அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.

இதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.

ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?? அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.

மேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,

பெற்றோர் ஆசிரியர் உறவு:

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்..?? மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.

வரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.

ஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.

சில பள்ளியில்  அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து  அக்கறையுடன் செயல்படவேண்டும்.

குறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்

ஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான     மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.
தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.

தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.

தனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.

அதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.

எனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.

மாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.

ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.

சிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை பழத்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.

ஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.

பல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

ஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.

கற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.

தனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.

அரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை  அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

அரசு  பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் சாரணர் இயக்கம் கட்டாயம் : அரசு உத்தரவு

பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் சாரண, சாரணியர் இயக்கம் கட்டாயம் தொடங்கப்பட வேண்டும்.
இந்த இயக்கத்தில் குறைந்தது 12 பேர் கொண்ட முழுமையான சாரணர் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக பள்ளியில் ஆர்வம் மிக்க ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.மாவட்ட அளவிலான பயிற்சிகள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சிகளை வழங்கி ராஜபுரஸ்கார் விருது பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இனி, ‘ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!’; கணினிமுன் அமர்ந்து கல்லூரியை தேர்வு செய்யலாம்

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், ‘ஆன் லைனில்’ நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.
உத்தரவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., – எம்.இ., – எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர் சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்முறையை அறிமுகம் செய்தார். இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது.அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அறிமுகம் ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார்.அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், ‘ஆன்லைன் கவுன்சிலிங்’ நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகங் களில், ஆன்லைன் கவுன்சிலிங் உதவிமையங்கள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்கள்,தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப் பங்கள் ஏற்புக்கு பின், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விருப்ப இடங்களை பதிவு செய்யும் முறை அறிமுகம்செய்யப்படும். பின், அவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு ஏற்ப, இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்படும்.வழிகாட்டல்: எனவே, வரும் கல்வி ஆண்டில் மாணவர் களும், பெற்றோரும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்குவர வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கேயும் அலையாமல், கணினி முன் இருந்து, கல்லுாரியை தேர்வு செய்யலாம். ‘இதற்கான வழிகாட்டல் மற்றும் அறிவிப்புகள், பிப்ரவரி யில் அறிவிக்கப்படும்’ என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

சைனிக் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள்பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம்.6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரைவிநியோகிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் ‘முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ, அல்லது இணையதளத்தை (www.sainikschoolamaravathinagar.edu.in) பார்த்தோ தெரிந்துகொள்ளலாம் என்று பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு… அதிகாரம்!

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை.
பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்.,30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது,பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், ‘டிவிசெய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள்ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில், காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, நமது  நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.’மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறதுஎன, அவர்தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, ‘எமிஸ்தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை: 2018 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்’பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!!

ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, ‘வாட்ஸ் ஆப்பில் வதந்திகளை பரப்பினால், ‘சஸ்பெண்ட்
செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, ‘சஸ்பெண்ட்செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்

EMIS தகவல்

👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்

👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன

👉இவை student I’d card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

2018ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்:
01. ஆங்கில புத்தாண்டு – 01.01.18- திங்கள்
02. பொங்கல் – 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் – 15.01.18 – திங்கள்
04. உழவர் திருநாள் – 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் – 26.01.18 – வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி – 29.03.18 – வியாழன்
08 புனித வெள்ளி – 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 – ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் – 14.04.18- சனி
11. மே தினம் – 01.05.18 – செவ்வாய்
12. ரம்ஜான் – 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் – 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி – 13.09.18 – வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி – 02.10.18 – செவ்வாய்
19. ஆயுத பூஜை – 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி – 19.10.18- வெள்ளி
21. தீபாவளி– 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்