பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

 

கல்வித்துறை முடிவு : இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொது தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

 

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பள்ளிகளுக்கு அனுப்பட்ட முட்டைகள்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை கையிருப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பப்பட்டது.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1,072 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சத்துணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தநிலையில், இந்தவாரத்திற்கான முட்டை பெரும்பாலான பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

முட்டை கொள்முதல் விலை உயர்வு காரணமாக பள்ளிகளுக்கு சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்கப்படவில்லை என கருதப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சமூகநலத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது புதிய தலைமுறை. பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு முட்டை கையிருப்பில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்குமாரும், சத்துணவுத் திட்டத்திற்கு தேவையான முட்டை கையிருப்புள்ளதாக தெரிவித்தார்.

3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.

 

2016-2017 கல்வியாண்டில் 8.93 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். 2017-2018 கல்வியாண்டில்கூடுதலாக 7,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களைக் கண்காணிக்க, விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்களைப் பார் குறியீட்டுடன் அச்சிட தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

 

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அரசு தேர்வுகள்இயக்குநரகம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, டிசம்பர் மாதம் விடைத்தாள்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அதற்குத் தடை ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கிட்டத்தட்ட 50 சுயநிதி மற்றும்உதவிபெறும் பள்ளிகள் அரசாங்க அங்கீகாரமின்றி இயங்கின.

 

முன்னதாக அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் உள்ள பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் ஆவணங்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி, சேர்க்கைக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.இந்தியாவில் இயங்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டுமே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

 

இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு,இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

இந்த நடவடிக்கை சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் விரைவில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த 2004ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.அதைத் தொடர்ந்து, பள்ளி கட்டடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வின் முடிவில், சுமார் 746 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

 

அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி 2016 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 746 பள்ளிக்கூடங்களுக்கு விதிமுறைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாகக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தைக்கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய பள்ளிகள் தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

பொது தேர்வு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்’

‘அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்’ என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத, சில தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்களை, அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும், ‘வாட்ஸ் ஆப்’பில் வதந்திகள் பரவுகின்றன.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளே கிடையாது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளது. எனவே, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுத் தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சமின்றி தேர்வுக்கு தயாராக வேண்டும்’ என்றனர்.

 

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவுஅறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கட்சியின் மாவட்ட 9ஆவது மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:கட்சியின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 ஆகிய 2 நாள்கள் தூத்துக்குடியிலும், அகில இந்திய 22ஆவது மாநாடு ஹைதராபாதில் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன.தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெüனம் காப்பது ஏன்? அது சட்ட விரோத மணல் என்றால் உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தரமான கல்வி இல்லை. அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளுநரின் ஆய்வு என்பது இந்திய அரசியல் சட்டத்தை அத்துமீறும் செயல். சட்டம் என்ன உரிமை அளித்துள்ளதோ, அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். சட்ட உரிமை மீறலைப் பொறுத்துக்கொள்ள முடியாது.தமிழகம், புதுச்சேரியில் ஆளுநரை வைத்து ஆய்வு செய்யும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ஏன் செய்யவில்லை?சிறந்த முதல்வர்கள் இருந்த மாநிலம் தமிழகம். இப்போதுஅதன் பெருமை தாழ்ந்து வருகிறது என்றார் அவர்.

பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

நீட்’ போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்கவழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில், 12 லட்சம் பேரும்;பிளஸ் 2வில், ஒன்பது லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தஆண்டு, தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பாடமாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., தேர்வு,சி.ஏ., படிப்பதற்கான நுழைவு தேர்வு என, பல தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக, பொது தேர்வுகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை சோதிக்கும் கேள்விகளை இடம் பெறச்செய்ய, தேர்வுத்துறை முயற்சித்து வருகிறது.

எனவே, இந்த ஆண்டு, பிளஸ் 2 வினாத்தாளில், 5 சதவீதம் அளவுக்கு, சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும், சிக்கலான கேள்விகள் இடம் பெறலாம்.வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம், போட்டி தேர்வுக்கு ஏற்ற வினாக்களை இடம் பெற செய்ய, ஏற்கனவே, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.தற்போது, தோராய வினாத்தாள் வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், இறுதி வினாத்தாளை ரகசியமாக இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாடு அதன் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயர்கல்விக்கு இந்த இரு வகுப்புகள் அடித்தளமாக இருக்கும். எனவே மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 நலத்திட்டங்களை செம்மைப்படுத்தவும், கற்றல்- கற்பித்தல் பணிகளை திறம்படச் செய்யவும் நலத்திட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பொருளியல், வணிகவியல் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நேரடி நியமனம் மூலம்மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறுதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்

டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது

 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.