26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்! மத்திய அமைச்சகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களில் 26,000 பேர், தகுதியில்லாத நிலையில் இருக்கிறார்கள்.
இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தகுதிநிலை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியில் தொடர முடியும்’ என மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஆசிரியர் பணிக்கு, பட்டயப் பயிற்சி அல்லது பி.எட். படித்தவர்களையே நியமிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களையும் பட்டப்படிப்பு முடித்தவர்களையும் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் தகுதிநிலை பெறுவதற்கு உதவியாக, தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இரண்டு ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சியில் கலந்துகொண்டு தேர்ச்சிபெற வேண்டும். இந்தப் பயிற்சிக்கு, தமிழ்நாட்டிலிருந்து 25,929 ஆசிரியர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். தெலங்கானாவில் 17,812 பேரும் கர்நாடகாவில் 5,175 பேரும் கேரளாவில் 705 பேரும் பயிற்சி பெற பதிவுசெய்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையில் 3,696 பேர், கோவையில் 3,441 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 2,804 பேர் பதிவுசெய்திருக்கின்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நாடு முழுவதும் முழுமையான தகுதி பெறாத ஆசிரியர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்களின் தகுதிநிலையை உயர்த்தும் நோக்கில், மத்திய மனிதவளத்துறை தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியத்தின் மூலம் ஆன்லைன் வழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு உதவியாக, பாடங்களும் வீடியோக்களும் ஆன்லைனில் பதிந்துவைத்திருக்கின்றனர். இரண்டு ஆண்டு பயிற்சியில், முதலாம் ஆண்டு ஐந்து பாடங்களும், இரண்டாம் ஆண்டில் நான்கு பாடங்களும் என, மொத்தம் ஒன்பது பாடங்கள் இருக்கின்றன. இந்தப் பாடங்களில் ஆரம்பக் கல்வி முறைகள், குழந்தைகளின் உளவியல், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, கற்றல் முறைகள் போன்றவை சொல்லிக்கொடுக்கப்படும். இந்தப் பாடங்களைப் படிக்கும் ஆசிரியர்கள் நேரடியாகப் பள்ளியில் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். பயிற்சிக்குப் பிறகு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய திறந்தநிலைக் கல்வி அமைப்பு நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ள, இந்தியா முழுவதும் பதினான்கு லட்சம் பேர் (14,02,962) பதிவுசெய்திருக்கின்றனர். பீகாரில் 2.82 லட்சம் பேர், உத்தரப்பிரதேசத்தில் 1.82 லட்சம் பேர், மேற்குவங்கத்தில் 1.77 லட்சம் பேரும் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தகுதி குறைந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

பட்டப்படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்பெடுக்க வேண்டும். இவர்கள் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவராக இருந்தால், ஆறு மாதகால அளவிலான பயிற்சியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்’ என்கிறது மனிதவளத் துறை. இந்தப் பயிற்சியையும் தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியமே நடத்துகிறது. இந்தப் பயிற்சியில் சேர, இம்மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.nios.ac.in  என்ற இணையதள முகவரியை அணுகவும்.

“இத்தகைய பயிற்சிக்கு ஏற்பாடு செய்து, ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது” என, தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படும் நிலையில், பயிற்சிக் கட்டணமாக 5,000 ரூபாயைச் செலுத்தச் சொல்லி பொருளாதார அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்” என்கின்றனர்.

ஆசிரியரின் தகுதிநிலை உயர்வு, மாணவர்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கட்டும்!

 

பள்ளி மாணவர்களுக்கு, ‘ஹெல்ப்லைன்’ தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, ‘ஹெல்ப்லைன்’ திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.

புதியபாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ‘ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ‘ஹெல்ப்லைன்’திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களைதெரிவிக்கலாம்.

அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும்கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல்நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது

பிளஸ் 2 பொதுத்தேர்வு: டிச.11 முதல் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை (டிச.11)முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-

கடந்த 2016 மார்ச் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் இடைநிலைக் கல்வியில் முழுமையாக தேர்ச்சி பெற்று இரண்டாண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நேரடித் தனித்தேர்வர்களாக மார்ச் 2018-இல் நடைபெறும் தேர்வை எழுத முடியும். மேலும் இதுவே கடைசி வாய்ப்பாகும்.தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று 11-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பத்தை அபராதக் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.கால அவகாசத்தைத் தாண்டி, விண்ணப்பிக்க விரும்புவோர் டிச.18-ஆம் தேதி முதல் டிச.20 வரை உரிய அபராதக் கட்டணத்துடன் (ரூ.1,000), விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தட்கலில் விண்ணப்பிக்க அவகாசம் இல்லை: இந்த முறை தட்கலில் விண்ணப்பிக்க தனியாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களைப் பெறலாம் .

தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வெழுதுவோர் (ஹெச் வகை) ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன்இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் (ஹெச்பி வகை) தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல்- பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187 மற்றும் ஆன்லைன் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை, சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பதை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிற்ககம் செய்ய முடியும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும் என்றார் வசுந்தராதேவி

பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் : தத்கல் வாய்ப்பு கிடையாது

‘பிளஸ் 2 பொது தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்’ என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 பொது தேர்வில், மார்ச், 2018ல், பள்ளிகள் வழியே இல்லாமல்,

நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.நேரடி தனித்தேர்வர்கள், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, வரும், 11 முதல், 16ம் தேதி வரையிலும், பின், அபராத கட்டணத்துடன் வரும், 18 முதல், 20ம் தேதிவரையிலும், விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிக்க, தத்கல் வாய்ப்பு வழங்கப்படாது.

ஆண், பெண் தேர்வர்கள், தேர்வுத்துறையால் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.நேரடி பிளஸ் 2 இதுவே கடைசி : இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 பொது தேர்வை, தனித்தேர்வர்கள் நேரடியாக எழுத முடியாது. பிளஸ் 1 முடித்த பிறகே, பிளஸ் 2 தேர்வு எழுத முடியும்.

இந்த ஆண்டு, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு, நேற்று வெளியானது. அதில், ‘2016 ஜூலை தேர்வுக்கு முன், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகள் கடந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத, வரும் மார்ச் தேர்வு தான் கடைசி வாய்ப்பு’ என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிளஸ் 1, 2 அரையாண்டு தேர்வு நாள் மாற்றப்படுமா?- இதுவரை மாற்று தேதி அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 21-ம் தேதி அத்தொகுதிக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ்2 தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவது குறித்து இதுவரை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ளன. இத்தேர்வுகள் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதேபோல், எஸ்எஸ்எல்சி அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது.

இதற்கிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் நாளான டிசம்பர் 21-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகளும், பிளஸ்2 வகுப்புக்கு வேதியியல், கணக்குப்பதிவியல் பாட தேர்வுகளும், எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருப்ப மொழி தேர்வும் (சிறுபான்மை மாணவர்களுக்கு) நடைபெற உள்ளன.எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய 3 தேர்வுகளையும் பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்தான் வழங்கப்படும்.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் காரணமாக டிசம்பர் 21-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே, அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் வேறு தேதிக்குமாற்றப்படுவது குறித்தும், மாற்று தேதி குறித்தும் பள்ளிக்கல்வித் துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மாற்றுத் தேதி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டில், எம்.கலைச்செல்வி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்த உத்தரவிட வேண்டும்.

இதன்மூலம் பள்ளிகளில் நடைபெறும் துன்புறுத்தல், வேண்டத்தகாத செயல்பாடுகள் தடுக்க முடியும். எனவே அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு, தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏனெனில் ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட்டால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த நிதிச்சுமையை மாணவர்களின் கல்வி கட்டணத்தில் தான் மறைமுகமாக பள்ளி நிர்வாகங்கள் திணிக்கும். இதனால் மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் கருத்தாக உள்ளது.

எனவே, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று கூறும் இந்த மனுவை ஏற்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், பள்ளி வளாகத்தை முழுமையாக கண்காணிக்க நினைக்கும் பள்ளி நிர்வாகங்கள், கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

4 மாணவியர் மரணத்திற்கு பின் பள்ளிக்கு 100 சதவீத வருகை

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம் பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.

 

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்த, நான்கு மாணவியர், ஆசிரியர் திட்டியதால் கடந்த மாதம், 24ல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த பள்ளியில், 1,322 மாணவியர் படித்து வந்தனர். நான்கு மாணவியர் தற்கொலை சம்பவத்தையடுத்து, பயத்தால் மாணவியர் வருவது பாதியாக குறைந்தது.

இதையடுத்து, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உளவியல் நிபுணர்கள் தலைமையில், மாணவியருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

இதனால், 1,290 மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அதேசமயம், தற்கொலை செய்து கொண்ட மாணவியருடன், பிளஸ் 1 படித்து வந்த, 32 மாணவியர் மட்டும் வரவில்லை.

இதையடுத்து, சென்னை குழந்தைகள் நலம் உளவியல் ஆலோசகர் யசோதா தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு வந்து மூன்று நாட்கள், 32 மாணவியருடன் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர்.

அதேபோல், அவர்களது பெற்றோருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

பின், அந்த மாணவியரும் நேற்று முதல் பள்ளிக்கு வரத்துவங்கினர். இதனால் பள்ளியில் மாணவியர் வருகை, 100 சதவீதமானது.

‘ஆன்லைன்’ முறையில் பள்ளிகள் அங்கீகாரம்

அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, ‘ஆன்லைன்’ முறையில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது; விதிகளை மீறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காது.

 

தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், நர்சரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன.

இந்த அங்கீகாரத்துக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த, சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களை தீர்க்க, வரும் கல்வி ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.,யை போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, ‘சாப்ட்வேர்’ கேட்கும் ஆவணங்களை வழங்கிய பின், பள்ளிகள் பதிவு செய்ய முடியும். அதனால், விதிமீறிய பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் பெற முடியாது என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் ஆசிரியர்கள்: தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்

அரசு பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால், ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் வெகுவாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் மீதான கட்டுப்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாணவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது, பொதுத்தேர்வில், 100 சதவிகித தேர்ச்சி விகிதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கெடுபிடிகளால், கடும் தவிப்புக்கு ஆளாகினர். சமீபத்தில், பெற்றோரை அழைத்து வர ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், நான்கு மாணவியர், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில், பல ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதனால், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல், தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளில், பெரும்பாலானோரின் பெற்றோர், கூலி வேலை செய்பவர்களாக, உரிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். இதனால், அவர்களை மாணவர்கள் எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். ஏற்கனவே பள்ளியில் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற உத்தரவால், ஆசிரியர்களுக்கு, பல மாணவர்கள் மரியாதை தருவதில்லை. அதற்கும் மேலாக, மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, ஆசிரியர்களுக்கு இருந்த ஒரே ஆயுதம்; பெற்றோரிடம் தெரிவிப்பது மட்டும் தான். தற்போது ஏற்பட்ட சூழலில், ‘பெற்றோரிடம் தெரிவித்தால், நடப்பதே வேறு’ என, பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கின்றனர். பள்ளிக்கு வருவதாக கூறிவிட்டு, நீர்நிலை, குட்டை, சினிமா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றனர். மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் கூட, உயர் அதிகாரிகளுக்கு பதில் கூறிக்கொள்ளலாம்; ஆனால், மாணவர்களை கட்டுப்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கையும், சிறையும் தான் கிடைக்கும் என்ற பயம், ஆசிரியர்களிடையே உருவாகியுள்ளது. இதனால், பலரும் மாணவர்களை கண்டு கொள்வதேயில்லை. பல தலைமை ஆசிரியர்களே, ‘மாணவர்களை கண்டிக்க வேண்டாம்’ என, ஆசிரியர்களிடம் அறிவுறுத்துகின்றனர். இதனால், பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறாதோர் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒழுக்கமும் கல்வியும் போதிக்க வேண்டிய, ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், எதிர்கால சமூகத்தில் பாதிப்புகள் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்!!

கல்வி தரம் உயர வேண்டுமானால்……………

 

1.மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

 

2.பள்ளியில் பராமரிக்கப்படுகின்ற தேவையில்லாத records நீக்கப்பட வேண்டும்

 

3.பணியிடை பயிற்சி ( crc, brc பயிற்சியால் எந்த பயனும் இல்லாததால்) நீக்கப்பட வேண்டும்.

 

4.வகுப்பில் குழு அமைப்பில் இல்லாமல் ,சூழ்நிலைக்கு ஏற்ப ,அட்டைகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியருக்கு உரிமை வேண்டும்.
 

5.கண்டிப்பாக ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கியே ஆக வேண்டும்.(தேவைப்பட்டால் இரண்டு,மூன்று பள்ளிகளை கூட இனைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்)

 

6.ஆசிரியரை பாடம் கற்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

 

7.அதிகாரிகள் பள்ளியில் காணுகின்ற குறைகளை நீக்க ஆலோசனை வழங்க வேண்டுமேயொழிய, குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வரக்கூடாது.

 

8.எந்த பள்ளியிலும் காலிப்பணியிடமே இருக்கக்கூடாது.

 

9.பயிர் நன்றாக வளர களையை நீக்குவது போல, பள்ளியில் சரியில்லாத மாணவர்களை நீக்கவோ அல்லது திருத்தவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

 

10 .ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.

 

11.சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியே ஆக வேண்டும்.

 

12.இரண்டு தலைமையின் கீழ் சரியாக பணியாற்ற முடியாது(Aeeo,ssa)

 

13.பள்ளியில் ஆசிரியைகள் மகப்பேறு விடுமுறைக்குச் சென்றால் கூட,

அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

 

14.அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டுமேயொழிய, அடிமைகள் போல் பழிவாங்கத் துடிக்கக் கூடாது.

 

இன்னும்…இன்னும் …ஆயிரம் ஏக்கங்கள் உள்ளன.

 

குறைந்த பட்சம் மேலே உள்ளதை அரசு செய்து பார்க்கட்டும்.