சுதந்திர தினத்துக்கு வராத மாணவிகளுக்கு அபராதம்!!!

சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத 10க்கும் மேற்பட்ட 
மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் தினத்தில் சென்னை டவுட்டன் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சில மாணவிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பள்ளிக்கு வராத 10 மாணவிகளுக்கு ரூ.2500 அபராதம் விதித்ததோடு, அவர்களை மூன்று நாட்கள் வீதியில் நிற்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆனால், பெற்றோருக்கு உரிய பதில் அளிக்கப் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவிகளிடம் அபராதமாக வசூலிக்கப்படும் ரூ.2500 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று கூறியதால் பெற்றோர் அபராதம் செலுத்த மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத காரணத்தால் அவர்களை வீதியில் நிற்க வைப்பது, பெரிய தொகையை அபராதம் விதிப்பது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

‘தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்’ என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 

பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை கிடைக்கும், தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவில், நவ., முதல் வாரம் நடக்கிறது. தற்போது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நாளை முதல், செப்., 1க்குள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
 தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை, கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும்சேர்த்து, எழுத்து தேர்வில், சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள்பெற்று இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் lசெய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு எழுதி இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற,எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

  செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்.

 செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. 
 பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், சில பள்ளிகள், மாணவர்களை கணக்கு காட்டி உதவித்தொகை பெற்று, அவற்றை மாணவர்களிடம் வழங்காமல், ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை மாணவர்களின்வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது.

அதேபோல், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன் – லைன் விண்ணப்ப பதிவு முறையும் துவங்கப்பட்டது.மாணவர்கள், scholarships.gov.in என்ற இணையதளத்தில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் தொகை எவ்வளவு; தகுதியானவர்கள் யார் போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ளன.ஏற்கனவே, இணையதளத்தில் பதிவு செய்து, உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த ஆண்டுக்கு புதுப்பிக்க, வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல், புதிதாக விண்ணப்பிப்போர், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90ஆயிரம் காலியிடங்கள்

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம்நடத்தியது. 
 கலந்தாய்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது.முதலில் பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 1,481 பேர் சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 162 பேர் சேர்ந்தனர். பின்னர், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நடைபெற்ற சேர்க்கையில் 371 பேர் சேர்ந்தனர். 86,355 மாணவர்கள் சேர்ந்தனர்: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 86,355 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.

பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடத்தப்பட்டது.இதில் 3,708 பேர் சேர்ந்தனர். இறுதியாக, நிரம்பாத அருந்ததியினர் (எஸ்சிஏ) இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 106 பேர் சேர்ந்தனர். கலந்தாய்வில் இடம்பெற்றிருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. இதில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின்89 ஆயிரம் இடங்களும் அடங்கும்.

அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது !!

அரசு பள்ளியில்தான் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

*பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது – தமிழக அரசு.

*பயோ மெட்ரிக் முறை பெரம்பலூர் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது – தமிழக அரசு.

பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு
மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். 
அனைத்து பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  மேலும், சிறந்த கல்வியாளராக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பிளஸ் 2 வில் சேர்ந்த பின்னர் தேர்வெழுத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்வித்துறைக்காக பல்வேறு மாற்றங்களை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்டமைப்பு, கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொது தேர்வை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், பிளஸ் 1 காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால் மாதிரி வினாத்தாள் வௌியிடப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ- – மாணவியருக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 84 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். சில ஆண்டுகளாக, இந்த விடுதிகளில், 40 சதவீதம் வரை காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், ஒரு காப்பாளர், மூன்று விடுதிகள் வரை கவனித்து வருகிறார். விடுதியை சரியாக நிர்வகிக்க முடியாததால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2014ல், காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதாக அரசு அறிவித்தது; அது, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. இதேபோல, சமையலர், இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, சத்தான உணவும் கிடைப்பதில்லை.

இரவு நேரத்தில் உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவமனை செல்வதற்கும் வழியில்லை. 

எனவே, காலியாக உள்ள விடுதி காப்பாளர்கள், இரவு காவலர், சமையலர் பணி இடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், 41 அரசு கல்லுாரிகள் உட்பட, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் மாணவர்கள், டிப்ளமா இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், சில பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்துள்ளன.இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தின்படி, பழைய பாடத்திட்டத்துக்கு மாற்றான பாடங்களை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான விபரங்களை, www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நவ., 5ல் தேசிய திறனறி தேர்வு

ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் – நிகோபார் தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.