மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யாத நிலையில், மாணவர்கள், 103 பேரையும், பெற்றோர் அனுப்ப மறுத்து விட்டனர். இதனால், நேற்று கத்திரிப்பட்டி நடுநிலைப்பள்ளி வெறிச்சோடியது.

 

சேலம் மாவட்டம், காவேரிபுரம் ஊராட்சி, கத்திரிமலை அடிவாரமுள்ள, கத்திரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், மொத்தம், 103 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

 

இதில், ஒரு தலைமைஆசிரியர், நடுநிலைப்பள்ளிக்கு, இரு பட்டதாரி ஆசிரியர்கள், துவக்கப்பள்ளிக்கு, மூன்று இடைநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், ஏழு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

 

தற்போது, ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். துவக்கப் பள்ளிக்கான மூன்று இடைநிலை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளன.

 

அவ்வப்போது வேறு பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியரை, தற்காலிகமாக கத்திரிப்பட்டி பள்ளியில் நியமிப்பது வழக்கம். தற்காலிக ஆசிரியரும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை.

 

‘இடைநிலை ஆசிரியரை நியமிக்கும் வரை, மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை’ என, அப்பகுதி பெற்றோர் முடிவு செய்தனர். 

 

நேற்று, 103 மாவர்களையும் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.தலைமை ஆசிரியர் நேற்று விடுப்பில் சென்று விட்டார். 

 

மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்ததால் பள்ளி வெறிச்சோடியது.

 

கொளத்துார் உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளிக்கு சென்று பேச்சு நடத்த மாணவர்களின் பெற்றோரை அழைத்தார். ஆனால், பெற்றோர் மறுத்து விட்டனர்.