அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.

 

 

விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிடக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

வாதத்தின் போது, 1997ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வகுத்த விதிகளின்படி, அந்தப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட சில காரணங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டன. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், 20 ஆண்டுகளில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டனர். அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்வது எப்படி?

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்)

ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம்  செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

கட்டணம்
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’ (Alias)  என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்  சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?
அரசிதழை  நேரில்பெற  விருப்பம்  தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம்  அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர்  18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார்  அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm>  என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.stationeryprinting.tn.gov.in/forms.htm>  என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
Government of Tamil Nadu
Directorate of Government Examination
DPI Complex, College Road, Chennai – 600 006
Telephone: +91-44- (0), 28272088
Email: dge@tn.nic.in