சென்னை: சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் ( N.C.E.R.T-யின் ) பாடப்புத்தகங்கள் மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிலேயே இதனை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. N.C.E.R.T-யின் பாடப் புத்தகங்களை பயன்படுத்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்புடையவை இல்லை என்றும் சில கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேறுபட்ட சமூக பண்பாட்டு சூழல் உள்ளதால், ஒரே பாடப்புத்தகம் என்ற முறை தேவையற்றது என்று கூறியுள்ளனர். மேலும் காலஅவகாசம் கூட அளிக்காமல் திடீரென மாற்றம் செய்வது பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை வெகுவாக பாதிக்கும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். CBSE பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதால் பெற்றோர்களுக்கு கூடுதுல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். CBSE பாடப்புத்தகங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வாங்கி பயன்படுத்துவதால் செலவு அதிகம் என கருதப்படுகிறது. இதனால் N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.