சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகனை தமிழக அரசின் 104 சேவை வழங்குகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நெருங்குவதைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்குத் தேவையான ஆலோசனை 104 சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளில் தேர்வு சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 104 சேவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
தேர்வுக்குத் தயாராகுதல், தேர்வு காலத்தின் போது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்று 3 பிரிவுகளாக ஆலோசனை வழங்கப்படும்.
மேலும் உணவு முறை, மன அழுத்தத்தைப் போக்குவது, நினைவாற்றலை பெருக்குது, தேர்வு பயத்தைப் போக்குவது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது, தவறான முடிவுகளைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் 24 மணி நேரமும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.