பிளஸ் 1 துவங்கும் போது, ‘லேப்டாப்’ : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

”பிளஸ் 1 வகுப்பு துவங்கும் போது, மாணவர்களுக்கு, ‘லேப்டாப்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.கரூரில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில், 412, ‘நீட்’ மற்றும் போட்டி தேர்வு மையங்கள், வரும் நவம்பர் மாதத்திற்குள் துவக்கப்படும். இவை மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி அளவில் அமைக்கப்படும்.இந்த மையங்களுக்கான, 54 ஆசிரியர்கள், ஆந்திரா மாநிலத்திற்கு, பயிற்சிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.இவர்கள் மூலம், 3,000 ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3,000 பள்ளிகளில் தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த, 12 ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதையடுத்து, 2018 – 19 முதல் படிப்படியாக அனைத்து வகுப்பு பாட திட்டங்களும் மாற்றப்படும். கடந்த ஆண்டு, ‘டெண்டர்’ மற்றும் நீதிமன்ற வழக்கு காரணமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு துவங்கும்போது, லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளியில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில், 10 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வகுப்பில், 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, அறிவியல் ஆராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள, மேலை நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்’ என, கோரிக்கை

மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ – மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ – மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :

‘டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ – மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ – மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ – மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.

இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.’தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்’ என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி

கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேசியதாவது:

கோபியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் 32 மாவட்ட தலைநகரங்களிலும், அரசின் சார்பில் ₹2 கோடியே 17 லட்சம் செலவில் உயர் கல்வி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும்.

பாடத்திட்ட மாற்றத்தினால், பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கும். 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். ₹437 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

 

இந்த பயிற்சி மையத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின் பயிற்சி பெறுபவர்கள் தேவையான பயிற்சியை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மாற்றத்தினால், பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் தமிழகத்திற்கு கல்வி கற்க வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, கற்கும் பாரத திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வரவில்லை என்பது எனது பார்வைக்கு இப்போதுதான் வந்துள்ளது. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம்

தனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், ‘டெட்’ என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

‘தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 2011 முதல், அனைத்து புதிய ஆசிரியர் களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்’ என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், ௨௦௧௦ல், வெளியிட்ட அறிவிப்பில், ‘புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்’ என, தெரிவித்தது. ‘தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்’ என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கூடுதல் அவகாசம்:

இந்த வழக்கில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, சிறுபான்மை நிறுவனங்கள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்களில், ௨௦௧௦க்கு பின், பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ௨௦௧௪ வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதிலும், பலர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு, 2019 வரை கூடுதல் அவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தகுதி தேர்வு:

அதில், ‘மத்திய அரசின் கல்வியியல் கவுன்சில் மற்றும் தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ‘இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 2019, மார்ச், 31க்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சர்வதேச அறிவியல் மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது

இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு சென்னையில் 4 நாட்கள் நடைபெறுகிறது என்று மத்திய மந்திரி ஹர்‌ஷவர்தன் கூறினார்.

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துக்காட்டவும் இந்தியாவின் சர்வதேச அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. 2015–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 13–ந் தேதி இந்த மாநாடு தொடங்குகிறது. சென்னை ஐ.ஐ.டி., மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இடங்களிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான், இலங்கை மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் 2,100 மாணவ–மாணவிகள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர். அறிவியல் விஞ்ஞானிகள் 300 பேர் பங்கேற்கிறார்கள். 750 இளம் விஞ்ஞானிகளும் வருகிறார்கள். சர்வதேச அளவில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 12–வது இடத்தில் இருந்து 9–வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இந்தியா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட அறிவியல் கதைகள் கொண்ட திரைப்படங்கள் மாநாட்டில் திரையிடப்படும். ஆழ் கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து கருத்தரங்கு நடைபெறும்.

கின்னஸ் புத்தக சாதனைக்காக 1,000 பள்ளி மாணவர்களுக்காக உயிரியல் பாட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் செல் உயிரியல் குறித்த காணொலி காட்சி இடம்பெறும். மேலும் பப்பாளி பழங்களில் இருந்து அதன் மரபணுக்களை பிரித்தெடுக்கும் செயல்முறை நடத்தப்படும்.

புதுமை படைப்பாளர் போட்டிகள் தமிழக மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படும். இந்த மாநாடு 16–ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஈடுபட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் எம்.ராஜீவன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்ப குழு ஆணையர் பழனிச்சாமி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

உயர்கல்வி உதவித் தொகை குறைப்பு: தவிப்பில் மாணவர்கள்!

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி உதவித் தொகையை தமிழக அரசு குறைத்துவிட்டதால் நிகழாண்டு 1.50 லட்சம் மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி ஆகியுள்ளது.
சிறப்பு உதவித் தொகை: கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் வகையில் கடந்த 2012இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.
குஜராத், மகராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஆந்திரம்,கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களது உ.யர்கல்வி செலவை அரசே ஏற்கும் வகையில் திட்டம் உள்ளதாகவும், தமிழகத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை அறிவித்தார். இதன்படி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமும் அமலுக்கு வந்தது.
இத் திட்டத்தின்படி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
உதவித் தொகை குறைப்பு: இத் திட்டத்தில், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு இத் தொகை ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இத் திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர், மாணவிகளுக்கு பெரிதும் சுமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், 2017-18ஆம் ஆண்டில் கல்விக்கட்டணமானது உயர்ந்துள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவானது, 2016-17இல் பிஇ, பிடெக், பிஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.40 ஆயிரமாக இந்த கல்விக் கட்டணம் (ஆண்டுக்கு), 2017-18, 2018-19 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.70 ஆயிரமாக இருந்த கல்விக் கட்டணம், ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், எஸ்சி, எஸ்டி மாணவர் ஒவ்வொருவரும் அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகையை தவிர்த்து மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை சொந்த செலவில் செலுத்த வேண்டியுள்ளது. இல்லையெனில், விடுதியை விட்டும், கல்லூரியை விட்டும் இடைநிற்கும் சூழல் எழுந்துள்ளது. கல்விக் கட்டணம் உயர்ந்தால் உயர்வுக்கேற்ப உதவித் தொகையை உயர்த்த வேண்டும். ஆனால், ஒருபுறம் கல்விக் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மறுபுறம் கல்வி உதவித் தொகையை குறைத்து அரசாணை வெளியிட்டிருப்பது, தமிழக அரசானது தெரிந்தே கிணற்றில் குதிக்கும் செயலை செய்திருப்பதாக தலித் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதுதொடர்பாக, அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் மா. பரதன் கூறியது:
தமிழகத்தில் அண்மைய கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 7.21 கோடியாக உள்ளது. இதில், ஆதிதிராவிடர் 1.44 கோடி, பழங்குடியினர் 7.95 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கல்வியறிவு பெற்றோர் (இருபாலரும் சேர்த்து) ஆதிதிராவிடரில் 73,.26 சதமும், பழங்குடியினரில் 54.34 சதமும் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். குறிப்பாக உயர்கல்வி, தொழிற்கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் உதவித் தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. கல்விக் கட்டணத்தை குறைத்துவிட்டு உதவித் தொகையை குறைக்கலாம். ஆனால், கல்விக் கட்டணத்தை உயர்த்திவிட்டு உதவித் தொகையை குறைத்திருப்பது உள்நோக்கமுடையது. எனவே, ஆதிதிராவிட நலத்துறையின் அரசாணை எண் 51, 52ஐ ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மீண்டும் திரும்பிய 2013: கடந்த 2013ஆம் ஆண்டில் இதேபோல கல்வி உதவித் தொகையை குறைத்து அரசாணை எண் 106, 107 வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து பட்டியிலன அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தியதாலும், அரசுக்கு கோரிக்கை மனுக்களை அளித்ததாலும் அந்த அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டன. முழு அளவிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இப்போது, மீண்டும் கல்வி உதவித் தொகையை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளோம். மாநில அளவில் ஆலோசனை நடத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.
நிகழாண்டு ரூ.2935.65 கோடி!: தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 2017-18ஆம் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.3,281.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.2,935.65 கோடி (89.46 விழுக்காடு) ஆதிதிராவிட, பழங்குடியின கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய உதவித் தொகை போதுமானதாக வரவில்லை. இந்த சூழலில் கல்விக் கட்டணமும் உயர்ந்துவிட்டதால் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், உயர்கல்விக்கான சிறப்பு உதவித் தொகையை முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆதி திராவிட நலத்துறை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted by Karthikeyan Rk at 06:56 No comments: 

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: EDUCATIONAL NEWS

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோருக்கு சிறை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தவறும் பெற்றோர், காவல் நிலையத்தில் உணவின்றி சிறை வைக்கப்படுவார்கள் என்று மாநில அமைச்சர் ஒருவர் எச்சரித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அமைச்சராக இருக்கும் ஓம் பிரகாஷ் ராஜ்பார், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக, பொதுக் கூட்டத்தில் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பலியாவின் ரஸ்டா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நானே ஒரு சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறேன். அதன்படி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்காத பெற்றோர், காவல் நிலையத்தில் 5 நாள்களுக்கு அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு உணவோ, குடிநீரோ வழங்கப்பட மாட்டாது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்காத பெற்றோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு மரண தண்டனை கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று அந்த விடியோவில் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பேசியுள்ளார்.
அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தனது கருத்தில் தவறேதும் இல்லை என்றும், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். கல்வி பயில்வதற்காக, அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்போது, பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இல்லை’ என்று ஓம் பிரகாஷ் ராஜ்பார் பதிலளித்தார்.

3 மொழிகள் பாட திட்டத்தில் வெளிநாட்டு மொழி கிடையாது

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் உள்ள, மூன்று மொழி பாடத் திட்டத்தில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.அதன்படி, மூன்று மொழி பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழிகள் இனி இடம்பெறாது.
மூன்று மொழி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள மாற்றங்கள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உயரதிகாரிகள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், மூன்று மொழி பாடத்திட்டம் உள்ளது. அதன்படி, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியும் கற்றுத் தரப்படுகின்றன.மாணவர்கள் தாய்மொழியைத் தவிர, மற்றொரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், பல்வேறு பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.அதனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலத்தைத் தவிர, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை மூன்றாவது மொழிப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத் தரப்படும்.பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை, விருப்ப பாடமாக கற்றுத் தரலாம். தற்போது, எட்டாம் வகுப்பு வரை உள்ள மூன்று மொழி பாடத்திட்டத்தை, 10 ம்வகுப்பு வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி

”60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது,” என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:மாநில அளவில் 125 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 60 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 39 தலைமை ஆசிரியர்களுக்கு டி.இ.ஓ., க்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் நலத் திட்டங்கள் வழங்குவது, பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் மேற்பார்வை, உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் உள்ள 2800 அரசு உயர்நிலை பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலையில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்ற கிளையிலும் உள்ளது.

சென்னை உத்தரவை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர், செயலர் என யாரும் மூன்று மாதங்களாக அக்கறை செலுத்தவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை.ஆங்கில வழிக் கல்வி தொடர்பான அரசின் கொள்கை முடிவு தலைமை ஆசிரியர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை. புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கும் பணியில் பாடங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழு பட்டியல் விபரத்தை வெளியிட வேண்டும். இக்குழுவில் தகுதி, திறமை, அனுபவமில்லாத ஆசிரியர் சிலர் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் கல்வி அதிகாரிகள் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்த நிலையிலும் நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதையும், வெளிப்படையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.பொதுச் செயலர் நடராஜன் உடன் இருந்தார்.

கிராமப்புற பள்ளிகளை சென்றடையாத ஆக்கப்பூர்வ திட்டங்கள் !!

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து ஆக்கப்பூர்வ திட்டங்களும், நகர்புறங்களில் உள்ள, சில முன்மாதிரி அரசுப் பள்ளிகளிலே அமல்படுத்துவதால், கிராமப்புற பள்ளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 1,650 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கற்றல், கற்பித்தல் திட்டங்களுக்கு, பல லட்சங்கள் நிதியாக, ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.’விருட்சுவல் கிளாஸ் ரூம், ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்புகள் முதல், இலவச கராத்தே பயிற்சி, புதிய வகை விளையாட்டுகள் அறிமுகம் என, பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முன், சோதனை முறையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசுப் பள்ளிகளில் மட்டும், அறிமுகம் செய்யப்படும். இதற்கு,சில அரசுப்பள்ளிகளின் பெயர்களே, எப்போதும் சிபாரிசு செய்வது வழக்கமாகிவிட்டது.இத்திட்டங்கள், பிற பள்ளிகளுக்கு விஸ்தரிக்காமல் சுணங்கிவிடுவதால், குறிப்பிட்ட பள்ளி மாணவர்களே, பயனடையும் நிலை தொடர்கிறது.கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’கோவையில், கல்வித்துறை முன்மாதிரி திட்டங்கள் அனைத்தும், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அளிப்பதால், அங்குள்ள மாணவர்கள் மட்டுமே, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுகின்றனர். சிறந்த பள்ளிகளுக்கான விருதையும் தக்கவைத்து கொள்கின்றனர்.

தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புக்கு, கைமாறாக இதுபோன்ற செயல்கள் நடப்பதால், பின்தங்கிய கிராமப்புற பள்ளிகளின் நிலை, படுமோசமாக மாறிவருகிறது.’நகர்புற பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற பள்ளிகளுக்கும், முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தினால் மட்டுமே, மாணவர்களின் தொடர்பு திறனை வளர்த்தெடுக்க முடியும்.எனவே, இனிவரும் காலங்களிலாவது, அரசின் புதிய கல்வித்திட்டங்கள் செயல்படுத்த, கிராமப்புற பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள்: செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதேபோல்

 

பாடத்திட்டம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது, நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்றும் வரைவு பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள் வரை மக்கள் கருத்து கூறலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.