புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவுஅறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கட்சியின் மாவட்ட 9ஆவது மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:கட்சியின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 ஆகிய 2 நாள்கள் தூத்துக்குடியிலும், அகில இந்திய 22ஆவது மாநாடு ஹைதராபாதில் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன.தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெüனம் காப்பது ஏன்? அது சட்ட விரோத மணல் என்றால் உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தரமான கல்வி இல்லை. அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளுநரின் ஆய்வு என்பது இந்திய அரசியல் சட்டத்தை அத்துமீறும் செயல். சட்டம் என்ன உரிமை அளித்துள்ளதோ, அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். சட்ட உரிமை மீறலைப் பொறுத்துக்கொள்ள முடியாது.தமிழகம், புதுச்சேரியில் ஆளுநரை வைத்து ஆய்வு செய்யும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ஏன் செய்யவில்லை?சிறந்த முதல்வர்கள் இருந்த மாநிலம் தமிழகம். இப்போதுஅதன் பெருமை தாழ்ந்து வருகிறது என்றார் அவர்.

பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

நீட்’ போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்கவழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில், 12 லட்சம் பேரும்;பிளஸ் 2வில், ஒன்பது லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தஆண்டு, தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பாடமாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., தேர்வு,சி.ஏ., படிப்பதற்கான நுழைவு தேர்வு என, பல தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக, பொது தேர்வுகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை சோதிக்கும் கேள்விகளை இடம் பெறச்செய்ய, தேர்வுத்துறை முயற்சித்து வருகிறது.

எனவே, இந்த ஆண்டு, பிளஸ் 2 வினாத்தாளில், 5 சதவீதம் அளவுக்கு, சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும், சிக்கலான கேள்விகள் இடம் பெறலாம்.வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம், போட்டி தேர்வுக்கு ஏற்ற வினாக்களை இடம் பெற செய்ய, ஏற்கனவே, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.தற்போது, தோராய வினாத்தாள் வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், இறுதி வினாத்தாளை ரகசியமாக இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாடு அதன் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயர்கல்விக்கு இந்த இரு வகுப்புகள் அடித்தளமாக இருக்கும். எனவே மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 நலத்திட்டங்களை செம்மைப்படுத்தவும், கற்றல்- கற்பித்தல் பணிகளை திறம்படச் செய்யவும் நலத்திட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பொருளியல், வணிகவியல் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நேரடி நியமனம் மூலம்மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறுதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்

டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது

 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘குரூப்- 4’ தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?

அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, ‘குரூப் – 4’ தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு, 2018 பிப்., 11ல் நடக்க உள்ளது. இதற்கான, ‘ஆன்-லைன்’ பதிவு, நவ., 14ல் துவங்கியது; டிச., 13ல் முடிகிறது. இதுவரை, கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, குரூப் – 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; தேர்வுக்கான பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு அளவில், சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, பொது அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் இடம் பெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், குரூப் – 4 தேர்வு எழுத விரும்பும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் தேவை.

அவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகம் வாங்க சென்றால், அங்கு புத்தகம் இருப்பு இல்லை என, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

ஆனால், தமிழக பாடநுால் கழகத்தில், சொற்ப எண்ணிக்கையில் புத்தகம் இருப்பு உள்ளதாகவும், அதையும் மாணவர்களுக்கே வழங்க உள்ளதாகவும், பாடநுால் கழகத்தினர் தெரிவித்துஉள்ளனர்.

தமிழக பாடத்திட்ட புத்தகங்கள், தனியார் கடைகளில் விற்பனை செய்யப் படாததால், குரூப் – 4 தேர்வர்களால், தனியாரிடமும், புத்தகம் வாங்க வழியில்லை. அதனால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், புத்தகம் வாங்குவது எப்படி என்ற தவிப்பில் உள்ளனர். சிலர், பழைய புத்தக கடையில் சென்று, 10ம் வகுப்பு புத்தகங்களை தேடி வருகின்றனர். எனவே, குரூப் – 4 தேர்வுக்கு, போதிய பாடப் புத்தகம் வழங்கும்படி, பாடநுால் கழகத்தை, டி.என்.பி.எஸ்.சி.,யும், அரசும் அறிவுறுத்தும்படி, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

சென்னை: ‘நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது’ என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

 

தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ‘பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இது குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக் கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இது குறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில உயர் கல்வித் துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும், யு.ஜி.சி., விதிகளின்படி, எந்த தனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக் குறிக்குள், ‘பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.

அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற் கான ஆதாரத்துடன், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.

 

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.

 

இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி., – எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் தலைமை ஆசிரியர்கள் திணறல்

எம்.பி.,- – எம்.எல்.., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன


இவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், ‘நபார்டுஉள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. எம்.பி., – எம்.எல்..,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர்.

ஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை.

25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., – எம்.எல்.., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது

முழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை

ஒப்பந்ததாரரும், ‘பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாதுஎன, வெளிப்படையாகவே கூறுகிறார்.

நாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., – எம்.எல்.., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., – எம்.எல்.., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை

இருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்