கைதான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நள்ளிரவில் விடுதலை: சென்னையில் எங்கே செல்வது என திக்குமுக்காடிய ஆசிரியைகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் புதன்கிழமை நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இதனால், வெளியூர் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகள் எங்கே செல்வது என திக்குமுக்காடிப் போயினர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வாரத்தில 3 நாட்கள் அரை நாள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களைபணிநிரந்தரம் செய்ய முடியாது என தமிழக அரசுஅறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா, மாநிலச் செயலாளர் ராஜா தேவகாந்த் ஆகியோர் தலைமையில் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாரிடம் வேண்டுகோள்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தற்காலிகமாக கல்வி ஆண்டின் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர பணி வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அனைவரும் கோஷமிட்டனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அனுமதி அளிக்கப்பட்ட மாலை 6 மணி தாண்டியும்அவர்களின் போராட்டம் நீடித்ததால் அனைவரும் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம், சிந்தாதிரிபேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆசிரியைகள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதுவெளியூர் ஆசிரியர்கள் தாங்கள் காலை வரை தங்கிக்கொள்கிறோம் என்று போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், போலீஸார் அதைஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வெளியூர் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகள் நள்ளிரவு செய்வதறியாமல் திகைத்தனர். நள்ளிரவு நேரத்தில் எங்கே செல்வது என அவர்கள் திக்குமுக்காடிப் போயினர்.

உதவி செய்தோம்

இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னரும் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை இரவு 7.30 மணிக்கு பின்னர்தான் கைது செய்ய தொடங்கினோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒவ்வொரு இடத்துக்கும் கொண்டு சென்று அடைத்து வைப்பதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரையும் விடுவித்து விடுமாறு அதிகாரிகள் கூறியதால்,11 மணியளவில் அனைவரையும் விடுவித்தோம். கைது செய்யப்பட்ட ஆசிரியைகளை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைத்திருந்தோம்.காலை வரை அவர்கள் அங்கேயே தங்கிக்கொண்டு காலையில் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால் உடனே அங்கிருந்துசெல்ல கூறினோம். மேலும், அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், 2 போலீஸ் வாகனங்களில் ஏற்றி, ஊருக்கு செல்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இறக்கி விட்டோம்” என்றார்

‘ஆதார்’ பதிவுக்கு நாளை கடைசி: ஆர்வம் காட்டாத பள்ளிகள்

தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், மாவட்ட வாரியாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், அனைத்து வகை தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையதளம், அறிமுகம் செய்யப்பட்டது. சர்வர் குளறுபடி பிரச்னைகள் களைய, 32 மாவட்டங்களையும், இரண்டாக பிரித்து, கிழமை வாரியாக, பள்ளித்தகவல்கள், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் பதிவு இல்லாதோருக்கு, பிரத்யேக எண் பெற்று, எமிஸ் இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள், அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஆதார் பதிவு பணிகள் நடக்கின்றன. 80 சதவீத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆதார் பதிவு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எமிஸ் இணையதள பதிவுப்படி, மாணவர்களுக்கு அளிக்கப்படும் பிரத்யேக எண் கொண்டு, அனைத்து வகை நலத்திட்ட பொருட்கள், கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், முனைப்புடன் இப்பணியை மேற்கொள்கின்றன. மெட்ரிக், சி.பி.எஸ்.இ., — ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பள்ளிகளை, ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடிப்பதால், எமிஸ் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட, பணிகள் சார்ந்த விபரங்கள் திரட்ட இயலவில்லை’ என்றார்.

மாணவர் மன அழுத்தம் தீர ‘ஹெல்ப் லைன் 14417’ அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், ‘14417’ என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

ஆலோசனை மையம்
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.இனிமேல், ‘14417’ என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.1.98 கோடி

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்… நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்டைகளை சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல: சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முதலாவது வகுப்பிலேயே மாணவர்களை புத்தக மூட்டைகளைச் சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  மத்திய கல்வித் திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் பள்ளிகள்  முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பித்து வருகின்றன.

அதேநேரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் என்சிஇஆர்டி கவுன்சில் (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்)  பாடத்திட்டத்தின்கீழ் முதல் வகுப்பில் 3 பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.   சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றுவதில்லை.  இதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களையே மாணவர்களுக்கு வழங்குகின்றன.  இந்த புத்தகங்களின் விலை அதிகம் உள்ளதால் பெற்றோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புத்தக மூட்டைகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி வினியோகம் செய்யும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: என்சிஇஆர்டி பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்.  முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையை அதிக புத்தகங்களை சுமக்க விடுவது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்க முடியாது. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே  கடைபிடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகமும் ஏற்கனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல சிபிஎஸ்இ  பள்ளிகள் இதை கடைபிடிக்கவில்லை.

மேலும், இந்த அறிவுரையை சிபிஎஸ்இயும் கடுமையாக்கவில்லை. எனவே, மாணவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் விஷயத்தில் சிபிஎஸ்இ கடுமையாக நடக்க வேண்டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றாத சிபிஎஸ்இ  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கல்வி மாணவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு என்சிஇஆர்டி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை வரும் ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது, சிபிஎஸ்இ பதில் தர வேண்டும்.  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம்எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15வயதுக்கு உட்பட்ட மாணவ – மாணவியர் பங்கேற்கலாம்.மாணவ – மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும்.
இதற்கானசர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும்சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்கவேண்டும்.மேலும் தகவல்களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

EMIS : மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு

தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் ‘எமிஸ்’ எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

‘எமிஸ்’ எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘எமிஸ்’ எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ‘எமிஸ்’ எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். ‘எமிஸ்’ அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், ‘எமிஸ்’ இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்

நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளி்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு இடம் ஒதுக்குவதுடன், தடையில்லா சான்றும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டின் கிளையின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

 

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய – மாநில அரசுகள் மற்றும் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், ‘செக்’ வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு  தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

 

 

தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 700க்கும் மேற்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிகுலேஷன் இயக்குனரகங்கள் மற்றும், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய கல்வி வாரியம் ஆகியவை சார்பில், தனித்தனியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

 

 

சில பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., மற்றும், ஐ.ஜி.சி.எஸ்.இ., எனும் கல்வி வாரியங்களின்அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை தவிர, 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும் செயல்படுகின்றன.

 

இந்த பள்ளிகள், அங்கீகாரம் பெற்றது போல், இயங்கி வருகின்றன. அதனால், பல பெற்றோர், பல லட்சம் நன்கொடை செலுத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

 

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

 

 

அதில், அவர் கூறி உள்ளதாவது:கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டால், அவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மூட வேண்டும். எச்சரிக்கையை மீறி, மீண்டும் நடத்தினால், ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

 

இதுகுறித்து, தமிழக பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தி, அங்கீகாரத்தை சோதனையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்

EMIS NEWS:தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.

தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில் உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.

அங்கீகரிக்கப்பட்ட android application புதன் கிழமை வெளிவரும்.ID card சம்மந்தமான பதிவுகள் அனைத்தும் ஆன்ராய்டு அப்ளிகேஷன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.தற்போது ஆதார் எண் ஏற்கனவே ஏற்றப்பட்டதில் பல விடுபட்டு உள்ளன.எனவே அனைத்தையும் சரிபார்க்கவும்.நம் பள்ளியை விட்டுசென்றவர்களை Transfer செய்யவும்.நம்பள்ளிக்கு வந்தவர்களை search student ல் ஆதார் எண், பிறந்த தேதி அடிப்படையில் தேடி ( நேரடி சேர்க்கையாயினும்) அம்மாணவன் admit வசதி இருப்பின் அப்படியே சேர்க்கவும்

26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்! மத்திய அமைச்சகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களில் 26,000 பேர், தகுதியில்லாத நிலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தகுதிநிலை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியில் தொடர முடியும்’ என மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஆசிரியர் பணிக்கு, பட்டயப் பயிற்சி அல்லது பி.எட். படித்தவர்களையே நியமிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களையும் பட்டப்படிப்பு முடித்தவர்களையும் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் தகுதிநிலை பெறுவதற்கு உதவியாக, தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இரண்டு ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சியில் கலந்துகொண்டு தேர்ச்சிபெற வேண்டும். இந்தப் பயிற்சிக்கு, தமிழ்நாட்டிலிருந்து 25,929 ஆசிரியர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். தெலங்கானாவில் 17,812 பேரும் கர்நாடகாவில் 5,175 பேரும் கேரளாவில் 705 பேரும் பயிற்சி பெற பதிவுசெய்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையில் 3,696 பேர், கோவையில் 3,441 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 2,804 பேர் பதிவுசெய்திருக்கின்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நாடு முழுவதும் முழுமையான தகுதி பெறாத ஆசிரியர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்களின் தகுதிநிலையை உயர்த்தும் நோக்கில், மத்திய மனிதவளத்துறை தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியத்தின் மூலம் ஆன்லைன் வழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு உதவியாக, பாடங்களும் வீடியோக்களும் ஆன்லைனில் பதிந்துவைத்திருக்கின்றனர். இரண்டு ஆண்டு பயிற்சியில், முதலாம் ஆண்டு ஐந்து பாடங்களும், இரண்டாம் ஆண்டில் நான்கு பாடங்களும் என, மொத்தம் ஒன்பது பாடங்கள் இருக்கின்றன. இந்தப் பாடங்களில் ஆரம்பக் கல்வி முறைகள், குழந்தைகளின் உளவியல், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, கற்றல் முறைகள் போன்றவை சொல்லிக்கொடுக்கப்படும். இந்தப் பாடங்களைப் படிக்கும் ஆசிரியர்கள் நேரடியாகப் பள்ளியில் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். பயிற்சிக்குப் பிறகு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய திறந்தநிலைக் கல்வி அமைப்பு நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ள, இந்தியா முழுவதும் பதினான்கு லட்சம் பேர் (14,02,962) பதிவுசெய்திருக்கின்றனர். பீகாரில் 2.82 லட்சம் பேர், உத்தரப்பிரதேசத்தில் 1.82 லட்சம் பேர், மேற்குவங்கத்தில் 1.77 லட்சம் பேரும் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தகுதி குறைந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

பட்டப்படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்பெடுக்க வேண்டும். இவர்கள் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவராக இருந்தால், ஆறு மாதகால அளவிலான பயிற்சியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்’ என்கிறது மனிதவளத் துறை. இந்தப் பயிற்சியையும் தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியமே நடத்துகிறது. இந்தப் பயிற்சியில் சேர, இம்மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.nios.ac.in  என்ற இணையதள முகவரியை அணுகவும்.

“இத்தகைய பயிற்சிக்கு ஏற்பாடு செய்து, ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது” என, தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படும் நிலையில், பயிற்சிக் கட்டணமாக 5,000 ரூபாயைச் செலுத்தச் சொல்லி பொருளாதார அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்” என்கின்றனர்.

ஆசிரியரின் தகுதிநிலை உயர்வு, மாணவர்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கட்டும்!