உத்தரவை மீறி விடுப்பில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளி ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் செயல்படாது.இது குறித்து ஏற்கெனவே அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகும் இயங்குவதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

மேலும் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றை தவிர்த்து பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனுப்பிய சுற்றறிக்கை ஆகியவற்றை மீறி மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் மீறி பள்ளிகள் செயல்பட்டால் அது தொர்பாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை காட்டுவதாக இருக்கும். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

+2 தேர்வில் ‘கிரேஸ்’ மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், 1௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்.அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, ‘மாடரேட்’ முறை பின்பற்றப்படுகிறது.

இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், ‘கிரேஸ் மார்க்’ என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டே நீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது.அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன.பள்ளி கல்வி சொல்வது என்ன? : இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில், ”தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை.

விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,” என்றார்.சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ”பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, ‘கட் – ஆப்’ மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட,தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,” என்றார்.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை அறிமுகம் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது,விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் புதிய முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத் தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட விண் ணப்பத்தை உரிய ஆவணங்க ளுடன் இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.பொறியியல் படிப்பில் சேர 2015-ம் ஆண்டு வரை அச்சடிக்கப் பட்ட விண்ணப்பங்களே வழங்கப் பட்டு வந்தன. ஆன்லைனில் விண் ணப்பிக்கும் வசதி இருந்தபோதும் அது மாணவர்களின் விருப்பத் துக்கு விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப் படுத்தியது. ஆன்லைனில் விண் ணப்பித்தவுடன் அதை பிரின்ட்அவுட் எடுத்து தேவையான ஆவ ணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பத்துக்கு உரிய கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்று இருந்தது. அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் உரிய கட்ட ணத்தை டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்தி விடலாம்.இந்நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணத்தை ஆன் லைன் மூலமாக மட்டுமே செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, பொறியியல் படிப்புக்கு ஆன் லைனில் பதிவுசெய்யும் மாண வர்கள் அதற்கான கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகிறது. எனி னும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்தி ராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) ஆன்லைனில் பதிவுசெய்து வைத் துக் கொள்ளலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங் களைக் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்துவிடலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திராமல்மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்து வைத்துக் கொள்ளலாம்.

‘நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்

‘பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்த ஆண்டு, மே, 7ல் நடக்க உள்ள, நீட் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு, ௮.௦௫ லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு, 80 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, 23 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டு, 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் : கணிதத்தில் ‘சென்டம்’ குறையும்

தேனி: பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், ‘சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

 

நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்து

எஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 – ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் ‘சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும்.

எளிமை – ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது. ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.

சிறிது குழப்பம் – டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண் வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் ‘புக்பேக்’ பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா ‘கிரியேட்டிவ்’ ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் ‘ஏ ‘வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.

இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கை குறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை .

தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 புதிய ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் (2017-2018) மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2017-2018-ஆம் கல்வியாண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சாய்வுதளங்கள், மாணவ-மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.440.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு ரூ.57.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரு.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 3.28 லட்சம்

குழந்தைகள் சேர்ப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 28,910 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வழங்க ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

EMIS Latest News – Check Students AADHAAR Details …

EMIS news:தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து மாணவர்களின் ஆதார் பதிவை மீண்டும் ஒருமுறை EMIS இணைய தளத்தை open செய்து ஆதார் எண் உள்ளதா என பார்க்கவும்.அதில் எந்தெந்த மாணவர்களுக்கு ஆதார் எண் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய original ஆதார் அட்டையை எடுத்து வரச்செய்து சரிபார்த்து மீண்டும் பதிவேற்றம் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய ‘நேரம்’

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாத்தாளில் தேர்வு எழுதும் ‘நேரம்’ தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் நேற்று குழப்பம் அடைந்தனர். 
இத்தேர்வில் மொத்தம் 150க்கு 75 மதிப்பெண் வினாக்கள் ‘அப்ஜெக்டிவ்’ வகையாகவும், 75 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் ‘தியரி’யாகவும் கேட்கப்படும். முதல் 75 வினாக்கள் ஒரு மதிப்பெண் வகை. அதற்கான விடைகளை தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும்.

இப்பகுதியை மாணவர்கள் எழுதுவதற்கு கடந் தாண்டு முதல் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.ஆனால் நேற்று நடந்த தேர்வில் ‘ஓ.எம்.ஆர்., ஷீட்’டில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு ’75 நிமிடங்கள்’ என குறிப்பிடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.இத்தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அனுப்பிய சுற்றறிக்கையிலும், ‘ஒரு மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்,’ என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ’75 நிமிடங்கள்’ என அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.

சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள் தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை கண்காணிப்பாளர் பெற வேண்டும்,’ என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கணினி அறிவியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,”இத்தேர்வுக்கு 2015-16ல் ஒரு மதிப்பெண் பகுதிக்கு 75 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு, நேரம் குறைவாகஇருப்பதாக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2016-17ல், இப்பகுதி எழுத 90 நிமிடங்களாக நேரம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு ’75 நிமிடங்கள்’ என தவறாக அச்சிடப்பட்டதால்குழப்பம் ஏற்பட்டது. மாணவர்கள் பாதிக்கவில்லை,” என்றார்.

மாணவர்கள் எதிர்பார்ப்பு

மாணவர்கள் கூறுகையில், “ஒரு மதிப்பெண் பகுதியை எழுதி முடித்த 90 நிமிடங்களில், ஓ.எம்.ஆர்., ஷீட்டை அறை கண்காணிப்பாளர் வாங்கிக்கொள்கிறார். இதன்பின் தியரி பகுதி எழுத அனுமதிக்கப்படுகிறது. பிற தேர்வுகளில், அனைத்து வினாக்கள் பகுதியும் எழுதி முடித்த பின், விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைப்பது போல், இத்தேர்விலும் தியரி எழுதி முடிக்கும் வரை ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்கள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்,” என்றனர்.

தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் சிக்கல் – சுகாதாரத் துறை

மீசல்ஸ் ரூபெல்லா’ தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
‘இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்’ என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை.

பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி, தடுப்பூசி போட ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில், 1.77 கோடி பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 44 சதவீதம் பேர் மட்டுமே, தடுப்பூசி போட்டனர். எனவே, தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்றினை ரத்து செய்ய, சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சுகாதாரச்சான்றுரத்து செய்யப்பட்டால், நடப்பாண்டு, பள்ளி களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க இயலாது.சுகாதாரத் துறையினர் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட காலகட்டங்களில், பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

‘இது, 1939ன், பொது சுகாதார திட்டத்தின், பிரிவு, 76, சட்டப்படி, கட்டாயமாகும். எனவே, தட்டம்மை தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச்சான்று ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ல் துவக்கம்

சிவகங்கை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1 ல் துவங்குகிறது.பிளஸ் தேர்வு மார்ச் 2ல் துவங்கி மார்ச் 31 வரை நடக்கிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கி மார்ச் 30 வரை நடக்கிறது. பிளஸ் தேர்வு முடிவு மே 12, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ல் வெளியாகிறது.

இதனால் இரு வகுப்புகளுக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை ஒரே சமயத்தில் துவங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்.,1 ல் துவங்கி ஏப்., 15 க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், விடைத்தாள் அதிகமாக இருந்தால் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். ஆனால், தற்போது குறித்த நாட்களுக்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.