Group-4 தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் வெளிமாநிலத்தவர்கள்!!

ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள்.

இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர். இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

வெளிநாட்டில் படிக்கவும், ‘நீட்’ தேர்வு எழுதணும்

மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, ‘நீட்’ தேர்வு எழுவதுபோல, வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்காக, ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வு, 2016 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளிநாடுகளில் மருத்துவம் படிப்போர், நாடு திரும்பி டாக்டராக பணி புரிவதற்கான லைசென்ஸ் பெற வேண்டும்.இதற்காக, எப்.எம்.ஜி.இ., எனப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்ட தேர்வு என்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும், 7,000 பேர், மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சீனாமற்றும் ரஷ்யாவுக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர்.ஆனால், இந்த தகுதித் தேர்வை எழுதுவோரில், 15 சதவீதம் பேரே தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி பெறாதவர்கள், டாக்டராகப் பணிபுரிவதற்கான லைசென்ஸ் பெறாமலேயே, டாக்டராக பணியாற்றுகின்றனர்.இதை தடுக்கும் வகையில்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய மருத்துவ கமிஷன் மத்திய அரசு விளக்கம்ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளில் உள்ளவர்களும், அலோபதி மருத்துவர்களாக செயல்படுவதற்கான தேர்வு நடத்துவது தொடர்பான தேசிய மருத்துவ கமிஷன் மசோதா குறித்து, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குமாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் கொண்டு வருவதற்கான மசோதாவை பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்போர், ஒரு குறிப்பிட்ட தேர்வு எழுதி, அலோபதி டாக்டர்களாக செயல்பட அனுமதிப்பது உள்ளிட்டவை இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பார்லி.,யிலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதா, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா குறித்த விளக்கங்கள், மத்தியசுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில், ‘டாக்டர்களுக்கான பற்றாக்குறையை குறைக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு நடத்துவது தொடர்பான குழுவில், அலோபதி டாக்டர்களும் இருப்பர். அதனால், இதில் எந்த பிரச்னையும் ஏற்படாது’ என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசன் – நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?

மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார் செய்து கொள்கிறது. அதற்கு …

1. Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.

2. அதனைopen செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user ID யாகவும், EMIS password   பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும்.

3. இப்பொழுது student attendance என்ற ஒரு பகுதியாகவும்​ monthly report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும்.

4. Student attendance என்ற பகுதியை​ தொட்டால் வகுப்புகள் வரும்.

5. அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும்.

6. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில்​ P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும்.

7. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது absent ஆகும்.

9. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து submit கொடுத்தால்  அந்த வகுப்பு attendance online ல் ok.

10. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது.

11. அடுத்து monthly report தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும்.

12. EMIS பெயர் இனிஷியல் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக ஏற்றி இருக்க வேண்டும்.

13. இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது. செய்க.

application link….

https://play.google.com/store/apps/details?id=com.dse.ssa

மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும்

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.. என்பது பிரபலமான திரைப்படப்பாடல்.

ஆம் ! இந்த மண்ணில் பிறக்கிற எல்லா குழந்தைகளும் நல்ல மனநிலையில் தான் பிறக்கிறார்கள் .கள்ளம் கபடம் அற்ற அன்பின் வடிவம் தான் குழந்­தைகள். அம்மா பிடிக்குமா , அப்பா பிடிக்குமா என்று கேட்டால் குழந்தை தலையை ஆட்டி , புன்­னகை புரிந்து , உதட்டில் விரலை வைத்து மழலை மொழியில் இரு­வரையும் பிடிக்கும் என்று மனதைப் புண்­ப­டுத்­தாமல் கூறும் வார்த்­தையில் பொதிந்­துள்ள மனநல சிந்­த­னையை நம்மில் பலர் அறிந்ததில்லை . . அப்­ப­டிப்­பட்ட கள்ளம் கபடம் அற்ற உள்ளம் வஞ்­சகம் , குரோதம் , பழி வாங்கும் உள்­ள­மாக மாறு­வதன் காரணம் என்ன என்­பதை சிந்திக்க வேண்டும் குழந்தைகளின் மனநல பாதிப்­புக்­கான கார­ணங்கள் : புரி­யாத வயதில் இளம் பெண்கள் தாய்­மை­ய­டைந்து குழந்­தை­களை அனாதையாக விடுதல் , இளம் வயது திரு­மணம், குடும்ப வாழ்க்­கையில் ஏற்படும் ஒழுக்­கப்­பி­ரச்­சினை , சந்­தேகம் , பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மாக தினமும் தொடரும் சண்டைகள் , பிரி­வுகள், விவா­க­ரத்­துக்கள் என்­ப­ன­வற்றைப் பார்த்து அனு­பவிக்கும் குழந்­தை­களின் மன­நி­லையைப் பாதிக்கப்படுகிறது . அவ­சர உலகில் தாய் தந்தை இரு­வரும் வேலைக்குச் செல்­வது தேவைதான்

அன்­பிற்­கா­கவும் , அர­வ­ணைப்­பிற்­கா­கவும் ஏங்கும் குழந்தை­களை அன்­புடன் வாரி அணைத்து வளர்க்க ஆர்­வ­முடன் இருக்கும் தாத்தா பாட்டி போன்ற உறவுமுறைகள் இருக்கும் போது வேலைக்­கா­ரர்­க­ளு­டனும் வேறு இடங்­க­ளிலும் விடு­வது , பாலூட்டும் வயதில் ஏங்க வைப்­பது , தாய் மடியில் விளை­யாடி இன்பம் பெறத் துடிக்கும் வயதில் அன்பை மறந்து வீண் வார்த்­தைகள் பேசுதல் , அடித்தல் , கதவைப் பூட்டி வைத்து விட்டு வெளியே செல்லல் போன்றவை மன­நி­லையைப் பாதிக்கும். விரல்­களைப் பிடித்து எழுத உறுதி அடைய முன்னர் எழு­த­வித்தல் , மழலை மாறாத வயதில் பள்ளிக்கு அனுப்­புதல், பள்ளிக்கு செல்லும் முன்பே படி படி எனத் துன்­பு­றுத்தல் , சொற்­களை எழு­தும்­படி வற்­பு­றுத்­துதல் என்­ப­னவும் மனநி­லையைப் பாதிக்­கின்­றன.
பள்ள வகுப்பறையில் ஏற்படும் மனநிலை பாதிப்புகள் :

குழந்­தைகள் பள்ளிக்கு வருகை தரு­வ­தற்கு முன் அனு­ப­வித்த மனநல அனு­ப­வங்கள் , அவர்­களின் நடத்தையை மாற்றக்கூடிய வகையில் அமை­கின்­றன. குழந்தைகளின் மனநல இயல்புகள் வெளிப்படையாக தெரியும் ஒரு வகை இருப்பினும் வெளியே புலப்­ப­டாமல் தமக்­குள்ளே அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­பதும் ஒரு­வ­கை­யினர். வகுப்­ப­றையில் கட்­டுப்­ப­டாமல் தம் விருப்­பப்­படி ஓடித்­தி­ரிதல் , வெளியே செல்லல் , பக்­கத்தில் இருப்­ப­வர்­களை கிள்­ளுதல் நிறை­வே­றாத ஆசை­களின் தாக்கம் கார­ண­மாகக் களவாடுதல் , அதனை மறைப்­ப­தற்குப் பொய் கூறுதல், எதிர்த்தல் , முறைத்துப் பார்த்தல் , தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்தல், அடித்தல் , பென்­சிலால் தாக்­குதல், ஒழுக்கச் செயற்­பா­டு­களை மீறுதல் போன்­றன ஒரு­வ­கை­யாகும். வன்­முறை தண்­ட­னை­க­ளுக்குப் பயந்து மன­நலம் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­களின் பண்பு வேறு­வகை. வகுப்­ப­றை­களில் தனி­மையை நாடுதல் , பயந்த சுபாவம் , ஆசி­ரி­யரைக் கண்டால் பயந்து நடுங்­குதல் , முன்னே எழுந்து நடப்­ப­தற்கு , பேசுவதற்கு பயப்­ப­டுதல் ,பிறர் தன்னைப் பார்க்­கி­றார்கள், ஏளனம் செய்­கி­றார்கள் எனப் பயப்­ப­டுதல் என்­பன இவர்­களின் நடத்­தை­யாகும். சில உள­நலப் பாதிப்­புக்கள் வெளியில் தென்­ப­டு­வ­தில்லை. பொறாமை , பிற­ருடன் கலந்து பழ­காமை , பிற­ருக்கு உதவி செய்­யாமை. சுய­நலம் , தெரிந்­த­வற்றை புரி­யா­த­வர்­க­ளுக்குச் சொல்லிக் கொடுக்­காமை ஒரு­புறம். புத்­த­கங்கள் , குறிப்­புக்கள் முக்­கிய கரு­வி­களை கள­வாடுதல் . நன்­றாகப் படிக்கும் மாண­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்தல் , வீண்­ப­ழி­களைச் சுமத்தல் , கார­ண­மின்றித் தாக்­குதல் என்­பன ஒரு­வ­கை­யாகும். இவ்­வா­றான குழந்­தை­களை மனநல சிந்­த­னை­யுடன் அணு­குதல் முக்­கி­ய­மா­னது. இவர்­களின் நடத்தைகள் , பண்­புகள் , செயற்­பா­டு­களின் காரணங்கள் சரி­யாக அறி­யா­விட்­டாலும் உளவியல் ரீதியில் அணுகினால் மன­நி­லையை மாற்­றலாம்,

சரி­யான முறையில் அணு­கா­விட்டால் எதிர்­கால விளைவுகள் :

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முதல் வகையினர் வளர்ந்த பின்பு நிம்­ம­தியைத் தேடி , அலைந்து ,முறை­யற்ற வழியில் இன்பம் காண­முற்­ப­டு­வார்கள். தவ­றான பாலியல் நட­வ­டிக்­கைகள், குடிப்பழக்கம், ஹெரோயின் , கஞ்சா , போதை மாத்­தி­ரைகள் போன்ற மருந்­து­களை உடலில் பாய்ச்­சுதல் போன்­ற­வற்றால் உலக சிந்­த­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு அழுத்­த­மற்ற மன­நி­லை­யுடன் இன்­பத்தை அனுபவிக்கிறார்கள் இதற்கு அடி­மை­யா­ன­வர்கள் இந்த இன்­பத்­தி­லி­ருந்து விடு­ப­ட­மாட்­டார்கள். பணம் அற்ற நிலையில் கொள்­ளை­ய­டித்தல் , பிற­ரைத்­துன்­பு­றுத்தல் , கொலைகள் போன்ற வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். இரண்­டா­வது வகை­யினர் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்­கின்ற பிரச்­சி­னை­களைச் சமா­ளிக்­க­மாட்­டார்கள்.

தோல்­வி­களைத் தாங்கும் மன­நிலை இவர்­க­ளுக்கு இருக்­க­மாட்­டாது எதற்கும் பயப்­ப­டுதல் , யோசித்தல் கவலைப்­ப­டுதல் , கண்ணீர் வடித்தல் , ஏங்­குதல் இவர்களின் பண்­பாகும். சிலர் மன­நிலை பாதிக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்டுத் தவிப்­பார்கள். சுய­ந­லத்தால் ஒரு­சிலர் வாழ்வில் நிம்­மதி இன்றி அலைந்து பிறரின் வாழ்­விற்கும் இடை­யூ­றாக அமை­வார்கள்.

ஆசி­ரி­யர்­களின் பங்­க­ளிப்பு :

பல்­வேறு மன­நி­லை­யுடன் நாடி­வரும் குழந்­தை­களை நேரடியாகக் கையா­ளு­ப­வர்கள் ஆரம்ப பள்ளி ஆசி­ரி­யர்­களும், தொடக்க பள்ளி ஆசி­ரி­யர்­களும் ஆவர். கல்­வியில் மட்­டு­மல்­லாமல் அவர்கள் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு இவர்­க­ளிடம் தான் உள்­ளது. பொறு­மை­யுடன் அன்பு காட்டி குழந்­தை­களின் மன­நி­லையை உணர்ந்து ஆழ­மாக ஆராய்ந்து அறிந்து நெறிப்­ப­டுத்தக் கூடிய மன­நலம் சம்பந்தமான அறிவும் பயிற்­சியும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

பெற்­றோரின் பங்கு :

குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்தே தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .அவர்களின் வாழ்வே இவர்களுக்கு முன்னுதாரணம் .சண்டை ,சச்சரவு இல்லாத ஒற்றுமையான கணவன் மனைவி உறவே குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது வாழ்க்கை முறைகள், ஒழுக்கம் , அன்பு , இரக்கம் , தாய் தந்தை சகோதர பாசம் , குடும்ப உறவுகளை பேணல் போன்றவற்றை சொல்லி கொடுப்பதுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து உரையாடுவது ,அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுதல் ,பெற்றோர்களின் அன்பை குழந்தைகளுக்கு புரிய வைத்தல் போன்றவை மிக மிக முக்கியமானது நல்ல பெற்றோரும்,கல்வி சூழலும் ,ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குகிறது

‘நோ புட் வேஸ்ட்’ குழு!

கோவை போத்தனுாரை சேர்ந்த பத்மநாபன், தனது நண்பர்களுடன் இணைந்து, ‘நோ புட் வேஸ்ட்’ குழுவை உருவாக்கியுள்ளார்.

மீதமாகும் உணவை வீணாக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும், உன்னத சேவையை இக்குழுவினர் மேற்கொள்கின்றனர்.

கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில், இச்சேவை துவக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜன., மாதம் மட்டும், மீதமான உணவுகளை பெற்று, 24 ஆயிரத்து, 15 நபர்களுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளனர். இதுவரை, 4 லட்சத்து, 75 ஆயிரத்து, 54 பேர் பயனடைந்து உள்ளனர்.

இத்திட்டம், சமீபத்தில், சென்னையில் துவக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் சார்பில் ஒரு வாகனம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா, தனது சம்பளத்தில் இருந்து ஒரு வாகனம் வாங்கிக் கொடுத்துள்ளார். இவ்வாகன பயன்பாட்டை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

உணவு வீணாவதை தவிர்க்க உருவாக்கியுள்ள மொபைல் செயலி தொடர்பாக, அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ‘நோ புட் வேஸ்ட்’ குழுவினர் விளக்கினர். இச்செயலியை மாநிலம் முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் வகையில், அரசு சார்பில் செயல்படுத்த, மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் செயலி வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.

‘நோ புட் வேஸ்ட்’ குழுவினர் கூறுகையில், ‘உணவை வீணக்காதே; பகிர மறக்காத’ என்கிற அடைமொழியுடன், மீதமாகும் உணவை சேகரித்து, ஏழை எளியோருக்கு வழங்குகிறோம். நாங்கள் அறிமுகப்படுத்திய மொபைல் செயலியை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி உள்ளனர்.

‘மாநில அளவில், அரசு சார்பில் அறிமுகப்படுத்த, புதிதாக மொபைல் செயலி உருவாக்கும் பணி மேற்கொள்கிறோம். ஓட்டல்கள், லாட்ஜ்கள், கல்யாண மண்டபங்கள் விபரம் ஒருங்கிணைக்கப்படும். மண்டபங்களில் நிகழ்வு நடப்பதை, முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி செய்யப்படும். குழுவினர் தயாராக இருப்பர்; உணவு மீதமாகி இருந்தால், அவற்றை பெற்று, ஏழைகளுக்கு வழங்குவோம்’ என்றனர்

பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை

அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

 

தமிழகத்தில் வரும்மார்ச் மாதம் பத்தாம் வகுப்புபிளஸ் 1 மற்றும் பிளஸ்வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளனஇதைத்தொடர்ந்து தேர்வு மையங்கள் அமைப்பதுமுறைகேடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில்வியாழக்கிழமை நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் 32 மாவட்ட முதன்மைமாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே..செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதுமாணவர்கள் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்துபொதுத்தேர்வு எழுதி வந்தனர்இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இப்போது 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஇந்த ஆண்டு பத்தாம் வகுப்புபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில்மொத்தம் 27.29 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்இதற்காக கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதுதேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா அமைப்பது குறித்து ஆலோசித்துவருகிறோம்.

 

நீதிபோதனை புத்தகம்:

 

பள்ளிகளில் ஆசிரியர்கள்– மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் வருத்தமளிக்கிறதுமன அழுத்தம் காரணமாகவே இந்தப் பிரச்னைஏற்படுகிறதுஇதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஆசிரியர்கள்மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள்வழங்கப்படும்ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிதல்மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையில்அடுத்த ஆண்டுநீதிபோதனைகள்குறித்த புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்ஒழுக்கத்துடன் நல்ல பழக்கங்களை மாணவர்கள்கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம்.

 

48 மணி நேரத்துக்குள்

 

தமிழக மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதுஅதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு 48மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்விபத்தில் உயிரிழக்கும் மாணவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்,பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம்காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்இதற்கான அரசாணைவெளியிடப்பட்டுள்ளது என்றார்.

 

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேஷன்பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உயர்கல்விக்கு உயிர் கொடுப்போம்!

துணை வேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல், குளறுபடிகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிய துணைவேந்தர் பதவி பற்றி எல்லாம் தினமலர் நாளிதழில் நேற்று கட்டுரை வெளியானது. இதனை தொடர்ந்து மின்னஞ்சலில் வந்த கருத்துக்கள்…

 

பட்டங்கள் விற்கும் இடமாக பல்கலைகள்

இன்றைய சூழ்நிலையில் துணைவேந்தர், பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் போன்ற பணியிடங்கள் படித்த தகுதி, திறமை உள்ள சாதாரண குடும்பத்தினருக்கு எட்டாக்கனியாக போய்விட்டது. பணம் இருந்தால் தான் பதவிகள் கிடைக்கின்றன. ஊழல் துறையாக கல்வி மாறிவிட்டது. ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வு போல் உதவி பேராசிரியர் நியமனத்திலும் போட்டி தேர்வு முறை கொண்டு வரவேண்டும். அவர்கள் பி.எச்டி., நெட், ஸ்லெட் போன்ற கூடுதல் கல்வித் தகுதிக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றலாம்.ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களை துணைவேந்தர் அளவில் நிரப்பப்படுவதால் ஊழல், லஞ்சத்திற்கு வழி வகுக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பிஎச்.டி., ஆராய்ச்சி பட்டம், பணம் இருந்தால் தாராளமாக கிடைக்கும் வகையில் உள்ளது. யு.ஜி.சி., விதிப்படி வழிமுறைகளை கடினமாக்க வேண்டும். மதுரை காமராஜ் பல்கலையில் தற்போது பிஎச்.டி., சேர்க்கைக்கும் நுழைவு தேர்வு பின்பற்றப்படுகிறது. பிற பல்கலைகளும் இதை பின்பற்ற வேண்டும்.

— முனைவர் வெங்கடேசன், வழக்கறிஞர், மதுரை.

விண்ணப்பிப்பதற்கு கட்டுப்பாடு தேவை

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 100 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். துணைவேந்தர் தேர்வும் இழுபறியாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 10 பேருக்கு மேல் விண்ணப்பித்தாலே பெரிய விஷயம். ஆனால் இப்போது போட்டி அதிகமாகி விட்டது. இது ஆரோக்கியமானது தான் என்றாலும், து.வே., பதவிக்கு தகுதிகளை அதிகப்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகமாக்க வேண்டும். இதன்மூலம் தகுதியானவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்படும். மேலும் ஒரு துணைவேந்தர் பதவி காலியாகும் ஆறு மாதங்களுக்கு முன்பே, புதியவருக்கான நியமன நடைமுறைகளை துவங்க வேண்டும். இதன்மூலம் பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதை தவிர்க்க முடியும்.

-என். பழனிச்சாமி, ஓய்வு பெற்ற பேராசிரியர், திண்டுக்கல்.

நல்ல பல்கலை நல்ல சமூகம்

தேடல் குழு தேர்வு செய்யும் மூன்று பேருக்கு நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு துணைவேந்தர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இது போதாது. அவர்களுக்கு எழுத்து மற்றும் நிர்வாகம் அடிப்படையிலும் தேர்வு வைக்க வேண்டும்.கல்வி தகுதி, அனுபவம், நன்னடத்தை சார்ந்த தனி தேர்வும் வைத்து அதன் மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். இவர்களை நேர்மையான கல்வியாளர்கள் மூலம் தேர்வு செய்து, அதை சம்மந்தப்பட்ட பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் அறிந்து, அவர்களிடமும் கருத்துக்கேட்டு முடிவு எடுக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக அரசியல் தலையீடு, சிபாரிசு இருக்க கூடாது. அப்போது தான் சிறந்த பேராசிரியர்களும், மாணவர்களும், சிறந்த நாடும் வீடும் உருவாகும். நல்லதொரு பல்கலை நல்லதொரு சமூகத்தின் அடையாளம். இந்த கனவை நிறைவேற்றுவோம்.- ராஜ்குமார் விஜயா, சமூக ஆர்வலர், மதுரை.

கருத்து சொல்லுங்கள்! : தமிழக உயர்கல்வித்துறையில் ஊறிப்போயிருக்கும் ஊழலை ஒழிக்க என்ன வழி? முறைகேடுகளின் கூடாரங்களாக மாறிப்போன பல்கலைக்கழகங்களை, கல்விக்கோயில்களாக மாற்ற என்ன வழி? பல்கலை வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்வது எப்படி? வாசகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பட்டதாரிகள், மாணவர்கள் கருத்துக்களை ‘உயர் கல்விக்கு உயிர் கொடுப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை 625 016’ க்கு அனுப்பலாம்

ரத்தம் சிந்தும் வகுப்பறைகள்: நாம் என்ன செய்ய வேண்டும்? ஆயிஷா. இரா.நடராசன்

வகுப்பறைகளில், பள்ளி வளாகங்களில் அதிகரித்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சிதருகின்றன. ஆசியரை மாணவர் தாக்குகிறார்; மாணவரை ஆசிரியர் தாக்குகிறார். பள்ளி – புத்தகப் பையில் கத்தி எடுத்துவந்து மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியரைத் தாக்கிய சம்பவம்தான் திருப்பத்தூரில் அரங்கேறி இருக்கிறது. காஞ்சிபுரம் ஆசிரியை உமாமகேஸ்வரி வகுப்பறையில் கொல்லப்பட்ட சம்பவமும் சரி, திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் பாபுவுக்கு நிகழ்ந்துள்ள சம்பவமும் சரி, ஆசிரியர்களிடையே ஏற்படுத்தும் உணர்வு ஒன்றே ஒன்றுதான்.. ‘மாணவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ கூடாது என்றால், இப்படித்தானே நடக்கும்’ என்பதே அவர்களது வாதம்.

 

ஆசிரியையின் சுடுசொற்களால் கிணற்றில் விழுந்து மாணவியர் உயிரை மாய்த்துக்கொண்டது முதல், பள்ளிக் குத் தாமதமாக வந்ததற்கான தண்டனையால் (வாத்து போல நடப்பது) மனமுடைந்து உயிரைவிட்ட மாணவப் பிஞ்சு வரை மிகுந்த வருத்தம் தரும் சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம். இவற்றையெல்லாம் எப்படிப் பார்ப்பது?

உண்மையான காரணம் என்ன?

அறிவுச்சுடர் பிரகாசிக்க வேண்டிய வகுப்பறைகள் ரத்தம் கொட்டும் கொட்டடிகளாக மாறியது ஏன்? ஒருபுறம் மாணவர்களின் மன அழுத்தமாக மாறும் இன்றைய பெற்றோரின் அபரிமிதமான எதிர்பார்ப்புகள். மறுபுறம் ஆசிரியர்களுக்கு அதிகரிக்கும் வேலைப் பளு. 200 வேலை நாட்களில் முடிக்க வேண்டிய பாடங்களை 120 வேலை நாட்களில் முடித்துவிட வேண்டிய நிர்ப்பந்தம். இது மதிப்பெண்ணுக்கான யுத்தம். பிரதமரே மாணவர்களை ‘தேர்வு யுத்த வீரர்கள்’ (Exam – Warriors ) என்றழைக்கும் அளவுக்கு வகுப் பறையைப் போர்க்களமாக மாற்றிவிட்டோம். நீட் தேர்வு, 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என புதிதுபுதிதாய் முளைக்கும் தேர்வுகள்; இவை தொடர்பான பரபரப்பான விவாதங்கள் என்று கல்விச் சூழல் பெரும் மாற்றங்களைச் சந்தித்துவருகிறது.

ஆசிரியரைக் கத்தியால் குத்துவது, தன்னையே பிளேடால் கிழித்துக்கொள்வது, தற்கொலை, சக மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் சம்பவங்கள் ஒருபுறம் என்றால், பள்ளிக்கூடத்தில் மின்விளக்குகள், சுவிட்சுகளைச் சேதப்படுத்துவது, தண்ணீர்க் குழாய்களை நொறுக்குவது, கண்ணாடி சன்னல்களின் மேல் கல் எறிவது, ஆசிரியர்களின் வாகனங்களைச் சேதப்படுத்துவது எனப் பல்வேறு சம்பவங்களில் சில மாணவர்கள் ஈடுபடு வது உண்டு. விசாரித்தால், ‘ஏன் அப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்று சொல்வார்கள். உண்மையில், பல்வேறு அடுக்குகள் கொண்ட பிரச்சினை இது.

மாறிவரும் அணுகுமுறைகள்

வகுப்பறைப் பிரச்சினைகளின் ஆணிவேரைத் தேடிப்போகும்போது, உடற்கூறியல் முன்வைக்கும் மூன்று அடிப்படைகளைப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்று மரபியல், உடல்கூறியல், நரம்பியல் துறைகளில் நடந்துள்ள ஆழமான சோதனைகளின் முடிவுகள், குழந்தை வளர்ப்பு, கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகள் பற்றிய நமது பழைய அணுகுமுறைகளைத் தகர்த்தெறிபவையாக உள்ளன. உலக அளவில் நரம்பியல் நோபல் அறிஞர் ரோஜர்ஸ்பெரி, கல்வியாளர் இயான் கில்பர்ட் போன்றவர்கள் இதுபோன்ற ஆய்வு முடிவுகளை முன்வைத்திருக்கிறார்கள்.

கட்டி முடிக்கப்படாத அதாவது, முழுமை பெறாத கட்டிடங்களாக மாணவர்களைக் கருதலாம். கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தோடு நாம் அவர்களை ஒப்பிட வேண்டும் என்கிறது நரம்பியல். அதன் வடிவமைப்பு நிபுணர்கள் ஆசிரியர்கள்தான் என்றும், மாணவர்களின் துர்நடத்தைகளுக்குப் பள்ளிச் சூழலே காரணம் என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மை யான காரணம், வளர்ச்சி முழுமை பெறாத முன்மூளைப் புறணி (Prefrontal Cortax) தான் என்கிறது நரம்பியல். பி.எஃப்.சி. என்று அவர்கள் அழைக்கும் இந்தப் பகுதி முழுமையாக வளர்ச்சி காண, 19 வயது வரை ஆகும். முன்மூளைப் புறணிதான் ஒருவர் பெரியவரா சிறார் பருவத்தில் இருப்பவரா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய பாகம். 18 வயது வரை ஒருவர் சிறார்தான் என்று யுனெஸ்கோ கூறுவது இதை அடிப்படையாக வைத்துதான். சரியான குறிக்கோள் நோக்கிய செயலாக்கம், சட்டம், தர்மநியாயங்கள் அறிதல், வேலை நினைவாற்றலைத் தக்கவைத்தல், சமூகக் குழு அங்கீகாரம் இவை அனைத்தையும் தீர்மானிப்பது முன்மூளைப் புறணிதான். அதன் அரைகுறை வளர்ச்சிதான் நடத்தைச் சிக்கல்களைச் சிறார்களுக்கு ஏற்படுத்துகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

மூளையின் இருபுறமும் இருக்கும் உறுப்பு அமைக்டாலா (அமைக்டாலா என்றால் கிரேக்க மொழியில் பாதாம்பருப்பு என்று பொருள். இந்த உறுப்பு, அளவிலும் வடிவிலும் பாதாம்பருப்பைப் போலவே இருக்கும்). இது 20 வயது வரை முழுமை பெறுவது கிடையாது. இந்த மூளைப் பகுதிதான் உங்கள் அன்றாட வாழ்வைக் கால நேரப்படி ஒழுங்குசெய்கிறது. குழந்தையின் முழுமை பெறாத அமைக்டாலாவின் தூண்டல்கள் பலவிதங்களில் வெளிப் படுகின்றன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்க்க மறுக்கப்பட்டால் ஆத்திரப்படுவது, விருப்பமில்லாத உணவுகளைத் தூக்கி வீசுவது, காரணமற்ற அழுகை, ஒவ்வாமை, அச்ச உணர்வு, கவனச்சிதைவு போன்றவற்றுக்கு இந்த அமைக்டாலாதான் முக்கியக் காரணம். சின்ன வெற்றிகளுக்கும் மனம் நிறைந்து பாராட்டுவதே அமைக்டாலா தூண்டுதலைக் கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என்கிறார்கள் நிபுணர்கள்.

ஹார்மோன் பிரச்சினைகள்

தொடர்ந்து வசைகளுக்கும் புறக்கணிப்புக்கும் அவமானங்களுக்கும் ஆளாகிற மாணவர்கள், அடைவதற்குக் கடினமான இலக்குகள் தங்கள் மீது திணிக்கப்படுவதாகக் கருதும் மாணவர்கள் மனஅழுத்த நிலையை எதிர்கொள்ள நேர்கிறது. மரபணுக்கள் இயல்பூக்கம் பெற்று வாசோப்ரெசின் (vasopressin) எனும் ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதே மாணவர் மன அழுத்த நிலை என்று சொல்கிறார்கள். இது கற்றலுக்கு எதிரான ஹார்மோன். இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட சிறார்கள், எதிர்த்துச் செயல்படுதல் அல்லது சூழலில் இருந்து தப்பிக்க முயற்சிசெய்தல் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் fight or flight என்கிறார்கள். எதிர்த்துச் செயல்படுதலைத் தேர்வுசெய்யும் மாணவர் பள்ளிக்குக் கத்தியுடன் வருகிறார். தப்பிவிடுதலே தன் வழி என்று கருதும் மாணவர் தற்கொலை செய்துகொள்வது அல்லது ஊரை விட்டே ஓடுவது என்ற முடிவுக்குவருகிறார். முடிவு எடுப்பதை தள்ளிப்போடும்போதோ அல்லது மனம்விட்டுப் பேச அனுமதிக்கப்படும்போதோ இறுக்கம் விடுபட்டு, இந்த ஹார்மோன் கரைந்துவிடுகிறது. இந்த நிலையில் இருக்கும் மாணவர்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று இரு தரப்பினரும் கவனம் செலுத்துவது அவசியம்.

ஆசிரியர்களுக்கு அணுகுமுறைப் பயிற்சி

குழந்தைகளின் உளவியல் குறித்த அணுகுமுறைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு முறையாகத் தரப்பட வேண்டும். பாடத்தை விடவும் அது அவசியம். உலக அளவில் பள்ளிகளில் நடக்கும் வன்முறைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள், பதின் பருவ மூளை – உளவியல் குறித்த நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு, இங்கு பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு இல்லை. இது வருத்தத்துக்குரிய விஷயம்.

முன்கூட்டியே பாடங்களை முடிப்பது, தேர்வில் வெற்றி விகிதத்தை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட கடுமையான இலக்குகளின் அழுத்தத்தை இன்றைக்கு ஆசிரியர்கள் சந்திக்கிறார்கள். இந்தச் சூழல் ஆசிரியரை அதிகார மையமாக மாற்றிவைத்துள்ளது. ‘பாடத்தைக் கவனி.. பேசாதே’ என்று மாணவர்களிடம் கடுமை காட்டும் சூழலே இருக்கிறது. மாணவர்களை வெறுமனே பார்வையாளர்களாக மட்டுமே கருதும் நிலை அது. மாறாக, ‘பேசு.. நீ என்ன நினைக்கிறாய் என்பதை என்னிடம் சொல்’ என்று மாணவர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றும் அணுகுமுறைதான் மிகமிக அவசியம். பள்ளிச் சூழலில் இன்றைக்கு நிலவும் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு அதுதான்.

வீட்டிலும், சமூகத்திலும் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்று ஆசிரியர் மீது மாணவருக்கு நம்பிக்கை ஏற்படும் சூழல் உருவாக வேண்டும். மாணவர் நாடும் நல ஆலோசகராக இருப்பவரே இன்றைய சரியான ஆசிரியர். ஆனால், நமது கல்விமுறையில் மாணவர்கள் கலந்துரையாடவோ பேசவோ இடமில்லை. ‘மனப்பாடம் செய். எழுதிப்பார். மதிப்பெண் பெறு’ என்று பேசும் நிலையில்தான் ஆசிரியர் – மாணவர் உறவு இருக்கிறது. இதில் மிகப் பெரிய அளவில் மாற்றம் தேவை. இதற்கு நம் கல்வித் துறை தயாரா?

-ஆயிஷா. இரா.நடராசன்,

நீட்: தமிழ் உள்பட 10 மொழிகளில் கேள்வித்தாள்:

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட உள்ளன.
மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே, தங்களுக்கான மொழியைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
2018
ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கையை சிபிஎஸ்இ வியாழக்கிழமை வெளியிட்டது. அன்றைய முதலே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும். இதற்கு www.cbseneet.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ் உள்பட 10 மொழிகளில் கேள்வித் தாள்: நீட் தேர்வுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து கொள்குறி தேர்வு முறையில் (நான்கு விடை கொடுத்து சரியான ஒன்றைத் தேர்வு செய்யும் முறை) 180 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத் திட்ட விவரங்கள் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள நீட் தேர்வு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தேர்வுக்கான கேள்வித் தாள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அசாமி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒரியா, தெலுங்கு, உருது என 10 மொழிகளில் வழங்கப்படும். இதற்கான விருப்பத்தை விண்ணப்பிக்கும்போதே மாணவர்கள் குறிப்பிட வேண்டும்.
அனுமதிச் சீட்டு : தேர்வுக்கான அனுமதிச் சீட்டானது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும். இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நீட் தேர்வு முடிகள் ஜூன் 5 (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும்.
நீட் தகுதி: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் மாணவர் எடுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொண்டு, நீட் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை சிபிஎஸ்இ நிர்ணயிக்கும். அதாவது தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் 600 எனில், அது 100 சதவீத மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படும். அடுத்த மதிப்பெண் 569 எனில், அது 99 ஆவது சதவீத மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படும். இவ்வாறான மதிப்பெண் நிர்ணயத்தில் , பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50 ஆவது சதவீத இடத்தைப் பிடித்திருக்க வேண்டும்.
இல்லையெனில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது. அதுபோல மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 45 ஆவது சதவீத இடத்தையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் குறைந்தபட்சம் 40 ஆவது சதவீத இடத்தையும் பெறவேண்டும்.
இந்த கணக்கீடு முறையில் சிபிஎஸ்இ தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கும். இதனடிப்படையில், மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், மருத்துவக் கலந்தாய்வு குழு மூலம், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கலந்தாய்வு மூலம் நிரப்பும்.
மாநில அரசுகள், அவற்றிடம் உள்ள மருத்துவ இடங்களுக்கு இந்தத் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், அந்தந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
என்னென்ன எடுத்துச் செல்லக் கூடாது?: தேர்வெழுத வரும் மாணவர்கள் துண்டுக் காகிதம், பேனா, பென்சில் பாக்ஸ், ரப்பர், பிளாஸ்டிக் பவுச், பென் டிரைவ், கால்குலேட்டர், செல்லிடப்பேசி, புளூடூத், இயர் ஃபோன், கைப் பை, என எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. குறிப்பாக பெல்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்கக் கூடாது.
மேலும் மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், நெக்லஸ், டாலர், பேட்ச், வாட்ச், பிரேஸ்லெட் என எந்தவொரு உலோகப் பொருளும் அணிந்திருக்கக் கூடாது. அதோடு, குடிநீர் பாட்டில் உள்ளிட்ட எந்தவொரு சாப்பாட்டு பொருளும் உடன் எடுத்துவரக் கூடாது.
ஆடைக் கட்டுப்பாடு: தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் லேசான அரை கை வைத்த ஆடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும். காலில் ஷூ அணியக் கூடாது. செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். அதுவும் குறைந்த ஹீல்ஸ் உள்ள செருப்புகளையே அணிய வேண்டும்.
தேர்வுக்குப் பிறகும் வைத்திருக்க வேண்டியது: மாணவர்கள் தேர்வு முடிந்து பிறகு மருத்துவப் படிப்புகளில் சேரும் வரை சில ஆவணங்களை தங்களுடன் வைத்திருப்பது நல்லது என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான உத்தரவாத பக்கத்தின் 3 நகல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான சான்று, விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தைப் போல 5 மார்பளவு புகைப்படங்கள், தேர்வறை அனுமதிச் சீட்டு ஆகிய ஆவணங்களை மருத்துவப் படிப்பில் சேரும் வரை வைத்திருக்குமாறும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது

மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு

மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கல்விக்கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் இல்லாத சூழலும், திறன்மிகு வகையில் செயல்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இதற்காக “வித்யாலட்சுமி”எனும் போர்ட்டலை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அந்த போர்டெல் மூலமே மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வித்யா லட்சுமி போர்டெல் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமின்றி, கல்விக்கடன் தொகை குறித்தும் நிர்வகிக்கும்.இந்த போர்டல் மூலம் இதுவரை 36 வங்கிகள் 13 ஆயிரத்து 190 மாணவர்களுக்கு கல்விக் கடனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வித்யா லட்சுமி போர்டலை நிர்வகிக்கும், என்எஸ்டிஎல் இ நிர்வாக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிககன் ராய் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை அமைப்பு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நேரடியாக பெறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அதற்கு மாற்றாக, வித்யா லட்சுமி எனும் போர்டல் மூலமே கல்விக்கடன் விண்ணப்பங்களை பெற வேண்டும். அதன் மூலமே கல்விக்கடன் தொடர்பான பணிகள், ஒதுக்கீடு அனைத்தும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.ஏற்கனவே லட்சக்கணக்கான மாணவர்கள் வித்யா லட்சுமி போர்டலுக்கு வந்து பதிவு செய்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம், கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் போலியானவர்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவது எளிதாகும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்இவ்வாறு அவர் தெரிவித்தார்.நாடட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த போர்ட்டலை தொடங்க உத்தரவிட்டது.