தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனிமேல் ஊக்கத்தொகை என்று ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களை நியமிக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம் பிடித்தனர். தினக்குளம் அரசுப் பள்ளி கட்டடம் தரமற்ற பொருள் கொண்டு கட்டப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியது.
பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஐகோர்ட் மதுரைக் கிளை தாமாக விசாரணை நடத்தியது. பின்னர் பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்கள் கேள்விக்கு பதிலதர முடியாமல் ஓட்டம் பிடித்தனர்
‘எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே, 26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, இன்று துவங்குகிறது.
நாட்டின் உயரிய மருத்துவ கல்வி நிறுவனங்களாக, மத்திய அரசின், ‘எய்ம்ஸ்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 26 மற்றும், 27ல் நடத்தப்படும் என, எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துஉள்ளது. அதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு, கணினி வழியில் மட்டுமே, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க, இன்று முதல் மார்ச், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வர், குண்டூர் உட்பட, ஒன்பது இடங்களில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முடங்கியுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் புரொஜெக்டர் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நவீன தொழில்நுட்பத்தில் படக் காட்சிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் மனதில் பாடங்கள் எளிதாக பதிவாகும். அதனால் இத்தகைய முறை தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு அரசால் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஓஎச்பி புரொஜெக்டர், மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாட வகுப்புகள் தொடர்பான குறுந்தகடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு படக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்வம், முயற்சியின் காரணமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்கான நவீன தொழில்நுட்ப கருவிகள் இருந்த போதிலும் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படாமல் அவை முடங்கிப்போயுள்ளன.
அவ்வாறு முடங்கி போயுள்ளதற்கு காரணம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் ஆர்வம் இல்லாததே ஆகும். அதனால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன.
ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நவீன தொழில்நுட்ப முறையிலான கல்வி கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளே சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகளில் சரிவர நடத்தப்படாமல் முடங்கிப்போயுள்ளது.
புதிதாக 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகளும், புதிதாக தொடங்கப்பட உள்ள ஸ்மார்ட் வகுப்புகளும் சரிவர நடத்தப்படுகிறதா என கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
அதனால் கல்வித் துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படாத பள்ளிகளில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஸ்மார்ட் வகுப்புகள் சரிவர நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் வகுப்புகளை நடத்தாத பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என முடிவெடுத்து அரசு நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்கள், பாட திட்டங்கள் சரிவர செயல்படுத்தாமல் விடப்படுவதால் தான் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளித்தால் தான் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்த இடத்தை எட்டும் என்பது பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தை, அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா என்பதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நெற்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, கிரீன் பீல்டு கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கான அனைத்து செலவுகளையும், கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், கல்விக் கட்டண நிர்ணயக் குழு தற்போது தங்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது.
தனியார் பள்ளிகளின் சார்பில் வழக்குரைஞர்கள் தங்கசிவன், அருள்மேரி மற்றும் மூத்த வழக்குரைஞர் சேவியர் அருள்ராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு வலியுறுத்துகிறது.
அதனடிப்படையில், ஆசிரியர்களின் நியமனத்தைக் கணக்கிட்டு அக்குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதலான ஆசிரியர்களை நியமிக்கின்றன. இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதைக் கட்டண நிர்ணயக் குழு கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்துள்ள உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
இப் பள்ளிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க, கல்விக் கட்டண குழுவுக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் குறைந்தபட்ச ஆசிரியர் நியமனம் பற்றிய விவரம் உள்ளது. ஆனால் அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற தனியார் பள்ளிகளில் உள்ள கூடுதல் ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கட்டண நிர்ணயக்குழு பரிசீலிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மாணவர்களின் நலன் கருதி, தனிப்பட்ட மாணவர்களிடம் கவனம் செலுத்தும் வகையில், அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்கள், சிறப்பான ஆசிரியர், மாணவர் விகிதாசாரத்தை அளிக்க விரும்பினால், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
எனவே அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தைப் பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிப்பது உகந்ததாக இருக்கும். எனவே இதை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி,
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
புதுடில்லி: சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள்,
முனைவர் பட்டப் படிப்பில் சேர, ‘பெல்லொஷிப்’ திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
‘ஏகலைவா’ பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.
எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, ‘ஏகலைவா’ பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.
சன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன. அதற்கான ஏற்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளன. வினாத்தாள்கள், அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி துவங்கும்.
கடந்த ஆண்டில், வேதியியல், பொருளியல், உயிரியல், வேளாண் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான, வினாத்தாள்களில் விடைக்குறிப்புகள் தவறாக இருந்தன.
இரண்டு வகை விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின், விடைத்தாள் திருத்தத்தின் போது, கருணை மதிப்பெண் வழங்கி, அதை சரிக்கட்டினர்.
எனவே, இந்த ஆண்டு தேர்வுகளில், வினாத்தாள்களில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்றும், அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
‘கற்பிக்கும் மொழி வாரியாக, சரியான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும். மாணவர்களின் உண்மையான கல்வித் திறனை சோதிக்கும் வகையில், வினாத்தாள்கள் இருக்க வேண்டும். வினாத்தாள்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றும், ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது.
சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி
உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாணை : தொழிற்கல்வி கற்கும்ஏழை மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர, முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, நிதியுதவிவழங்கும் திட்டம், 2003ல், துவக்கப்பட்டது. இதன்படி, ஆண்டு தோறும், 100 மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பின், இந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின், பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு, 2015 – 16ல், 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு : முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தும், தொழிற்கல்வி படிக்க முடியாமல், மிகவும் வறிய நிலையில் உள்ளோரும், தொழிற்கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை, மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்கப்படும்