வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி

சென்னை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, ‘அப்ஜெக்டிவ்’ முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 – 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

கல்வித்துறையில் இருள் – உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?

 

 

உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

 

வெளிப்படைத்தன்மை

 

ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

 

நீதிமன்றத்தில் வழக்கு

 

அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.

 

தண்டனையா? பரிசா?

 

கடைசியில் ஜனநாயக மாண்பு நிறைந்த பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு விட்டார். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துவிட்டது. இடமாற்றம் செய்திருப்பது, கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வந்ததற்கு உதயசந்திரனுக்கு கிடைத்த மோசமான தண்டனையா? அல்லது அவர் செய்த சீர்திருத்தத்திற்கு கிடைத்த பரிசா? தெரியவில்லை!

 

உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?ஒளி கொடுப்பாரா?

 

அனைவரது எதிர்பார்ப்பும் அதுவே!!!

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தல் கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு

மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “அடுத்த வருடம் முதல் (2019) நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும். மேலும் அனைத்துத் தேர்வு முறையும் கணினி மயமாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், பிரகாஷ் ஜவடேகரின் கருத்தில் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் அதிக அளவில் அவதியுறுவார்கள். மேலும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் பிப்ரவரி மாதம் தான் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர் கொள்வார்கள்.

அதனால் அவர்களால் நீட் தேர்வை முழுக்கவனத்துடன் எழுத இயலாது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தக் கூடாது. 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும். அத்தேர்வு ஆன்லைன் முறைக்குப் பதிலாக, தேர்வு மையங்களில் வழக்கமான பேப்பர்-பேனா முறையிலேயே நடத்தப்பட வேண்டும்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.

இதை தொடர்ந்து, மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், ஆன்லைன் முறையில் இல்லாமல் வழக்கமான முறையிலே நீட் தேர்வு நடத்தப்படும் என்று இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான பதிவுகளைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா?- உயர்நீதிமன்றம்

நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா? என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பிலே 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் 7 கிலோ வரை புத்தக பையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன மேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எனவே என்சிஇஆர்டியில் பாடத்திட்டத்தையே சிபிஎஸ்இ- யும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.

10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.

நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Government Examination,

DPI campus,

College Road,

Nungampakkam,

Chennai – 600 034.

Ph: 044-2827 8286, 044-2822 1734.

email: dgedirector@gmail.com

Web: www.tn.gov.in/dge

புதிய பாடத்திட்டம் – உரிய பயிற்சியின்றி தேர்வா? ஆசிரியர்கள் குற்றச்சாட்டு!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையைமேம்படுத்தும் வகையில், பொதுத் தேர்வுகள், முடிவுகள்தேதியை முன்கூட்டியே அறிவிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

புதிய பாடத் திட்டம், 12 ஆண்டுக்கு பின் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1க்கு அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு, ஜூனில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில்,’கியூ.ஆர்., கோடு’ உட்பட சிறப்பு அம்சங்கள் பாடங்களில்புகுத்தப்பட்டன. இதுபோன்ற நவீன முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், பிளஸ் 1 வணிக கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மே மாதம் பயிற்சி துவங்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். காலாண்டு தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ள நிலையில் மாதிரி வினா விடை கூட வழங்கப்படவில்லை.

ஆசிரியர்கள் கூறுகையில், ’ஜூனில் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. அன்று முதல் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒருமாதம் சென்ற பின், எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியை துவங்கினர். ’பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட சில பாடங்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல் திட்டம் இல்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது’ என்கின்றனர்

நிறுத்தற்குறிகள் அறிவோம்…!!!

நிறுத்தற்குறிகள் அறிவோம்…!!!

1. காற்புள்ளி (,)
2. அரைப்புள்ளி( ; )
3. முக்காற்புள்ளி (:)
4. முற்றுப்புள்ளி ( . )
5. வினாக்குறி (?)
6. உணர்ச்சிக்குறி (!)
7. இடையீட்டுக்குறி ( – )
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )
9. ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)
10.இரட்டை மேற்கோள்குறி (” “)
11. விழுக்காடு குறி (%)
12. விண்மீன் குறி (*)
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)

காற்புள்ளி
1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

🔹அரைப்புள்ளி

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

🔹முக்காற் புள்ளி

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

🔹முற்றுப்புள்ளி

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

🔹உணர்ச்சிக்குறி

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.

பிறைக்குறி

மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.

இரட்டை மேற்கோள் குறி

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.

ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ‘அ, இ, உ’    –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

பிளஸ் 2 தேர்வு: புதிய கட்டுப்பாடு – தேர்வுத்துறை அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், இனி, நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய முறையில், ஒவ்வொரு பாடத்திற்கும், தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. பழைய முறையில், கடந்த ஆண்டு வரை, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த செப்டம்பர் தனித்தேர்வு மற்றும் மார்ச்சில் நடக்கும் பொதுதேர்வுகளில் மட்டுமே, பங்கேற்க முடியும். அதன்பின், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர், 24 முதல் அக்டோபர், 4 வரை, துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான விபரம், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், வரும், 27 முதல் செப்., 1 வரை, தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தவறினால், தத்கல் முறையில், செப்., 3 மற்றும், 4ம் தேதிகளில், ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் – தடை கோரி வழக்கு!

திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட் டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது.  இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன. இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.