தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம்-மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

குமரி மகாசபா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக 8 வாரத்திற்குள் பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஹைகோர்ட் பெஞ்ச்

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திண்டுக்கல்: ‘மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்’ என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர்.

இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில் 

டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால் வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்’ (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது. இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில் சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா?

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இது சுமார் ஒரு சதவீதம். ஆனால், எண்ணிக்கையில் இவர்கள் சுமார் எட்டு லட்சம் பேர். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைகளில் வெவ்வேறு சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலையில் வாழும் இம்மக்களின் எழுத்தறிவு 54 சதவீதம் மட்டுமே. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 3 கி.மீ.க்குள் தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்றாலும் மலைப் பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பழங்குடி மக்களும் பிழைப்புத் தேடி அவ்வப்போது சமவெளிப் பகுதிகளில் கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டும் பணி, செங்கல் சூளை என பணிகளுக்குச் செல்கின்றனர்.

அப்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்வார்கள். சில சமயங்களில் அவர்களை வேலைக்கும் அனுப்புகின்றனர்.

 

பள்ளி இடைநிற்றலும் மலைப் பகுதிகளில் அதிகம். இதனால் குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமண முறை, கொத்தடிமை முறை, இடம்பெயர்வு போன்ற பிரச்னைகள் பெருகி வருகின்றன.

மலைப் பகுதிகளில் இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்க 17 மாவட்டங்களில் 314 அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமார் 30,000 பேர் பயில்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் இப்பள்ளிகளைக் கண்காணிப்பதில்லை.

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட ஓராசிரியர்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர் மேல்நிலைப் பள்ளியில் மொழிப் பாடங்களுக்கு 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை.

1952-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளியாக இருந்து 1988-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, ஆங்கிலப் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. அடுத்து 1997-இல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்போது, தமிழ் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமலேயே ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுவரை பணியிடமே உருவாக்கப்படாமல் இந்நிலை நீடிக்கிறது. பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களே இப்பாடங்களையும் நடத்துகின்றனர். மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி 30 ஆண்டுகளாக இந்தப் பழங்குடி மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர்.

 

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் 2010-இல் கடும் கண்டனத்தை தெரிவித்தது.ஆனாலும், இன்னும் இந்த அவலம் நீடிக்கிறது. 255 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பர்கூரில் 1961-இல் தொடங்கப்பட்ட பள்ளி 1981-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2008-இல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்போது, சமூக அறிவியல் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாகி 2 ஆண்டுகளாகியும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. 125 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

 

மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் குறிதக்த நேரத்துக்குப் பள்ளிக்கு வருவதில்லை. காலை 11 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்பும் ஆசிரியர்களே அதிகம். விடுதி காப்பாளர்கள் விடுதிகளில் தங்குவதே இல்லை.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் கல்வி சேவை அளித்து வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:

உண்டு உறைவிடப் பள்ளிகள் என இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகள், உண்டு செல்லும் பள்ளிகளாகவே விளங்குகின்றன. விடுதி வசதியும், அதற்கான கட்டடங்களும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

 

எனவே, குழந்தைகள் உணவை உண்டுவிட்டு தங்களது வீட்டுக்கு சீக்கிரமே திரும்புகின்றனர். இப்பள்ளிகளில் நூலகங்களோ, செய்தித்தாள்களோ இல்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, குழந்தைகளின் பெற்றோர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை பள்ளி மேலாண்மைக் குழு எனும் பெயரில் அமைத்துள்ளது. இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஆனால், இதுவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

ஒரு பெண்ணைத் தலைவராக நியமித்து, கையொப்பம் மட்டும் பெற்று தங்களது வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப் பகுதியில் ஒசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 135 மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், ஒசூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 253 மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்களே உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு?.

 

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும் பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்வதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, இவர்களின் நலனில் அக்கறையுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்து அமர்த்துதலே முதன்மையான சீர்திருத்தமாகும். விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

 

இடைநிற்றலைத் தடுக்க தொடர்ந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையை கல்வி ஊக்கத் தொகையாக வழங்கலாம். விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பது என நிர்ணயம் செய்வதைத் தவிர்த்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.

பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூகப் பொருளாதார, கலாசார வாழ்நிலையில் இருந்து மதிப்பீடு செய்து கீழ்காணும் தீர்வை நோக்கிச் செல்ல வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.

பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு இலவச, சமமான, கட்டாய தரமான கல்வி உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். பழங்குடி பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் சமவெளிப் பகுதியில் உள்ளதுபோல் அல்லாமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

 

பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல், கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படவேண்டும். போதுமான கட்டடங்கள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக நூலக வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இயற்கையோடு இணைந்த நீண்ட நெடிய வாழ்வியல் வழிமுறையில் கண்டறியப்பட்ட குன்றா வளர்ச்சிக்கான அடிப்படையாக கூறுபாடுகளை எப்படி பிற பகுதி மக்கள் பின்பற்ற முடியும் என்பதற்கான ஆய்வுகள் வேண்டும்.

பழங்குடியினர் நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் அமைப்புகள் ஆகியோரைக் கொண்ட மாநில அளவிலான ஒரு பொது மேடையை பழங்குடியினர் கல்வி உரிமை கூட்டமைப்பு எனும் பெயரில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

103 மாணவர்கள் விடுப்பு : வெறிச்சோடிய அரசு பள்ளி

மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யாத நிலையில், மாணவர்கள், 103 பேரையும், பெற்றோர் அனுப்ப மறுத்து விட்டனர். இதனால், நேற்று கத்திரிப்பட்டி நடுநிலைப்பள்ளி வெறிச்சோடியது.

 

சேலம் மாவட்டம், காவேரிபுரம் ஊராட்சி, கத்திரிமலை அடிவாரமுள்ள, கத்திரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், மொத்தம், 103 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

 

இதில், ஒரு தலைமைஆசிரியர், நடுநிலைப்பள்ளிக்கு, இரு பட்டதாரி ஆசிரியர்கள், துவக்கப்பள்ளிக்கு, மூன்று இடைநிலை ஆசிரியர்கள் என, மொத்தம், ஏழு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

 

தற்போது, ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். துவக்கப் பள்ளிக்கான மூன்று இடைநிலை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளன.

 

அவ்வப்போது வேறு பள்ளியை சேர்ந்த இடைநிலை ஆசிரியரை, தற்காலிகமாக கத்திரிப்பட்டி பள்ளியில் நியமிப்பது வழக்கம். தற்காலிக ஆசிரியரும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை.

 

‘இடைநிலை ஆசிரியரை நியமிக்கும் வரை, மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை’ என, அப்பகுதி பெற்றோர் முடிவு செய்தனர். 

 

நேற்று, 103 மாவர்களையும் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.தலைமை ஆசிரியர் நேற்று விடுப்பில் சென்று விட்டார். 

 

மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்ததால் பள்ளி வெறிச்சோடியது.

 

கொளத்துார் உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளிக்கு சென்று பேச்சு நடத்த மாணவர்களின் பெற்றோரை அழைத்தார். ஆனால், பெற்றோர் மறுத்து விட்டனர்.

 

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் – அரசுக்கு பரிந்துரை

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.

ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.

குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.

மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.

இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

படிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்…. கல்வி கட்டணம் இனி திரும்ப கிடைக்கும்..!

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த படிப்பு வேண்டாம் என்று வெளியேறும்போது, கட்டிய பணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்பக் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.

 

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கீழ், இயங்கும் சில கல்வி நிறுவனங்கள், கல்வி ஆண்டு தொடங்கும் முன்னரே தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்கின்றனர். அந்த மாணவர்களிடமிருந்து முழு கட்டணத்தையும், பள்ளிச் சான்றிதழையும் வாங்கிக் கொள்கின்றன.

 

 

எனவே, படிப்பு தொடங்கும் முன் ஒரு மாணவர், சேர்க்கையை திரும்பப் பெற்றால் ஆயிரம் ரூபாய் மட்டுமே கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையைக் கொடுக்க வேண்டும் எனவும் அப்படி கொடுக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் எச்சரித்துள்ளது

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், ௬ல் உதயசந்திரன் பொறுப்பேற்றார். 

 

 

நிர்ப்பந்தம் காரணம் : அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களை, அவர் அமல்படுத்தினார். இதற்கு, பெற்றோர், மாணவர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, சிலரின் நிர்ப்பந்தம் காரணமாக, பாடத்திட்டத்துக்கான பள்ளிக் கல்வி செயலராக மட்டும், உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.

புதிய பள்ளிக்கல்வி செயலராக, முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், இன்று முதல் அதிகாரபூர்வமாக பணிகளை துவக்க உள்ளார். 

அவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து, அவரது கட்டுப் பாட்டில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உதயசந்திரன் மேற்கொண்ட மாற்றங்களை தொடர்வதில், பிரதீப் யாதவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

 

l ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆதிக்கத்தை சமாளித்து, நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்

l இட மாற்றம், பதவி உயர்வு, ‘டெண்டர்’ வழங்குவது என, பல பணிகளில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், ஆளுங்கட்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் அணிகளை சேர்ந்தவர்களை சமாளிக்க வேண்டும்

l மத்திய அரசின் பல நிதியுதவி திட்டங்களை, அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப, மாற்று பணிகளுக்கு மாற்ற வேண்டும்

l புதிய பாடத்திட்ட பணி களை சுதந்திரமாக மேற்கொள்ள, செயலர் உதயசந்திரன், பாடத்திட்டக்குழு மற்றும் அதிகாரிகளுக்கு, அனுமதி வழங்க வேண்டும்

l பள்ளிக்கல்வியில் செயல்படும் அதிகாரி களின், ஆளுங்கட்சி செல்வாக்கை சமாளித்து, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்

 

பல்வேறு சவால்கள் : l ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ள போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, பள்ளிக் கல்வி பணி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

l புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள, பிளஸ் ௧ பொது தேர்வை, புதிய விதிகளின்படி, குழப்பமின்றி நடத்த வேண்டும்

l ‘நீட்’ போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.

இப்படி பல்வேறு சவால்கள், புதிய முதன்மை செயலருக்கு காத்திருக்கின்றன

வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்! –

குழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.

 

 

அறிவு, நடத்தை, மொழி உட்பட பல விஷயங்களையும் குழந்தைகள் பள்ளி வாழ்வில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு மதிப்பு சார்ந்ததாக இருந்த காலத்தில், ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் ஆசிரியர், மாணவருக்கு இடையிலான உறவு எல்லாமே நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் சொன்னதை வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக்கொண்ட காலகட்டம் இதுவல்ல. இன்று மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல தினமும் தன்னை மேம்படுத்திக்கொண்டு படிக்க வேண்டிய நிலைக்கு மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

 

ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசினார் உளவியல் ஆலோசகர் பாபுரங்கராஜன்

‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாட்டைக் களைய ஆசிரியர்கள் சில விஷயங்களின் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. வகுப்பறையில் அவர்கள் கண்டிப்பாக 5 விஷயங்களைத் தவிர்த்தாக வேண்டும்.

 

இன்று நடத்தும் பாடத்தை நாளை படித்து வர வேண்டும் என்பது பொதுவான விதி. அதையே ஆசிரியர்கள் கடுமையான கட்டளையாக சொல்லக்கூடாது. படிக்காமல் வந்தால் 10 முறை இம்போசிஷன் எழுத வைப்பேன் எனப் பயமுறுத்துவது போன்ற பாணியில் படிக்க வைக்க முயல்வது தவறு. இது, அந்தப் பாடத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் ஒருவித வெறுப்பினை உண்டாக்கும். அதேபோல் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது காரணம் இல்லாமல் வெறுப்பினைக் காட்டுவது, முதல் நாள் ஒரு விஷயத்தை ஃபாலோ செய்யச் சொல்லிவிட்டு மறுநாள் வேறு ஒன்றை வலியுறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான கட்டளைகள் இடுவது,  போன்றவை மாணவர்களைக் குழப்புவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். இது ஆசிரியர்- மாணவர் இருவருக்குமான இணக்கத்தை  கெடுத்துவிடும். இதுபோன்ற செயல்களை ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

ஒரு நாளில் என்ன வேலைகளையெல்லாம் மாணவனால் செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலைகளை பிரித்துக்கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் மனப்பாடம் செய், எழுது என்று செய்ய இயலாத அளவுக்கு வேலைகளை வாங்கும்போது, மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகிச் செல்ல நேரிடும். எந்த மாணவரிடமிருந்து எப்படிப்பட்ட திறனை எதிர்பார்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வேலை வாங்கினால் ரிசல்ட் திருப்திகரமாக இருக்கும்.

 

இன்றைய குழந்தைகள் சுயமரியாதையை அதிகம் எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருந்தால்கூட மற்றவர் முன்னிலையில்தான் திட்டுவாங்குவதை அவர்கள் விரும்புவதில்லை.  அதையும் மீறி திட்டினால் அதைப் பெருத்த அவமானமாக நினைத்து விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். இது மாணவர்களின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாராட்டுவதை எல்லோர் முன்னிலையிலும், திட்டுவதை தனியாகவும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எஜமானர்கள் போலவும், மாணவர்கள் தொழிலாளிகள் போலவும் நடத்துவதை நிறுத்த வேண்டும்.

 

 

ஆசிரியர்கள், தாங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் வேண்டாம். தவறு மனித இயல்பு. தவறு செய்வதை புரியும்படி திருத்தினாலே அவை மீண்டும் நிகழாது. இன்றைய குழந்தைகள் அதிகநேரம் இருப்பது வகுப்பறையில்தான். எனவே மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் நடந்துகொண்டாலே போதுமானது. நன்கு படிப்பவர்களே அறிவாளிகள் என்கிற சிந்தனையை ஆசிரியர்கள் தங்கள் மனங்களில் இருந்து நீக்கினாலே போதும். மாணவர்கள் மிளிர்வார்கள்.

திறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் – முழு தொகுப்பு

8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் 

 

10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும் பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் 

 

இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா ? 

 

இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள் 

அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் . 

 

என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு. 

 

மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE ) என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது . 

 

தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS 

 

Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: 

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 

 

Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: 

7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும். 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

 

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : 

அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். 

www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . 

 

தேர்வுக்கட்டணம் ரூ. 50 

 

Ø தேர்வு நடைமுறை: 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

ü மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

இடைவேளை – 20 நிமிடங்கள் 

ü பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

 

Ø தேர்ச்சி முறை: 

MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . 

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்). 

மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும். 

நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS 

 

Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம் வகுப்பு மாணவர்கள் 

 

Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: 

8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும். 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

 

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : 

ஜூலை அல்லது செப்டமப்ர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். 

www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . 

தேர்வுக்கட்டணம் ரூ. 10 

 

Ø தேர்வு நடைமுறை: 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 

மனத்திறன் தேர்வு (MAT) – MENTAL ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

இடைவேளை – 20 நிமிடங்கள் 

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

 

Ø தேர்ச்சி முறை: 

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர் 

வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். 

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும். 

தேசிய திறனாய்வுத்தேர்வு 

( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE 

 

Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 

NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும் 

 

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : 

ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். 

www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . 

தேர்வுக்கட்டணம் ரூ. 50 

 

Ø தேர்வு நடைமுறை: 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள் 

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

 

Ø தேர்ச்சி முறை: 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும். 

ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.) 

 

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

NTSE – STAGE – 2 – 

 

மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும் 

தேர்வுக்கட்டணம்¸கிடையாது. 

முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல் 

(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

 

வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 

மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST 

 

50 வினாக்கள் – 50மதிப்பெண்கள் – 45 நிமிடங்கள் 

ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 

 

50 வினாக்கள் – 50மதிப்பெண்கள் – 45 நிமிடங்கள் 

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

 

100 வினாக்கள் – 100 மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும். 

 

Ø தேர்ச்சி முறை: 

MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்). 

ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது. 

 

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர். 

 

தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 

  • 15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்
  • 7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்
  • 3% மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.

ü 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும் 

ü இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது மாதந்தோறும் ரூ. 2000வீதமும் 

 

ü முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

 

திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் : 

மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும் உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும். 

 

படிப்பறிவுத்திறன் (SAT) தேர்வில் 

அறிவியல் 

கணிதம் 

சமுக அறிவியல் 

ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 

 

மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். 

 

Ø பகுத்தாயும் திறன் 

Ø காரணம் அறியும் திறன் 

Ø சிந்திக்கும் திறன் 

Ø முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன் 

Ø முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன் 

போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும். 

 

மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும். 

 

மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும். 

 

எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்