‘மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது’ : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை’

‘மாணவ – மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என,பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புகார் :

பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே,மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ – மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.

நடவடிக்கை :

தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.’மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். ‘மாறாக, மாணவ – மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. ‘மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என, எச்சரித்துள்ளனர்

இன்ஜி., படிப்புக்கு, ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன்சென்னைக்கு வரவேண்டாம்!

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்’என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி, மாணவர்களும், பெற்றோரும், பெட்டி, படுக்கையுடன், சென்னைக்கு வர தேவையில்லை.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், தமிழக அரசின் சார்பில், பொது கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

ஒற்றை சாளர முறையில் நடக்கும் இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இதற்காக, சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு, மாணவியர், அவர்களின் பெற்றோர் தங்குவதற்கு, இலவச விடுதி வசதி செய்யப்படும். மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு நபருக்கு, அரசு பஸ்சில் சென்னைக்கு வர, இலவச கட்டண சலுகை தரப்படும்.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைனுக்கு மாற்றப்படுகிறது. இதை, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், நேற்று உறுதி செய்தார்.

இதற்கான ஏற்பாடுகள், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் துறை தலைவரும், ராமானுஜன் கணினி மைய இயக்குனருமான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில், கவுன்சிலிங் பணிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின்வசதிக்காக, 32 மாவட்டங்களிலும், கவுன்சிலிங் உதவி கணினி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த மையங்களில், கணினியுடன், உயர்தர இணையதள வசதி செய்யப்பட்டிருக்கும். மாணவர்கள் அங்கு சென்று, சேர்க்கையில் பங்கேற்கலாம்.

மேலும், வீட்டில் இணையதளத்துடன் கூடிய, கணினி வசதியுள்ள மாணவர்கள், வீட்டில் இருந்தவாறே கல்லுாரியையும், பாட பிரிவையும் தேர்வு செய்யலாம்.கவுன்சிலிங் மையத்தில், தனியார் கல்லுாரி தரகர்கள் முகாமிட்டு, மாணவர்களை தங்கள் கல்லுாரிகளில் சேர வைக்கும் பிரச்னைகளுக்கு, இனி இடம் இருக்காது. கவுன்சிலிங்கிற்காக, அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளுக்கான செலவுகளும் குறையும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.