5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு புது சிக்கல் !

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடப்பது போல இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தன. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வைக் கணக்கில் கொண்டு மாணவர்களும் பள்ளிகளும் 11 ஆம் வகுப்பைப் பாடங்களைப் படிக்காமல் நேரடியாக 12 ஆம் வகுப்புப் பாடங்களைப் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை நடைமுறையில் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தோல்வி அடையச்செய்யாமல் வெற்றிப் பெற வைக்கும் இந்த முறையால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவ, மாணவிகள், அடுத்த இரண்டு மாதங்களிலேயே மறுத்தேர்வை எழுதலாம் என்றும் அதிலும் தோல்வி அடையும் மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து இன்னொரு ஆண்டு படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அதிகமாகும் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிப்.21-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காததற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

மழலையர் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை

மழலையர் பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் ஆபத்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது.
ஆனால், மழலையர் வகுப்புகளை அதுபோன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இதுதான் மாண்டிசோரி முறையிலான கல்வியாகும். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.
எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வராமல் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் திறக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.  பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விழுப்புரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டனர்.

இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், போராட்டம் காரணமாக அரசு பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைத்து பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

நான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா?” ஆசிரியை ஆதங்கம்!

சமீபத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் ஒரு முடிவு, ஆசிரியர்கள் மத்தியில் பலத்த அதிர்வையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையங்களைப்  பள்ளியோடு இணைத்து, கேஜி வகுப்புகள் தொடங்கும் அரசின் திட்டத்திற்கு புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், உபரி ஆசிரியர்களை அங்கு  பணி மாற்றம் செய்யவிருக்கிறது அரசு.

இதனால், பலரும் பாதிக்கப்படுவதாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். பாதிக்கப்படும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பேசினேன்.

“இந்தத் திட்டத்தில், உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்துவதாகக் கூறியிருந்தார்கள். ஆனால், என்னையும் அங்கன் வாடிக்கு மாற்றியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் பள்ளியில் 40 + மாணவர்கள், என்னையும் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள்தான்.

30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே அரசின் கணக்கு. அப்படியெனில், நான் எப்படி உபரி ஆசிரியராவேன். நான் மட்டுமல்ல, கறம்பக்குடி ஒன்றியத்தில் ஒரேயொரு உபரி ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். ஆனால், 12 ஆசிரியர்கள் இந்தப் பணி மாறுதலுக்கு உள்ளாகியுள்ளனர். அது எப்படி?

சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய ஆசிரியர் தேர்வில் போட்டிபோட்டு, சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வாகி வந்தோம். இப்படி சிரமப்பட்டு வந்தது, அங்கன்வாடிக்குச் செல்லத்தானா? மேலும், கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி முறை என்றும் சொல்கிறார்கள்.

எனவே, அந்தக் குழந்தைகளைக் கையாளும் விதங்களை நாங்கள் படிக்கவில்லை. எங்களைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றப்போவதாகவும் தகவல்களைக் கேள்விப்படுகிறோம் . இது எங்களின் பணி உயர்வு, இடம் மாறுதல் உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும். இதெல்லாம் யோசிக்கையில் மனச்சோர்வாகிறது.

நான் அங்கன்வாடி மையத்துக்குப் போய்விட்டால்,  என் வகுப்பை யார் கவனிப்பார்கள்? ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள 47 மாணவர்களை ஒரு ஆசிரியரால் எப்படிக் கையாள முடியும்?

ஒருவேளை என் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தால், அதை எப்படி எடுத்துக்கொள்வது? அந்த வேலைக்குத் தகுதியுடையவர் என்றுதானே என்னைத் தேர்வுசெய்தார்கள். பி.ஜி முடித்து, பி.எட் படித்த என் கல்விக்கு என்ன மதிப்பு?” என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார்

தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்: அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் . அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம்.

12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்

ஜாக்டோ ஜியோ’ போராட்டம் : தேர்வுகள், அரசு பணிகள் முடங்கும் அபாயம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான, ‘ஜாக்டோ ஜியோ’ நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. இதனால், அரசு பணிகள், பொதுத் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.’பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்’ என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ முன் வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதா என்பது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சாந்தஷீலா நாயர் தலைமையில், 2016ல் நிபுணர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, காலாவதியானதால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையில், புதிய கமிட்டி அமைத்து, ஆய்வு செய்யப்பட்டது.இந்த கமிட்டியின் அறிக்கை, 2018, நவ., 27ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான, சித்திக் கமிட்டியின் அறிக்கை, இந்த ஆண்டு, ஜன., 5ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கைகள் வந்த பின்பும், அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, ஜாக்டோ ஜியோ துவக்க உள்ளது. எனவே, இந்த அமைப்பு, ‘போராட்டம் நடத்த மாட்டோம்’ என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அளித்திருந்த வாக்குறுதியை திரும்ப பெற்றுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, உயர்கல்வி துறை, நகர் நிர்வாக துறை, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த போராட்டத்தில், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் உட்பட, 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.பள்ளிகளில், பிப்., 1ல் செய்முறை தேர்வும், மார்ச், 1 முதல் பொதுத்தேர்வும் துவங்கும் நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால், தேர்வு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல, அரசு பணிகளும், அரசு துறை அலுவலக பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.’போராட்டம் வேண்டாம்’பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:’ஜாக்டோ ஜியோ போராட்டத்தில், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம்’ என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் துவங்க உள்ளன. மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. எனவே, எங்கள் கோரிக்கையை, ஆசிரியர்கள் ஏற்பர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

தமிழகம்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்: போராட்டத்தை முறியடிக்க கல்வித் துறை தீவிரம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வு ஊதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பு ஊதிய பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 2017ம்  ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் விரிவான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். போராட்டம் நடத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில், வருகிற 22ம் தேதியில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என்றும், 23 மற்றும் 24ம் தேதி வட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது, 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது, 26ம் தேதி சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கே இந்த போராட்டம் தொடங்கிவிடும். இந்த வேலை நிறுத்தப் போராட்டதை முறியடிக்கும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது. குறிப்பாக போராட்டத்தில் தீவிரம் காட்டி வரும் இடைநிலை ஆசிரியர்களை முன்கூட்டியே கைது செய்வது, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் தற்காலிக நியமிப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதனை ஜன., 21 ல் முதல்வர் துவக்கி வைக்கிறார். எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒன்றியம் வாரியாக உபரி பெண் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன.அதில், ‘ஜன.,18 ல் (நேற்று) பணியில் சேர வேண்டும்’ தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியில் சேராமல் விடுப்பில் சென்றனர். சிலர் உத்தரவை வாங்க மறுத்தனர்.ஆசிரியர்கள் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கேஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அவர்களுக்கு வாய்ப்புத் தராமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. விரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதுவரை பணியில் சேரமாட்டோம், என்றனர்.

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது:
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் வீதம் 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகத்தில் அறிவியல் திட்டம் தொடர்பாக ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், இஸ்ரோ ஆய்வகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களிலும் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும், அவர்களுக்கு சிறிய செயற்கைக் கோளை தயாரிப்பதற்கான நடைமுறை அனுபவத்தை அளிக்கவும் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு அறிவியலில் ஓர் ஈர்ப்பு ஏற்படும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக உருவாக வாய்ப்பு ஏற்படும். இதனால், இளம் விஞ்ஞானிகள் திட்டம் முக்கியமானதாகும்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதுபோன்று மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் இஸ்ரோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இளம் விஞ்ஞானிகள் நல்ல முறையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மாணவர்களிடம் அளப்பரிய ஆர்வமும், ஆற்றலும் குவிந்து கிடக்கிறது. அதை நல்லதொரு பணிக்காகப் பயன்படுத்தலாம். மாணவர்கள்தான் நாளைய இந்தியா. அவர்களை சிறந்த வகையில் உருவாக்கும் பொருட்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை என்றார்.
திருச்சியில் மையம்
மாணவர்கள் விண்வெளி ஆய்வு மேற்கொள்ள திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தில்  ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இஸ்ரோ இல்லாத பிற இடங்களில் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் ஆய்வு தொடர்பான விஷயங்களுக்கு உதவும் வகையில், அவுட்ரீச் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக இந்தத் திட்டத்தின்படி, ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
திரிபுராவில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்திலும், ஜலந்தரிலும் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, நாக்பூர், இந்தூர், ரூர்கேலா ஆகிய இடங்களிலும் இந்த மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை தயாரிக்கும்பட்சத்தில், அதை இலவசமாக விண்ணில் செலுத்துவதற்குரிய உதவியை இஸ்ரோ செய்துதர உள்ளது. இது மாணவர்களுக்கு நல்லதொரு ஊக்கமாக அமையும் என்றார் கே.சிவன்.