30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

30 ஆண்டுக்கு பின், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள், பிரகாசம்!
நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ — மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் செயல்படுகின்றன.
தேவை அதிகரிப்பு

நவோதயா பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுப்பதால், தமிழகத்தில் இப்பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால்,30ஆண்டுகளுக்கு பின், நவோதயா ,

பள்ளிகளுக்கான தேவை, தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.

மேலும், சர்வதேச அளவில் வெளிநாட்டவரும் ஹிந்தியை திறம்பட பேசுவதால், இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, தமிழக மாணவர்களும் ஆர்வத்துடன் கற்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க கோரிகன்னியாகுமரி மகாசபையைச் சேர்ந்த, ஜெயக்குமார் தாமஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது, ‘நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்’ என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நவோதயா வித்யாலயா சமிதியின், புதுச்சேரி முதல்வர், வெங்கடேஸ்வரன் தரப்பில், ‘நவோதயா பள்ளி கொள்கைப்படி, மாநில மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

‘தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் முதன்மை மொழியாகவும், பிளஸ் 1,

பிளஸ் 2வில் கூடுதல் மொழியாகவும் கற்றுத் தரப்படும்’ என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நவ., 20க்குள்:

மேலும், ‘மாவட்டம் தோறும், ஒரு பள்ளிக்கு, 30ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும். அதில், கட்டுமானம் மேற்கொண்டு, மத்திய அரசு பள்ளிகளை நடத்தும். இதற்காக மாவட்டத்துக்கு, 20கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்’ என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘நவோதயா பள்ளிகள் துவங்க, எட்டு வாரங்களுக்குள், தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழகபள்ளி கல்வியின் சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, நவ., 20க்குள், மாவட்டம் தோறும், ஒரு நவோதயா பள்ளி துவங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.இதற்காக, அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிக்கவும்
ஆலோசனை நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கு தேவையான, 30 ஏக்கர் இடத்தை ஒதுக்கும் முன், தற்காலிக இடங்களை தேர்வு செய்து, வரும் கல்வி ஆண்டிலேயே, ஆறாம் வகுப்பை துவக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்.ஹிந்தி எதிர்ப்பால் முடங்கிய நவோதயா கல்வி திட்டம், நீதிமன்ற தலையீட்டால், 30 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் துளிர்விடுவது பிரகாசமாகி உள்ளது.

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும் !!

  1. Anthropology – மானுடவியல்/ மானிடவியல்

    2. Archaeology – தொல்பொருளியல்

    3. Astrology – சோதிடவியல் (சோதிடம்)

    4. Astrology – வான்குறியியல்

    5. Bacteriology பற்றுயிரியல்

    6. Biology – உயிரியல்

    7. Biotechnology – உயிரித்தொழில்நுட்பவியல்

    6. Climatology – காலநிலையியல்

    7. Cosmology – பிரபஞ்சவியல்

    8. Criminology – குற்றவியல்

    9. Cytology – உயிரணுவியல்/ குழியவியல்

    10. Dendrology – மரவியல்

    11. Desmology – என்பிழையவியல்

    12. Dermatology – தோலியல்

    13. Ecology – உயிர்ச்சூழலியல்

    14. Embryology – முளையவியல்

    15. Entomology – பூச்சியியல்

    16. Epistemology – அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்

    17. Eschatology – இறுதியியல்

    18. Ethnology – இனவியல்

    19. Ethology – விலங்கு நடத்தையியல்

    20. Etiology/ aetiology – நோயேதியல்

    21. Etymology – சொற்பிறப்பியல்

    22. Futurology – எதிர்காலவியல்

    23. Geochronology – புவிக்காலவியல்

    24. Glaciology – பனியாற்றியியல்/ பனியியல்

    25. Geology – புவியமைப்பியல்/ நிலவியல்

    26. Geomorphology – புவிப்புறவுருவியல்

    27. Graphology – கையெழுத்தியல்

    28. Genealogy – குடிமரபியல்

    29. Gynaecology – பெண்ணோயியல்

    30. Haematology – குருதியியல்

    31. Herpetology – ஊர்வனவியல்

    32. Hippology – பரியியல்

    33. Histrology – இழையவியல்

    34. Hydrology – நீரியல்

    35. Ichthyology – மீனியியல்

    36. Ideology – கருத்தியல்

    37. Information Technology – தகவல் தொழில்நுட்பவியல்

    38. Lexicology – சொல்லியல்

    39. Linguistic typology – மொழியியற் குறியீட்டியல்

    40. Lithology – பாறையுருவியல்

    41. Mammology – பாலூட்டியல்

    42. Meteorology – வளிமண்டலவியல்

    43. Metrology – அளவியல்

    44. Microbiology – நுண்ணுயிரியல்

    45. Minerology – கனிமவியல்

    46. Morphology – உருவியல்

    47. Mycology – காளாம்பியியல்

    48. Mineralogy – தாதியியல்

    49. Myrmecology – எறும்பியல்

    50. Mythology – தொன்மவியல்

    51. Nephrology – முகிலியல்

    52. Neurology – நரம்பியல்

    53. Odontology – பல்லியல்

    54. Ontology – உளமையியல்

    55. Ophthalmology – விழியியல்

    56. Ornithology – பறவையியல்

    57. Osteology – என்பியல்

    58. Otology – செவியியல்

    59. Pathology – நொயியல்

    60. Pedology – மண்ணியல்

    61. Petrology – பாறையியல்

    62. Pharmacology – மருந்தியக்கவியல்

    63. Penology – தண்டனைவியல்

    64. Personality Psychology – ஆளுமை உளவியல்

    65. Philology – மொழிவரலாற்றியல்

    66. Phonology – ஒலியியல்

    67. Psychology – உளவியல்

    68. Physiology – உடற்றொழியியல்

    69. Radiology – கதிரியல்

    70. Seismology – பூகம்பவியல்

    71. Semiology – குறியீட்டியல்

    72. Sociology – சமூகவியல்

    73. Speleology – குகையியல்

    74. Sciencology – விஞ்ஞானவியல் (அறிவியல்)

    75. Technology – தொழில்நுட்பவியல்

    76. Thanatology – இறப்பியல்

    77. Theology – இறையியல்

    78. Toxicology – நஞ்சியல்

    79. Virology – நச்சுநுண்மவியல்

    80. Volcanology – எரிமலையியல்

    81. Zoology – விலங்கியல்

விஜயதசமி ‘அட்மிஷன் ஜோர்’ கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில் பலர் எழுதவோ படிக்கவோ கூட்டல் கழித்தல் கூட தெரியாமலே பாதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இந்த அளவிற்குத்தான் இந்தியாவில் அடிப்படைக் கல்வி உள்ளது.

தரமான தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி வழங்கப்படாததால் திறமை குறைவு காரணமாக பட்டப்படிப்பு படித்தும் நிறைய பேர் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தரமான கல்வியை வழங்காதது என்பது மாணவர்களின் வளர்ச்சியை தடைபடுத்துகிறது. தரமற்ற கல்வி என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

இவ்வாறு உலக வங்கியின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்து நல்ல புரிதலோடு மாணவர்களை உருவாக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

உலக வங்கியின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இந்தியாவின் கல்வித்தரம் இந்த அளவில்தான் உள்ளது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இனியாவது பள்ளி கல்வி தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்..

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது?

நீட் தேர்வும் அதைத் தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணமும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
பெரும்பாலோனோர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது போலவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரம் மிகவும் உயர்வானது போலவும் கருத்தை திணித்து வருகிறார்கள்.
கணிதம், அறிவியல், புவியியல் பாடத்திட்டங்கள் அனைத்து கல்வி முறையிலும் ஒன்றுதான், சமூக அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள்தான் வேறுபடுகின்றன. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று சொல்பவர்கள், முதலில் அது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் கல்விப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு உறுதுணையாகவும் தக்க ஆலோசனை வழங்கவும் மத்திய அரசால் 1961ம் ஆண்டு NCERT (The National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை National Curriculum Framework (NCM) வெளியிடப்படும். அதாவது தேசிய பாடத்திட்ட வரைமுறை என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில மத்திய அரசின் பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே அமலுக்கு வரும். கடைசியாக 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைமுறை (NCM) வெளியானது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு , NCERT ஒப்புதலுடனே அமல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி 11வது 12வது வகுப்புக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் NCERT க்கு தமிழக அரசு அனுப்பியது. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய துறை சார்ந்த வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, NCERT ன் ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பட்டது. NCERT ன் இந்த ஆய்வறிக்கை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் NCM 2005 வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

அதன் பிறகே தமிழக அரசு நான்கு பாடத்திட்டத்திற்கும் பொதுவான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான NCERT ன், தற்போது நடைமுறையில் இருக்கும் 2005ம் ஆண்டு வரையறைக்கு உட்பட்டு, NCERT ஒப்புதல் அளித்துள்ள பாடத்திட்டத்தை, தரம் குறைந்தது என்று எப்படி கூறலாம். மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லையே. ஒருவேளை தரம் குறைவு என்றால் அது மத்திய அரசின் NCERT தரத்தைத் தானே குறிப்பிடும்.
முத்துக்குமரன் குழு, தமிழ் நாடு பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட சிறந்தது என்று சான்று அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பாடத்திட்டமும் மாற்றத்திற்குரியதே. ஆகையால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு தமிழக அரசு குழுக்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாற்றமும் NCERT ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழக அரசின் பாடத்திட்டம் 2010ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த பாடத்திட்ட மாற்றம், பாடத்திட்டக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆக, தமிழக அரசு NCERT தேசிய ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய மாற்றங்களும் செய்து கொண்டு தான் வருகிறது. தமிழக அரசின் பாடத்திட்ட தரம் சரியில்லை என்பவர்கள் முதலில் மத்திய அரசின் NCERT யிடம் தான் முறையிட வேண்டும்.

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும்அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

விதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்காலகோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்டஅரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

பிளஸ் 2வில் 600 ‘மார்க்’ கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள். – தினமலர்.

 

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், ‘டிப்ளமா’ ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், ‘டிப்ளமா’ கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், ‘பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது’ என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

எட்டாம் வகுப்பு வரை விளையாட்டு வகுப்பே இல்லை… இப்போது யோகா வகுப்பா? – ஓர் அலசல்!

‘மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், உடல் மற்றும் மனம் வலிமை ஏற்படுவதற்கும் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவை வழங்கும் விழாவில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார் முதல்வர். ‘இது இந்துத்துவத்தை பரப்பும் முயற்சி. மோடியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆட்சி நடைபெறுவதற்கான மற்றொரு சாட்சி’ என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர், யோகா கலை பயிற்றுநர், மருத்துவர் ஆகிய துறைகளின் நிபுணர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதிலிருந்து…

“யோகாவில் பல வகைகள் உண்டு. இவர்கள் அதில் எந்த வகையைச் சொல்லித்தரப்போகிறார்கள்? அதோடு இணைந்து மந்திரம் போன்ற விஷயத்தைப் புகுத்தி மதச் சாயம் பூசப்போகிறார்களா? அரசாங்கம் கொடுத்திருக்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான அட்டவணையில், விளையாட்டு வகுப்புகளே இல்லை. உணவு உண்ணும்போதும் சொல்லித்தர வேண்டிய பாடங்கள் குறித்த வழிமுறைகளே ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் விளையாட்டு வகுப்புகளே இருக்கின்றன. அந்த வகுப்புகளும் விளையாட்டுக்கா அல்லது அப்போதும் பாடங்கள் நடத்தலாமா என்பதை ஆசிரியர்களே தீர்மானிக்கிறார்கள். இந்த நிலையில், எந்த நேரத்தில் யோகாவைச் சொல்லித் தரப்போகிறார்கள், இதற்கான பாடத்திட்டம் என்னவாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள், குழப்பங்கள், நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன” என்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியை சுடரொளி.

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அரவிந்தன் சிவகுமார், “இங்கே மொத்த கல்வி அமைப்புமே தவறாக இருக்கிறது. மனப்பாடம் செய்யும் கல்வி முறை, நீட் போன்ற போட்டித் தேர்வுகளால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதை மறைக்கவும், ஏதோ சில தனிப்பட்ட மாணவர்களிடம் இருக்கும் கோளாறு என்பதுபோல, யோகா மூலம் சரிசெய்ய நினைக்கிறார்கள். இந்தக் கல்வி அமைப்பை மாற்றாமல், இதுபோன்ற நடவடிக்கைகள் பயன் தரப்போவதில்லை” என்கிறார்.

”சிறுவயதில்தான் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுடைய வளைந்துகொடுக்கும் தன்மைக்கு ஏற்றார்போல யோகா பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அதற்கென தனியாகப் பாடத்திட்டம் தேவை. அது இன்னும் வரையறுக்கப்படவில்லை. யோகா படித்த பட்டதாரிகளே நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு அவர்களைப் பயன்படுத்தாமல், புதிதாக யாரையாவது தயார்படுத்தினால் யாருக்கும் பயனில்லாமல் போகும். உதாரணமாக, ராம்தேவ் போன்ற சாமியார்களிடம் கொடுக்கப்பட்டால், இதற்கு மதச்சாயம் பூசப்படும்” என்று கவலை தெரிவிக்கிறார், 50 வருடங்களுக்கு மேலாக யோகா பயிற்றுநராக இருக்கும் ஆசன ஆண்டியப்பன்.

2015-ம் ஆண்டு, யோகா தினத்துக்காக, மத்திய அரசின் குறுகிய கால ஒப்பந்த வேலைக்கு விண்ணப்பித்த 771 இஸ்லாமிய யோகா ஆசிரியர்களில் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களே இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து நடக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. மாற்றுக் கருத்துகளை அரசு கவனத்தில் கொள்ளும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

 

அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர்
பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், துவக்க நிலை அங்கீகாரம் பெறுவதோடு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தொடர் அங்கீகாரமும் பெற வேண்டும்.
நிறுத்தி வைப்புபோதிய உள்கட்டமைப்பு வசதியில்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி, கடந்த, 2015ல், மழலையர் பள்ளிகளும்
அங்கீகாரம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், மழலையர் பள்ளி துவக்கப்படுவது, சமீப காலமாக அதிகரித்து உள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வண்ண படங்கள் வரைந்து, ‘ப்ளே ஸ்கூல்’ பள்ளியாக மாற்றி விடுகின்றனர்.இப்பள்ளிகள் நடத்தப்படுவது குறித்து, தொடக்கக்கல்வித்துறைக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை.
யு.கே.ஜி., வரையிலான வகுப்புகள் மட்டுமே இப்பள்ளிகளில் நடத்தப்படுவதால், பெற்றோரும் அங்கீகாரம் குறித்து கேள்வி கேட்பதில்லை.
அலட்சியம்இது குறித்து, தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில், அங்கீகாரம் பெறாதவற்றை மூடுவதற்கே, பல்வேறு தடைகள் வருகின்றன.

நீதிமன்ற ஆணை, அரசியல் தலையீடு உள்ளிட்டவற்றை துணையாக கொண்டு, ஏராளமான எண்ணிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால், அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கவோ, அவற்றை பெறவோ பள்ளிகளும்
அக்கறை காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

‘EMIS’ இணையதளம் முடங்கியது – பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், ‘எமிஸ்’ இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, ‘எமிஸ்’ எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.

 

புதிய முகவரி

 

சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையே, ‘எமிஸ்’ இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு, தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய இணையதள முகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.

 

ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:’எமிஸ்’ திட்டத்தில், மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்க வேண்டும். ஏற்கனவே, ௨௦௧௧ – ௨௦௧௬ வரை, இந்த தகவல்களை இணையதளத்தில் இணைத்துள்ளோம்.

அழுத்தம்

 

தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.

 

அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து, தகவல்களை பதிவேற்றம் செய்ய, அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு, இன்னும் சரி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்