசிரியர் நேற்று விடுப்பில் சென்று விட்டார். 

 

மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்ததால் பள்ளி வெறிச்சோடியது.

 

கொளத்துார் உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளிக்கு சென்று பேச்சு நடத்த மாணவர்களின் பெற்றோரை அழைத்தார். ஆனால், பெற்றோர் மறுத்து விட்டனர்.