மழலையர் பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் ஆபத்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது.
ஆனால், மழலையர் வகுப்புகளை அதுபோன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இதுதான் மாண்டிசோரி முறையிலான கல்வியாகும். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.
எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்
School Voice
Tamilnadu All Private Schools Association