குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் –பாதுகாத்திட பெற்றோர்களுக்கான வழிகள்

குழந்தைகளுக்குஎதிரான பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்திட வேண்டிய பொறுப்புகள் பெற்றோர்களுக்குதான் அதிகமாக

இருக்கின்றதுஅதிலும்குறிப்பாக பெண்களுக்கு தான் அதிகம்.

 

ஏனென்றால்தந்தை வேலைக்கு சென்றவுடன் குழந்தையுடன் அதிக  நேரம் இருப்பது ஒரு தாய் தான்குழந்தை பள்ளி விட்டுவந்தவுடன் அல்லது விளையாடி விட்டு வந்தவுடன் என்று எல்லாவற்றையும் கண்காணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு தாய்க்குதான் கிடைக்கின்றது.

 

அதுபோன்றநேரங்களில் குழந்தைகளை நாம் எவ்வாறு பாலியல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என்ற வழிமுறைகளை பார்ப்போம்.

 

இளமை தொடக்கம் – குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலியல் ரீதியானபிரச்சனைகள் என்னஎன்பதை  புரியவையுங்கள்அவர்கள் வயதுக்கு வரவேண்டும் என்று  காத்திருக்காதீர்கள்.

 

உடல் உறுப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துங்கள்அந்தரங்க உறுப்புக்கள் தொடர்பான அறிவுறுத்தலையும் செய்யுங்கள்.

 

உடல் பாகங்களின் பெயர்களை சரியாக கூறுங்கள் – குழந்தைகளிடம் உடல் உறுப்புக்களின் பெயர்களை சரியாக சொல்லிக் கொடுங்கள்.

 

அப்பொழுதுதான் அவர்களிடம் யாரும் தவறாக நடந்துகொண்டால்அதை உங்களிடம் சரியாக கூறுவார்கள்.

 

 

இரகசியங்கள் இல்லாமல் பாருங்கள் – சில விஷமிகள் குழந்தைகளிடம் ஆபாசமான விஷயங்கள் அல்லது உடல்ரீதியான தொந்தரவுகள் செய்துவிட்டு, பெற்றோரிடம் கூறாதீர்கள் என்று சொல்லி நான் உனக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிதருகின்றேன் என்று கூறுவார்கள். அதுபோன்று, யாரும் கூறினால் வீட்டில் வந்து சொல்ல வேண்டும் என்றுகுழந்தைகளிடம்கூறுங்கள்.

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

 

இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

 

இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.  குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

 

இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

 

 

மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர். 

பாடத்திட்டத்தை மாற்றுங்கள் – தினத்தந்தி தலையங்கம் !!

முன்பெல்லாம் தமிழகத்தில் பள்ளிக்கூடக்கல்வி மிகவும் உயர்தரத்தில் இருந்தது.
 ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வித்தரம் குறைந்ததால், ஐ.ஐ.டி. உள்பட அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்லூரிகளிலும், கலைக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை
குறையத்தொடங்கியுள்ளது.

 இந்த நிலையில், 2005-2006-ல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் விதவிதமான பாடத்திட்டம் என்றில்லாமல், ஒரே கல்விமுறை இருக்கவேண்டும் என்றநோக்கத்தில், “சமச்சீர் கல்விமுறை” கொண்டுவரப்பட்டது. மற்ற கல்வித்திட்டங்களின் கல்வித்தரம் உயர்ந்துகொண்டே சென்றபோது, தமிழ்நாட்டில் மாறிவரும் காலத்திற்கேற்ப பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும் வகையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்திருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவுடன் கைநிறைய சம்பளம் உடனடியாக கிடைக்கும் வகையில், வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருந்த நிலையில், அலைஅலையாய் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்கத் தொடங்கினார்கள்.

 இப்போது பிளஸ்-2 படித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையைப்போல’ மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண்களை பெற்றுவிட்டு, நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில், இந்த மார்க்குகளின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் இப்போது ஒரு திடுக்கிடும் தகவலை தந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் 50 சதவீதம்பேர் முதல் ஆண்டில் தங்கள் ‘செமஸ்டர்’ தேர்வில் பல பாடங்களில் தோற்றுவிடுகிறார்கள். இவ்வாறு தோல்வியடையும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள்.

 இதுபோல, என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்களில் பெரிய வேலைக்கு செல்பவர்களில் ஏராளமானோர் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, அந்த பாடத்திட்டத்தின்கீழ் படிக்க முடியாமல், ஏராளமானோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.
  இதற்கெல்லாம் காரணம், பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு கல்வித்துறையால் மாற்றப்படாமல் இருப்பதுதான். வருகிற ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கை அகில இந்திய அளவிலான ‘நீட்’ தேர்வு மூலம்தான் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நிச்சயமாக ‘நீட்’ தேர்வை எழுதி வெற்றி பெறவே முடியாது.

 தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் தமிழக மாணவர்கள் பெரும்பான்மையாக இல்லாமல், பிற மாநிலத்தவர் வந்து சேரப்போகும் அபாயநிலை கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. எனவே, உடனடியாக பிளஸ்-2 பாடத்திட்டத்தை தமிழக அரசு உயர்தரத்தில் மாற்றி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக வைத்தே ஆகவேண்டும். கிராமப்புற மாணவர்களால், ஏழை மாணவர்களால், உயர்தரத்தில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக படிக்க முடியாது என்று சொல்வதெல்லாம் இனி எடுபடாது. ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்துக்கு இணையாக நமது மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இன்னும் சற்று உழைத்து மாணவர்களை படிக்க வைத்தால், நிச்சயமாக நமது மாணவர்களால் படிக்க முடியும்.

 ஏற்கனவே, நிபுணர்குழு இதுபோல திருத்தப்பட வேண்டிய ஒரு பாடத்திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
 தமிழக அரசு உடனடியாக அந்த ஒப்புதலை கொடுத்து, மிகவும் உயர்தரத்தில் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கி, அந்த பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கோடைகால விடுமுறையின்போது தீவிரமான பயிற்சி அளிக்கும் வேலைகளை தொடங்கவேண்டும். இதையெல்லாம் உடனடியாக தொடங்கினால்தான், வருகிற கல்வியாண்டில் பிளஸ்-2 பாடத்திட்டங்களை மாற்றமுடியும். ஒளிமயமான எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும். இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்

TET : அமைச்சரின் அறிவிப்பால் பி.எட் பட்டதாரிகள் அதிர்ச்சி

வழக்கு முடிந்தவுடன் அறிவிப்பு வரும், ஜனவரியில் வந்துவிடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு வைக்காமலேயே ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தகுதித் தேர்வை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பி.எட் பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

NCTE வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியே தீரவேண்டும். வழக்கை காரணம் காட்டி கடந்த மூன்றாண்டுகளாக நடத்தாமல் இருந்தவர்கள் இப்போது சொல்லும் காரணங்களால் மீண்டும் வழக்குகளை நோக்கி இளைஞர்களை தள்ளுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

 

மத்திய அரசு CTET தேர்வினை இதுவரை சுமார் பத்து முறை நடத்திவிட்டது. ஆனால் மாநில அரசு இதுவரை 3 முறை மட்டுமே நடத்தியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிக்கை தனி, ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிக்கை தனி. இவற்றை டி ஆர் பி தனித்தனியாகவே வெளியிடும். ஆசிரியர் நியமனங்களே இல்லாத போதும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தலாம். சான்றிதழ் பெற்று வைத்துள்ளவர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வரும்போது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியும்.

 

தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பானது தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களின் உரிமையை பறிப்பதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் அமைந்து விடக் கூடியது. தகுதித் தேர்வை நடத்தி அதில் வெற்றி பெறுகிறவர்களையும் சேர்த்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தினால் சர்ச்சைகளுக்கு இடமிருக்காது. மாறாக தகுதித் தேர்வு நடத்தாமல் ஆசிரியர் நியமனம் செய்ய முடிவெடுத்தால் பாதிக்கப்படும் இளையவர்கள் மீண்டும் வழக்கு, வாய்தா என நீதிமன்றத்தின் படியில் நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

 

சரி அப்படியே அமைச்சர் சொல்லுகிறபடி ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்புவதென்றால் தற்போது காலியாக உள்ள சுமார் 2000 பணியிடங்களுக்கு ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள முப்பதாயிரம் பேர் கருதப்படுவார்கள். வெயிட்டேஜ் முறையிலான கட்ஆப் அடிப்படையில் நியமித்தது போக எஞ்சிய 28000 பேர் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிவிடப்பட்டால் தகுதித் தேர்வை எப்போதுதான் நடத்துவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மேலும் இத்தகைய முடிவுகளால் பாதிக்கப்படுவது இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமல்ல. ஏற்கனவே தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காமல் இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மதிப்பெண்களை அதிகரிக்க நினைத்தவர்களும் தான்.

தனியார் பள்ளிகளில் ‘அட்மிஷன்’: கண்டுகொள்ளாதகல்வி துறை.

தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி, மாணவர் சேர்க்கை நடப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவே, பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர்.
ஆங்கில பேச்சு, மொழியறிவு, பொது அறிவு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தல் போன்றவற்றுக்காக, தனியார் பள்ளிகளை தேடி, பெற்றோர் படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி, பல தனியார் பள்ளிகள், விதிகளை மீறி, அதிக நன்கொடை வசூலிக்கின்றன. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமான விதிகளை பின்பற்றுகின்றன. கல்விக் கட்டணம், நன்கொடை வசூல், விண்ணப்ப கட்டணம், வினியோகம் என, அனைத்திலும், ஒவ்வொரு பள்ளியும், தனி வழியில் செயல்படுகின்றன.

இதற்கு, அரசு தரப்பில், எந்த கண்காணிப்பும் இல்லாததால், எல்.கே.ஜி., அட்மிஷனுக்கே, பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு உள்ளது.இதை பயன்படுத்தி, பல இடைத்தரகர்களும், கல்வித் துறை ஊழியர்களில் சிலரும், தனியார் பள்ளி அட்மிஷனில், வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், பள்ளிக் கல்வி இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்கள் என, யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலைமையை மாற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய பாடத்திட்டத்துக்கு வழி பிறக்குமா?

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல, தை மாதம் பிறந்துள்ள நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வர வழி பிறக்குமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். 
நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர் கல்விக்காக பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிய தொழில் நுட்பம், கண்டுபிடிப்புகள், பாடத்திட்டங்கள் மாற்றம் அடிப்படையில், நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்

படுவதால், நுழைவுத் தேர்வுகளில், ஆந்திரா மற்றும் வட மாநில மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுகின்றனர்.ஆனால், தமிழகத்தில், 2006 முதல் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இன்னும் பழமையான பாடத்திட்டமே பின்பற்றப்படுவதால், நுழைவுத் தேர்வுகளில்,

தமிழக மாணவர்கள் பின் தங்கி உள்ளனர். புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக, தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், பன்னீர்செல்வம் புதிய முதல்வராக, அரசு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, பாடத்திட்ட மாற்றத்திற்கான கோப்பை துாசிதட்டி, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, அவர் அனுமதி அளிப்பார் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்

 

கோடைக்கு முன் தேர்வு: நடுநிலை பள்ளிகள் கோரிக்கை

‘எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்’ என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, 
மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், நடுநிலை பள்ளிகள், அதிக நாட்கள் இயங்குவதால், கோடை வெயில் பாதிப்பில், சின்னஞ்சிறு மாணவர்கள் சிக்கி கொள்கின்றனர். இதை தவிர்க்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை, பரங்கிமலை, ஏ.பி.டி.எம்., நடுநிலை பள்ளி தாளாளர், விக்டர் கிருபாதனம் வெளியிட்ட அறிக்கை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 31க்குள் தேர்வுகள் முடிகின்றன. ஆனால், ஆறு முதல், 14 வயது வரையிலான, சிறு வயது மாணவர்களுக்கு, ஏப்., 30 வரை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதனால், அவர்கள் தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஏப்., 15க்குள் தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், இதே முறை கடைபிடிக்கப்படுகிறது. வேலை நாட்களை சரிசெய்ய, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களை குறைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிருப்தி! கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்… : மறு ஆய்வு செய்யுமாறுஅரசுக்குபரிந்துரை.

புதுடில்லி:’அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது;இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. ‘அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்’ என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு மாற்றாக, நீண்ட கால திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:கல்வி உரிமைச்சட்டம் குறித்து ஆய்வு செய்த, ஆண்டு கல்வி நிலை அறிக்கை, அதன் அவல நிலையை வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் பலருக்கு, தாய் மொழி எழுத்துகள் கூட தெரிய வில்லை; பெருமளவு நிதி முறைகேடு நடைபெறுகிறது. பல மாநிலங்களில், பெயரளவுக்கு தான் திட்டம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி பயிலுவதாக கணக்கு மட்டுமே காட்டப்படுகிறது.ஆனால், அவர்களது கல்வி நிலைமையை சோதித் தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே, இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள பயன் குறித்து முழுமை யாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவையான மாற்றங்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.மோசடி அம்பலம்கல்வி உரிமைச்சட்டத்தின் படி, பல்வேறு மாநிலங் களில்,8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உணவு, பாடப் புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகின்றன; இதில் பெரும் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:போலி ரேஷன் கார்டுகள் மூலம் பொய்யான பெயரில் குழந்தைகளின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இதைத் தடுக்க, கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளி களை, ஆதார் எண் மூலம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறிஉள்ளன.

அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் வெளி யாகியுள்ள பகீர் தகவல்கள்:

* எட்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, தாய் மொழி எழுத்துகள் முழுமையாக தெரியவில்லை
* தங்கள் பெயரைக் கூட எழுத தெரியவில்லை
*ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், 50 சதவீதம் பேருக்கு, தங்கள், 2ம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்கக் கூட முடியவில்லை
* மாணவ, மாணவியருக்கு பெயரளவுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது..

பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘ஆன்லைனில் டிப்ஸ்’

பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், ‘டிப்ஸ்’ வழங்கி, தனியார் பள்ளி ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார்.

தமிழகத்தில், தற்போதைய நடைமுறைகளின் படி, மருத்துவம் படிக்க, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; அதிலும், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறுவது, மிக அவசியம். வேளாண் படிப்பு, விலங்கியல் படிப்புக்கும், உயிரியல் மதிப்பெண்கள் முக்கியம்.

இந்நிலையில், உயிரியல் பாடத்தை மாணவர்கள் புரிந்து படித்து, அதிக மதிப்பெண்கள் பெற வசதியாக, சென்னை, புரசைவாக்கம், எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர், சவுந்தர பாண்டியன், ஆன்லைனில் மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கிறார்.முக்கிய பாடங்கள், தாவரங்கள், விலங்குகளின் அறிவியல் பெயர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், விடைகளை எழுதும் முறை என, பல தகவல்களை, ‘வாட்ஸ் ஆப், பேஸ் புக்’ மற்றும் rspbiology@gmail.com என்ற, இ – மெயில் மூலமும், இலவசமாக பகிர்ந்து வருகிறார்.

இது குறித்து, சவுந்தர பாண்டியன் கூறியதாவது: சென்னையை தவிர, மற்ற மாவட்ட மாணவர்களுக்கும், தரமான பயிற்சி முறை தேவை என்பதால், ஆன்லைன் பயிற்சியை இலவசமாக நடத்துகிறேன். மாணவர்களின், இ – மெயில் முகவரி, வாட்ஸ் ஆப் எண்களை அளித்தால், அவர்களுக்கு, படங்களுடன் குறிப்புகள், ‘பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்’ பைல்கள் போன்றவற்றை, இலவசமாக அனுப்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.