கைகளை ‘கட்டியதால்’ சாத்தியமில்லை… நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

Posted: 26 Nov 2017 06:10 PM PST

வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் ‘வாட்ஸ்-ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் – மாணவர் உறவை வலுப்படுத்த, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களை எந்த வகையிலும், கண்டிக்க அனுமதிக்காமல், நுாறு சதவீத மதிப்பெண் பெற வலியுறுத்துவது சாத்தியமில்லை என்பதையும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, மாணவர்களை மனம் புண்படும்படி திட்டவோ, அடிக்கவோ கூடாது. இதை, கல்வியாண்டு துவங்கும் போதே, ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில், ஆண்டுதோறும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை கண்டிக்குமாறு, பெற்றோரே ஆசிரியரிடம் முறையிடுவதும் உண்டு. ஆசிரியரின் கண்டிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.வேலுார், பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாதாந்திர கணிதத்தேர்வில் தோல்வியை தழுவிய காரணத்திற்காக, பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதால், நான்கு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்திற்காக, தலைமையாசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகிய இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘பள்ளிக்கு தாமதமாக வரும், மாணவர்களை எதுவும் கூறாமல் இருந்தால், ஒழுக்கம், கீழ்படிதல் ஆகிய, நற்பண்புகள் எப்படி வளரும், தோல்வியை தழுவிய மாணவிகளின், கற்றல் நிலையை, பெற்றோரிடம் எடுத்து கூற, அழைத்து வரும்படி உத்தரவிட்டது, ஆசிரியரின் கடமையல்லவா, இப்படி எல்லா நிலைகளிலும், ஆசிரியரின் கைகள் கட்டப்பட்ட பின், நுாறு சதவீத தேர்ச்சியை எதிர்பார்ப்பது நியாயமா’ என, அடுக்கடுக்கான கேள்விகணைகளை தொடுத்து, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தோல்வியை எதிர்கொள்ளவும், கண்டிப்பை ஏற்கவும் கூட, முடியாத அளவுக்கு, தற்போதைய கல்விமுறை இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

 

இது சார்ந்து, அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைத்து, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பயம்,பதட்டமில்லாமல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது, தற்கொலை எண்ணங்களை தவிர்க்க, மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுவது அவசியம் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:ஆசிரியர்-மாணவர் உறவில், விரிசல் இருப்பதை,உறுதி செய்யும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன.

 

இதுபோன்ற தருணங்களில், சம்பவத்தின் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின், நடவடிக்கை எடுப்பது அவசியம். மாணவர்களை வழிநடத்தும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு, நடத்த வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை மட்டும் இலக்காக முன்னிறுத்தி, பணிபுரியும் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி சூழலை ஆரோக்கியமானதாக்க, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். இதை உருவாக்க வேண்டியது, கல்வித்துறையின் முக்கிய கடமையாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

உலக தரவரிசை: 264ஆவது இடத்தில் சென்னை ஐஐடி!

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 264ஆவது
இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாக்குவேரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds) 2018 உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை நேற்று முன்தினம் (நவம்பர் 23) வெளியிட்டது. அதில் சென்னை ஐஐடி 264ஆவது இடத்தில் உள்ளது. சென்னை ஐஐடி மின் பொறியியல் திட்டப் பாடத்துக்காக 51 – 100க்கும் இடையேயான தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. மேலும், பிரிக்ஸ் (BRICS) தரவரிசையில் 18ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) அண்ணா பல்கலைக்கழகம் 85ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ரசாயன பொறியியல் திட்டத்துக்காக, பிரிக்ஸ் நாடுகளில் 201 – 250க்கும் இடையேயான தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. உலகளாவிய பல்கலைக்கழகங்களில், 651 – 700க்கும் இடையேயான தரவரிசையில் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 105ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகம் பிரிக்ஸ் நாடுகளில் 171 – 180க்கும் இடையேயான தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.

மாணவர்களுக்கான ஆசிரியர்களின் விகிதம், முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் விகிதம் மற்றும் கல்வியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான நிறுவனத்தின் புகழ் உள்ளிட்ட எட்டு வேறுபட்ட அம்சங்களின் அடிப்படையில் பிரிக்ஸ் தரவரிசை பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

உலக நிறுவனங்களில் 190ஆவது இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் உள்ளது

பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த சேலத்தில் இணையவழி பண்பலை தொடக்கம் :

தமிழகத்தில் முதல்முறையாக, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர், மாணவர்களின் திறனை ஊக்குவிக்க சேலத்தில் இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், இணையவழி பண்பலை கல்வி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. பண்பலை சேவையை, மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். தொழில்நுட்ப பிரிவு துறைத்தலைவர் விஜயலட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார். இணையதளத்தில் மாங்கனி பண்பலை அல்லது டயட்(DIET) சேலம் என்ற தளத்தில் மூலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பண்பலை சேவையை தொடங்கி வைத்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறியது:தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி செய்திகள், கற்றல் கற்பித்தலின் தற்போதய முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திற்கு இணையான செய்திகள், பாடல்கள், கதைகள் மற்றும் சொற்பொழிவுகளை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பாடும் திறன், கதை கூறும் திறன், புதிர்கள், நாடகங்கள், பாடக்கருத்துகளை வழங்கும் விதம் ஆகியவை மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைவளர்த்துக்கொள்ள முடியும். மேலும், கற்றலில் ஏற்படும் சந்தேகங்கள், தெளிவுரைகளையும் போக்கும் வகைகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக, இந்த ஒலிபரப்பு சேவையை தினமும் அரை மணி நேரம் பள்ளி இடை வேளை நேரத்தில் கல்வி தொடர்பான தகவல்கள் இந்த பண்பலை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேம்படுத்தி முழுநேரமாகவும், உடனுக்குடன் தகவல்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.  வானொலி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கேசவன், மணிகண்டன், கவிதா கலந்து கொண்டனர்.

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொது,நிகழ்ச்சியில்,மாணவர்கள்,பங்கேற்க,55கட்டுப்பாடுகள் ,: அரசியல்,நிகழ்ச்சிக்கு,அனுமதி,இல்லை

தமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது.

பின், அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

* மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்

* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை

* அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது.

நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது

* தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது

* போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது

* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்

* கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

* மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது

* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்

* குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்

* சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்

* உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்

* அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும்

நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம்.

* மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்

* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்

* வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது

* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்

* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்

* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்குகிறது.
தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், “இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., – ஐ.ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.பி.இ., – பி.டெக்., – பி.ஆர்க்., – பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.

கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்-லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

 

கல்வித்துறை முடிவு : இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொது தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

 

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பள்ளிகளுக்கு அனுப்பட்ட முட்டைகள்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்குத் தேவையான முட்டை கையிருப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பப்பட்டது.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1,072 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சத்துணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தநிலையில், இந்தவாரத்திற்கான முட்டை பெரும்பாலான பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

முட்டை கொள்முதல் விலை உயர்வு காரணமாக பள்ளிகளுக்கு சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்கப்படவில்லை என கருதப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சமூகநலத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது புதிய தலைமுறை. பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு முட்டை கையிருப்பில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் முட்டை அனுப்பப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்குமாரும், சத்துணவுத் திட்டத்திற்கு தேவையான முட்டை கையிருப்புள்ளதாக தெரிவித்தார்.

3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைச்சேர்ந்த 3,000 மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.

 

2016-2017 கல்வியாண்டில் 8.93 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். 2017-2018 கல்வியாண்டில்கூடுதலாக 7,000 மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களைக் கண்காணிக்க, விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்களைப் பார் குறியீட்டுடன் அச்சிட தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

 

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அரசு தேர்வுகள்இயக்குநரகம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, டிசம்பர் மாதம் விடைத்தாள்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அதற்குத் தடை ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கிட்டத்தட்ட 50 சுயநிதி மற்றும்உதவிபெறும் பள்ளிகள் அரசாங்க அங்கீகாரமின்றி இயங்கின.

 

முன்னதாக அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் உள்ள பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் ஆவணங்களை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி, சேர்க்கைக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.இந்தியாவில் இயங்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டுமே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

 

இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு,இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அங்கீகரிக்கப்படாத தனியார் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

இந்த நடவடிக்கை சுயநிதி மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் விரைவில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த 2004ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.அதைத் தொடர்ந்து, பள்ளி கட்டடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாத கட்டடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆய்வின் முடிவில், சுமார் 746 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

 

அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி 2016 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 746 பள்ளிக்கூடங்களுக்கு விதிமுறைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாகக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தைக்கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய பள்ளிகள் தவறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

பொது தேர்வு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்’

‘அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்’ என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத, சில தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்களை, அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும், ‘வாட்ஸ் ஆப்’பில் வதந்திகள் பரவுகின்றன.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளே கிடையாது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளது. எனவே, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுத் தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சமின்றி தேர்வுக்கு தயாராக வேண்டும்’ என்றனர்.