தரம் உயர்த்தப்பட்ட பாடத் திட்டம்: பள்ளிக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்’

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடத் திட்டம் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கல்வியாளர் என்.ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் மாணவர்களைவிட பெற்றோரே இன்றைக்கு அதிக குழப்பத்திலும், கலக்கத்திலும் உள்ளனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு அவசியம் என்ற நிலை உருவாகி விட்டது.

தங்கள் பிள்ளைகள் உயர்தொழில்நுட்பக் கல்வி பெற பள்ளித் தேர்வில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துள்ளனர்.

தமிழக அரசும் பள்ளி கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பள்ளிக் கல்வியில் வியக்கத்தக்க மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

வரும் கல்வி ஆண்டில் 1 முதல் பிளஸ் 2 வரை ஒற்றை இலக்க வகுப்புகளில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய பாடத் திட்டம் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்துக்கு நிகராக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அவர்களை மேம்படுத்தும் பெரும் பொறுப்பை ஆசிரியர்கள் சவாலாக ஏற்று சிறப்பாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.

 

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி ஆலோசனை குழுவின் 65-வது  கூட்டம்  மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. அதில், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் 2009–ல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், பிள்ளைகளை சரியாக பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனைவழங்கும் வகையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்புவரைஇலவசமாக கல்வி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண் குழந்தைகளுக்கென சிறப்பு நவோதயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் தொடக்கப்பள்ளி பயிலும் அனைத்து மணவர்களும் மேல்நிலை கல்வி வரை தொடர்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதாகவும், குறிப்பாக பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு, மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறப்பு ஒதுக்கீடுகள் இடம்பெற வேண்டும் என்றும் ஆலோசனை குழு வலியுறுத்தியுள்ளது.

படிப்பை தொடர இயலாத மாணவர்களுக்கென தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு, வேலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல மதிய உணவு திட்டத்தை 9-12 வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய கல்வி ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.

 

 

விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிடக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

வாதத்தின் போது, 1997ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வகுத்த விதிகளின்படி, அந்தப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட சில காரணங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டன. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், 20 ஆண்டுகளில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டனர். அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்வது எப்படி?

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்)

ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம்  செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

கட்டணம்
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’ (Alias)  என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்  சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?
அரசிதழை  நேரில்பெற  விருப்பம்  தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம்  அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர்  18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார்  அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm>  என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.stationeryprinting.tn.gov.in/forms.htm>  என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
Government of Tamil Nadu
Directorate of Government Examination
DPI Complex, College Road, Chennai – 600 006
Telephone: +91-44- (0), 28272088
Email: dge@tn.nic.in

கைதான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நள்ளிரவில் விடுதலை: சென்னையில் எங்கே செல்வது என திக்குமுக்காடிய ஆசிரியைகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் புதன்கிழமை நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இதனால், வெளியூர் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகள் எங்கே செல்வது என திக்குமுக்காடிப் போயினர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வாரத்தில 3 நாட்கள் அரை நாள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களைபணிநிரந்தரம் செய்ய முடியாது என தமிழக அரசுஅறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா, மாநிலச் செயலாளர் ராஜா தேவகாந்த் ஆகியோர் தலைமையில் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாரிடம் வேண்டுகோள்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தற்காலிகமாக கல்வி ஆண்டின் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர பணி வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அனைவரும் கோஷமிட்டனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அனுமதி அளிக்கப்பட்ட மாலை 6 மணி தாண்டியும்அவர்களின் போராட்டம் நீடித்ததால் அனைவரும் கைது செய்யப்பட்டு சேப்பாக்கம், சிந்தாதிரிபேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆசிரியைகள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதுவெளியூர் ஆசிரியர்கள் தாங்கள் காலை வரை தங்கிக்கொள்கிறோம் என்று போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், போலீஸார் அதைஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வெளியூர் ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியைகள் நள்ளிரவு செய்வதறியாமல் திகைத்தனர். நள்ளிரவு நேரத்தில் எங்கே செல்வது என அவர்கள் திக்குமுக்காடிப் போயினர்.

உதவி செய்தோம்

இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னரும் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை இரவு 7.30 மணிக்கு பின்னர்தான் கைது செய்ய தொடங்கினோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒவ்வொரு இடத்துக்கும் கொண்டு சென்று அடைத்து வைப்பதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரையும் விடுவித்து விடுமாறு அதிகாரிகள் கூறியதால்,11 மணியளவில் அனைவரையும் விடுவித்தோம். கைது செய்யப்பட்ட ஆசிரியைகளை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைத்திருந்தோம்.காலை வரை அவர்கள் அங்கேயே தங்கிக்கொண்டு காலையில் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்துவார்களோ என்ற சந்தேகம் எழுந்ததால் உடனே அங்கிருந்துசெல்ல கூறினோம். மேலும், அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், 2 போலீஸ் வாகனங்களில் ஏற்றி, ஊருக்கு செல்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இறக்கி விட்டோம்” என்றார்

‘ஆதார்’ பதிவுக்கு நாளை கடைசி: ஆர்வம் காட்டாத பள்ளிகள்

தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், மாவட்ட வாரியாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், அனைத்து வகை தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையதளம், அறிமுகம் செய்யப்பட்டது. சர்வர் குளறுபடி பிரச்னைகள் களைய, 32 மாவட்டங்களையும், இரண்டாக பிரித்து, கிழமை வாரியாக, பள்ளித்தகவல்கள், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் பதிவு இல்லாதோருக்கு, பிரத்யேக எண் பெற்று, எமிஸ் இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள், அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஆதார் பதிவு பணிகள் நடக்கின்றன. 80 சதவீத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆதார் பதிவு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எமிஸ் இணையதள பதிவுப்படி, மாணவர்களுக்கு அளிக்கப்படும் பிரத்யேக எண் கொண்டு, அனைத்து வகை நலத்திட்ட பொருட்கள், கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், முனைப்புடன் இப்பணியை மேற்கொள்கின்றன. மெட்ரிக், சி.பி.எஸ்.இ., — ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பள்ளிகளை, ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடிப்பதால், எமிஸ் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட, பணிகள் சார்ந்த விபரங்கள் திரட்ட இயலவில்லை’ என்றார்.

மாணவர் மன அழுத்தம் தீர ‘ஹெல்ப் லைன் 14417’ அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், ‘14417’ என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

ஆலோசனை மையம்
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.இனிமேல், ‘14417’ என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ரூ.1.98 கோடி

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்… நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்டைகளை சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல: சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முதலாவது வகுப்பிலேயே மாணவர்களை புத்தக மூட்டைகளைச் சுமக்க வைப்பது ஏற்கக்கூடியதல்ல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  மத்திய கல்வித் திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் பள்ளிகள்  முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பித்து வருகின்றன.

அதேநேரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் என்சிஇஆர்டி கவுன்சில் (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்)  பாடத்திட்டத்தின்கீழ் முதல் வகுப்பில் 3 பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.   சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றுவதில்லை.  இதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் புத்தகங்களையே மாணவர்களுக்கு வழங்குகின்றன.  இந்த புத்தகங்களின் விலை அதிகம் உள்ளதால் பெற்றோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் புத்தக மூட்டைகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி வினியோகம் செய்யும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: என்சிஇஆர்டி பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்.  முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையை அதிக புத்தகங்களை சுமக்க விடுவது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்க முடியாது. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே  கடைபிடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகமும் ஏற்கனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல சிபிஎஸ்இ  பள்ளிகள் இதை கடைபிடிக்கவில்லை.

மேலும், இந்த அறிவுரையை சிபிஎஸ்இயும் கடுமையாக்கவில்லை. எனவே, மாணவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் விஷயத்தில் சிபிஎஸ்இ கடுமையாக நடக்க வேண்டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றாத சிபிஎஸ்இ  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கல்வி மாணவர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு என்சிஇஆர்டி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை வரும் ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது, சிபிஎஸ்இ பதில் தர வேண்டும்.  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம்எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15வயதுக்கு உட்பட்ட மாணவ – மாணவியர் பங்கேற்கலாம்.மாணவ – மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும்.
இதற்கானசர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும்சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்கவேண்டும்.மேலும் தகவல்களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

EMIS : மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு

தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் ‘எமிஸ்’ எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

‘எமிஸ்’ எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘எமிஸ்’ எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ‘எமிஸ்’ எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். ‘எமிஸ்’ அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், ‘எமிஸ்’ இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்