புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உருவாக்கம் – தமிழக அரசு

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்விஇயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள ரூ.2,109.08 கோடி மற்றும் 1,092.22 கோடியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

ஆனாலும், மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனைக் கருதி, இத்திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்தஇரண்டு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2019-20-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இதனை செயல்படுத்த2019-20-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்துக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.248.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை – அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்

கல்வி தரம் குறைய கல்விதுறை அதிகாரிகளே காரணம்: நீதிபதி

தமிழகத்தில் கல்வி தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகளே காரணம் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறினார்.

ஆசிரியை வசந்தி என்பவர் தன்னுடைய தலைமை ஆசிரியை பதவி உயர்வை கல்வி அதிகாரி அங்கீகரிக்கவில்லைஎன கூறி வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். வழக்கில் கல்வி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவுஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது:

தலைமை ஆசிரியையின் பதவி உயர்வை அங்கீகரித்து 2 வாரங்களில் பணப்பலன்களை வழங்க வேண்டும். வழக்கில்தென்காசி மாவட்ட கல்விஅலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் அபராதத்தை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு 10 நாட்களில் வழங்க வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டதை அலுவலரின் பணி பதிவேட்டில் பதிய வேண்டும். மேலும் இது போன்ற உத்தரவு தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுகள்; எந்தெந்த வழிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன?- ஆசிரியர்கள், அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,
இத்துறையில் எந்தெந்தவழிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறுதகவல்களை தெரிவித்துள்ளனர்.

கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மாணவர்களுக்கான ‘தேன் சிட்டு’ மாத இதழ்தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி, புதியபாடத்திட்ட தயாரிப்பு திட்டத்துக்கானநிதி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஆன்லைன் மூலமாக தமிழ்கற்றுக்கொடுக்கும் ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்ட நிதி போன்றவை தவறாகபயன்படுத்தப் பட்டிருப்பதாக லஞ்சஒழிப்புத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.பள்ளிகளில் கட்டிடம், ஆய்வகம்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி, இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, காலணி, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட 14 விதமான நலத்திட்டங்கள், ஸ்மார்ட் கிளாஸ் என வெவ்வேறு திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெவ்வேறு துறைகள் மூலம் அவை நிறைவேற்றப்படுகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பணியிடைப் பயிற்சி, கற்பித்தல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாத நிலையில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:பொதுவாக பள்ளிக்கல்வித் துறையில் எழும் முதன்மையான குற்றச்சாட்டு ஆசிரியர் இடமாறுதலில் நடக்கும் முறைகேடுகள். பணிமூப்பு உட்படஇடமாறுதலுக்கென பல்வேறு விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் மீறி தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கேட்கின்ற இடத்துக்கு இடமாறுதல் கொடுத்துவிடுகிறார்கள். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும், நிர்வாக இடமாறுதல் என்ற பெயரிலும் கணிசமான இடமாற்றங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுஇடமாறுதல் நேரத்தில் கலந்தாய்வின்போது முறைகேடு என்று சொல்லி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், மறியலில் இறங்குவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன.

வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அப்பணியை ஒதுக்கீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது. இதேபோல, இலவச சீருடை, நோட்டுகள், காலணி, ஸ்கூல் பேக், சைக்கிள், லேப்டாப் என 14 விதமான பொருட்களைகொள்முதல் செய்வதிலும் இதே குற்றச்சாட்டு எழாமல் இல்லை.பெரும்பாலான நேரங்களில் அரசியல் தலையீட்டின் காரணமாக, சரியான பாதையில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைக்கு உயர்அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். இந்த வேலையை இன்னாருக்கு கொடுங்கள் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தும்போது வேறுவழியின்றி அதைச்செய்ய வேண்டிய நிலை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

366 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போதிய விளையாட்டு மைதானம் இல்லை, கழிவறை, குடிநீர், தீ தடுப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், கூடுதல் கட்டணம் வசூலித்து அங்கீகார விதிகளை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்வுகள் நெருங்கி உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்கிடையே, பல பள்ளிகள் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனி ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ…

பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்வி கூடங்களில் கணினி மயாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள்ளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பள்ளிகளில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி காலையும், மாலையும் கூட சிறப்பு வகுப்புக்கள் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். அத்துடன் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது ’’ என அவர் தெரிவித்தார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு புது சிக்கல் !

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடப்பது போல இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கணக்கில் கொண்டு மாணவர்களும் பள்ளிகளும் 11 ஆம் வகுப்பைப் பாடங்களைப் படிக்காமல் நேரடியாக 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை நடைமுறையில் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தோல்வி அடையச்செய்யாமல் வெற்றிப் பெற வைக்கும் இந்த முறையால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவ, மாணவிகள், அடுத்த இரண்டு மாதங்களிலேயே மறுத்தேர்வை எழுதலாம் என்றும் அதிலும் தோல்வி அடையும் மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து இன்னொரு ஆண்டு படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அதிகமாகும் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.